மு.இ.உமர் அலி-
சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலையின் வளங்கள் வீணாகிக்கொண்டிருக்கின்றன. எமது பிரதேச மக்கள் பிரதேச வேறுபாடுகளை மறந்து அரசின் சேவைகளை பெற்றுக்கொள்ள முன்வர வேண்டும்.அந்த அடிப்படையில் மிக விரைவில் சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலையை மத்திய அரசாங்கத்தின் கீழுள்ள கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையுடன் இணைத்து இப்பிராந்தியத்திற்கு மிகவும் இன்றியமையாததும் தேவையானதுமான எலும்புமுறிவு மற்றும் சத்திரசிகிச்சைக்கான விசேட பிரிவினை ஸ்தாபிப்பதற்கான பூர்வாங்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. (ORTHOPEDIC SURGERY UNIT)
கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் தலைமயிலான குழுவினரையும், சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலை அபிவிருத்துக்குழு, மற்றும் சாய்ந்தமருது மரைக்கார் சபையினரையும் தனித்தனியாக சந்தித்த பிரதி சுகாதார அமைச்சர் இருதரப்பினருடனும் கலந்துரையாடினார்.
அதற்கிணங்க இரு தரப்பினரும் குறித்த சாய்ந்தமருது வைத்தியசாலையை கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையுடன் இணைக்க இருதரப்பினரும் சம்மதம் தெரிவித்துள்ளனர். இதனால் நன்மையடைய இருப்பது இப்பிராந்திய மக்களே அன்றி பிரதேசவாதம் பேசும் அரசியல்வாதிகளல்ல என்பதை மக்கள் புரிந்தகொள்ள வேண்டும்.
ஏற்கனவே சாய்ந்தமருதில் இருக்கின்ற பயன்படுத்தப்படாத சத்திரசிகிச்சை கூடத்தினை நவீன முறையின்கீழ் வடிவமைத்து, படப்பிடிப்புக்கான பிரிவினையும் நவீனமயப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பிரதியமைச்சர் பைசால் காசீம் குறிப்பிட்டார்.
அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சிறுநீரக செயலிழப்பு நோயாளிகளிற்கான இரத்தம் சுத்திகரிக்கும் நிலையத்தை (DIALYSIS UNIT) இன்று காலை உத்தியோகபூர்வமாக திறந்துவைத்ததன் பின்னர் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் மேற்கூறியதகவல்களை வெளியிட்டார்.
தொடர்ந்து அந்நிகழ்வில் உரையாற்றிய பிரதியமைச்சர் ‘எமது தேவைகளை இருக்கின்ற வளங்களுடன் தொடர்புபடுத்தி நாம் நிறைவேற்றிக்கொள்ள பழக வேண்டும். அவ்வாறு செய்தால் மட்டுமே எமது தேவைகளை நாம் படிப்படியாக பூர்த்திசெய்துகொள்ளலாம்.கிழக்குமாகாணத்தின் அனைத்துப் பிரதேசங்களிலும் உள்ள வைத்தியசாலைகளையும் சிறந்த நோயாளர் பராமரிப்பு நிலையங்களாக மாற்றுவதன்மூலம் மக்களுக்கு உயர்தரமான சுகாதார சேவையை பெற்றுக்கொடுப்பது எனது பிரதான இலக்காகும் எனவும் குறிப்பிட்டார்.
அமைச்சர் குறிப்பிட்டபடி சாய்ந்தமருது வைத்தியசாலையில் எலும்பு முறிவு சிகிச்சை பிரிவு ஆரம்பிக்கப்ப்படுமாக இருந்தால் கரையோரப் பிராந்திய மக்களுக்கு அது மிகவும் பாரியதோர் வரப்பிரசாதமாக இருக்கும், ஏனெனில் இப்பிரதேச வைத்தியசாலைகளில் இப்பிரிவு இல்லாமையால், மட்டக்களப்பு, அம்பாறை, பதுளை போன்ற தூர இடங்களிலுள்ள வைத்தியசாலைகளுக்கே நோயாளர்கள் மாற்றம் செய்யப்படுகின்றனர். இதனால் மக்களது, காலம், பணம் என்பன விரையமாவதுடன் வீணான அலைச்சலும் ஏற்படுகின்றது என்பது இங்கு கோடிட்டுக்காட்டவேண்டிய விடையமாகும்.