கட்சி ஆதரவாளர்களுக்கான கலந்துரையாடல் கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற போது அவர் மேலும் தெரிவித்ததாவது
இன்று முகநூல்களில் சில முஸ்லிம்கள் சில விடயங்களை பதிவிட்டுள்ளனர். அதாவது பள்ளி ஸ்பீக்கர் சத்தத்தை குறைப்பது, வீதியில் சத்தமின்றி பேசுதல் போன்றவற்றை குறைப்பதன் மூலம் சிங்கள இனவாதத்தை குறைக்கலாம் என. எப்படியாவது முஸ்லிம்களுக்கெதிரான இனவாதம் குறைய வேண்டும் என்ற ஆர்வத்தில் இதனை பதிவிடுகின்றனர். நல்லதுதான். ஆனால் எமக்கென்னவோ இவற்றை பார்க்கும் போது முஸ்லிம் சமூகம் உள ரீதியாக மிக மோசமான அடிமைத்தளத்திற்குள் ஆட்பட்டுள்ளது என்றே தெரிகிறது.
ஒரு காலத்தில் இந்த நாட்டின் தமிழ் சமூகம் தனி நாட்டுக்காக போராடிய போது ஏற்பட்ட கலவரங்களால் தமிழ் பெண்கள் தலைநகரில் பொட்டு வைப்பதை குறைத்துக்கொண்டனர். சாறி அணிதல், கோயில் விழாக்களை வீதிக்கு கொண்டு வருதல் என்பன அச்சம் காரணமாக குறைத்திருந்தனர். பின்னர் மஹிந்த காலத்தில் யுத்தம் முடிவுற்ற பின்னரே தலைநகர தமிழ் மக்கள் சுதந்திரத்தை கண்டனர்.
அதே போல் மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில் பொதுவாக ஸ்பீக்கர் பாவிப்பது தடை என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதன் போது என்னை தவிர முழு முஸ்லிம் சமூகமும் இதனை எதிர்த்தது. காரணம் அந்த சட்டத்தை மஹிந்தவின் ஆட்சியில் கொண்டு வந்ததுதான். அதே சட்டம் ஐ தே கவின் இன்றைய ஆட்சியில் கொண்டு வந்திருந்தால் முஸ்லிம்கள் தலை மீது வைத்து போற்றியிருப்பர்.
உண்மையில் அந்த சட்டம் பொதுவானது. யாரும் எந்த மதமும் தமது மத ஸ்தலத்தில் குறிப்பிட்ட அளவு தவிர ஸ்பீக்கர் பாவிக்க முடியாது.
இந்த சட்டத்துக்கெதிராக முஸ்லிம் காங்கிரசும், ஐ தே கவின் முஜிபுர்ரஹ்மான் போன்றவர்களும் மிகக்கடுமையாக எதிர்த்து நின்றதால் மஹிந்த ராஜபக்ஷ இச்சட்டத்தை அமுல் படுத்துவதில் தளர்வை ஏற்படுத்தினார். அதன் விளைவு. இன்று அனைத்து மதஸ்தலங்களிலும் கம்பீரமாக ஸ்பீக்கர் பாவிக்கப்படும் போது முஸ்லிம்கள் தம்மை சுதந்திரமற்ற அடிமைகளாக காட்ட வேண்டி ஏற்பட்டுள்ளது. மேற்படி ஒலி பெருக்கி தடை சட்டம் சகலருக்கும் பொதுவாக அமுல் படுத்தப்பட வேண்டும் என்பதை மீண்டும் கூறுகிறோம்.
இன்று முஸ்லிம் சமூகம் எதிர் நோக்கும் இனவாத பிரச்சினையின் காரணங்களையும் அதற்கான வேர்களையும் புரிந்து கொள்ளாமல் நம்மை எத்தனை தூரம் அடிமைகளாக நாம் காட்டிக்கொண்டாலும், நமது தொப்பி, பர்தாக்களை துறந்தாலும் இனவாத விளைவுகளை குறைக்க முடியாது என்பதே யதார்த்தம். இத்தகைய இனவாதிகள் பின்னால் வெளிநாடுகளும் அரசியல் அதிகாரம் படைத்தவர்களும், நிறைய வெளிநாட்டு பணமும் இருக்கின்றன என்பதுடன் பிரச்சினைகளை உருவாக்கி அவற்றை தீர்த்து வைக்க தாமே உரியவர்கள் என காட்டி செயற்படும் சில முஸ்லிம்களும் இவற்றின் பின்னால் உள்ளனர் என்பதையும் நாம் முதலில் புரியாத வரை இவற்றை தீர்க்க முடியாது. இது விடயத்தில் உலமா கட்சி மட்டும் மிக தெளிவான கருத்துக்களை சமூகத்துக்கு சொல்லி வந்துள்ளதுடன் செயலிலும் காட்டியுள்ளது. ஆனாலும் சமூகம் எமது கட்சி பணக்கார கட்சியா, அதிகாரம் கொண்ட கட்சியா என்று பார்த்தே எம் கருத்தை ஏற்போம் என்ற நிலையில் இருக்கிறது. ஆனாலும் நாம் சமூகத்தை விழிப்பூட்டும் எம் கடமையை செய்து வருகிறோம்.