க.கிஷாந்தன்-
அக்கரபத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஊட்டுவெளி தோட்டத்தில் மிகவும் வறுமைக்கோட்டில் வாழ்ந்து வந்த குடும்பத்தில் ஜீவனதாரமாக இருந்த பசுமாடு வைத்தியரின் கவனயீனத்தினால் உயிரிழந்ததாக கோரி ஊட்டுவெளி தோட்ட மக்கள் வைத்தியரின் வாகனத்தினை 08.05.2017 அன்று சுற்றி வளைத்துள்ளனர்.
ஊட்டுவெளி தோட்டத்தில் வசிக்கும் குடும்பத்தில் ஆறு அங்கத்தவர்களை கொண்ட கருப்பையா புகேந்திரன் தனது மாடு வளர்ப்பினையே நம்பியிருந்தவர். இவரது பசு மாடு 06.05.2017 அன்று கன்று ஈன்றுள்ளதுடன் 07.05.2017 அன்று பசுமாடு சுகயீனம் அடைந்திருப்பதை அறிந்த புகேந்திரன் 08.05.2017 அன்று காலை அக்கரபத்தனை கால்நடை வைத்தியருக்கு அறிவித்துள்ளார்.
வைத்தியர் எட்டு மணிக்கு வருவதாக தெரிவித்துள்ளார். எனினும் வைத்தியர் எட்டு மணிக்கு வரவில்லை. அவர் 11.00 மணிக்கே வந்துள்ளார். இந்நிலையில் வைத்தியர் வருவதற்கு 30 நிமிடத்திற்கு முன் பசுமாடு உயிரிழந்துள்ளது.
இதனால் ஆத்திரமுற்ற பசுமாட்டு உரிமையாளர்களும், அயலவர்களும் வைத்தியரின் வாகனத்தினை சுற்றி வளைத்து மாட்டின் பெறுமதி இரண்டு லட்சம் தந்து போகுமாறு சுற்றி வளைத்ததையடுத்து அங்கு பதற்ற நிலை உருவாகியது.
இதனை தொடர்ந்து அங்கு பொலிஸார் வரவழைக்கப்பட்டு பொலிஸார் இது குறித்து விசாரணை செய்து நியாயத்ததை பெற்றுத்தருவதாக தெரிவித்ததையடுத்தே பிரதேசவாசிகள் வைத்தியரை செல்ல அனுமதித்தனர்.
இதேவேளை பசுமாட்டின் பாலின் வருமானத்திலே வாழ்ந்து வந்தாகவும் இதை தவிர வேறு வருமான இல்லையெனவும் குடும்ப உறவினர்கள் அழுது புலம்பினர்.