சில அரசியல்வாதிகள் தாங்கள் மக்களுக்காக போராடுவதாக காட்டிக்கொண்டு மக்களுக்கும், ஊடகங்களுக்கும் முன்பாக மட்டும் வீரவசனம் பேசுவார்கள். மக்களது பிரச்சினைகளின் நியாயத்தன்மை ஆட்சித் தலைவர்களுக்கு விளங்குவதில்லை. அல்லது விளங்கப்படுத்தப் படுவதில்லை. எப்படித்தான் போராட்டங்கள் நடாத்தினாலும் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குபவர்கள் அதிகாரம் உள்ள ஆட்சி தலைவர்கள் மட்டுமே.
ஆனால் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் மேலே சொன்ன அரசியல்வாதிகளில் இருந்து வேறுபட்டவர். ஊடகங்களுக்கும், மக்களுக்கும் முன்பாக ஒருபோதும் அவர் போராட்டம் நடாத்த விரும்புவதில்லை. மாறாக யாரிடம் ஆட்சி அதிகாரம் உள்ளதோ அவர்களுக்கு முன்பாகவே தனது போராட்டத்தினை அன்று தொடக்கம் இன்று வரைக்கும் முன்னெடுத்து வருகின்றார்.
இதில் வெற்றிகளும் உண்டு. அதே போல தோல்விகளும் உண்டு. ஆனால் தாங்கள் போராடுவதாக மக்களுக்கு முன்பாக நடிக்கின்றவர்களின் வெற்றுக்கோசம் ஒருபோதும் வெற்றிபெற போவதில்லை. இது வேடம்தரிக்கும் அரசியல்வாதிகளுக்கு தெரிந்த விடயமாகும். ஆனால் அப்பாவி மக்களுக்கு இது புரியாது.
அந்தவகையில் அமைச்சர் ரவுப் ஹக்கீம் அவர்களின் நீண்டகால போராட்டங்களின் விளைவாக முசலி பிரதேசத்தில் அமைந்துள்ள சிலாவத்துறை கடப்படையினர்களின் முகாம் அகற்றும் பணி படையினர்களால் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதற்காக அவர்களது முகாமினை சுற்றி அமைந்துள்ள முல்கம்பிகளை அகற்றி அப்புறப்படுத்தும் பணிகளை ஆரம்பித்துள்ளார்கள்.
இது நீண்ட காலமாக பாராளுமன்றத்திலும், கடந்தகால ஜனாதிபதிகள், பிரதமர்கள் ஆகியோர்களுடன் முஸ்லிம் காங்கிரசும், தமிழ் தேசிய கூட்டமைப்பும் நடத்திய போராட்டத்துக்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகும்.
விடுதலைப் புலிகளிடமிருந்து மன்னார் மாவட்டத்தின் முசலி பிரதேசம் மீட்கப்பட்ட பின்பு அப்பிரதேசத்தின் முள்ளிக்குளம், சிலாவத்துறை ஆகிய பிரதேசங்களில் பொது மக்களின் காணிகளில் கடற்படையினர் முகாம் அமைத்திருந்தார்கள்.
இந்த முகாமிலிருந்து படையினர்களை வெளியேற்றி அந்த நிலங்களை பொது மக்களிடம் கையளிக்குமாறு 2009 தொடக்கம் இன்று வரையில் சுமார் இருபத்தி ஐந்து தடவைகள் தலைவர் ரவுப் ஹக்கீம் அவர்கள் பாராளுமன்றத்தில் உரையாற்றியது, பாராளுமன்ற ஹன்சாட்டில் பதிவாகியிருக்கின்றது.
அதுபோல் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களும் இந்த விவகாரம் தொடர்பாக அதிக தடவைகள் பாராளுமன்றத்தில் உரையாற்றியதுடன், மக்கள் போராட்டங்களையும் நடாத்தி இருந்தார்கள்.
ஆனால் இந்த பிரச்சினைக்கு உரிய தீர்வினை வழங்கி நீதியினை நிலைநாட்டாமல் சாட்டுப்போக்கு கூறி அரசாங்கம் காலத்தை கடத்தி வந்தது.
இருந்தாலும் அண்மைக்காலமாக தமிழ் தேசிய கூட்டமைப்பும், முஸ்லிம் காங்கிரசும் இணைந்து அரசாங்கத்துக்கு வழங்கிய தொடர் அழுத்தங்கள் காரணமாக கடந்த 30.04.2017 இல் முள்ளிக்குளத்தின் ஒரு பகுதியிலிருந்து கடற் படையினர்கள் வெளியேறி அந்த நிலங்களை பொதுமக்களிடம் கையளித்திருந்தனர்.
கடந்த 28.04.2017 இல் அமைச்சர் ரவுப் ஹக்கீம் அவர்கள் ஜனாதிபதியை சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தியபோது, மிக விரைவில் சிலாவத்துறை கடற்படை முகாம் பொது மக்களிடம் கையளிக்கப்படும் என்ற உத்தரவாதத்தினை ஜனாதிபதி வழங்கியிருந்தார். அந்த ஜனாதிபதியின் உத்தரவாதத்துக்கு அமைய இன்று சிலாவத்துறை முகாம் அகற்றுவதற்கான முதல் கட்ட வேலைகளை கடற்படையினர்கள் ஆரம்பித்துள்ளார்கள்.
சிலாவத்துறையில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பொது மக்களின் காணிகள் தொடர்பான ஆவணங்கள் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாரூக் அவர்களினால் ஒன்று திரட்டப்பட்டு ஜனாதிபதியிடம் சமர்ப்பிப்பதற்காக கடந்த 27.04.2017 இல் முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அவர்களிடம் கையளிக்கப்பட்டது.
எனவேதான் மக்களின் பிரச்சினைகளை முதலில் உரிய அதிகாரிகளுடன் அல்லது ஆட்சியாளர்களுடன் பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வினை பெற்றுக்கொள்ள முயற்சிக்க வேண்டும். அப்படியான பேச்சுவார்த்தைகள் தோல்வி அடைகின்றபோதுதான் மக்கள் போராட்டத்தினை பற்றி சிந்திக்க வேண்டும்.
ஆனால் ஆட்சி தலைவர்களுடன் இந்த முள்ளிக்குளம், சிலாவத்துறை சம்பதமாக எந்தவித பேச்சுவார்த்தைகளும் நடாத்தி பிரச்சனைகளை விளங்கப்படுத்தாமல், மக்களிடம் தன்னை ஒரு ஹீரோவாக காட்டிக்கொள்வதற்காக மட்டும் போராட்டம் என்ற போர்வையில் நடாத்துகின்ற ஏமாற்றத்தின் மூலம் எந்தவித தீர்வுகளும் மக்களுக்கு கிடைக்கப்போவதில்லை.
இதற்காகத்தான் கூறுவது எங்களுக்கு சிலுசிலுப்பு தேவையில்லை பணியாரம்தான் தேவை என்பதாகும். இதனைத்தான் அமைச்சர் ரவுப் ஹக்கீம் செய்துவருகின்றார்.
முகம்மத் இக்பால்,
சாய்ந்தமருது.