காரைதீவு நிருபர் சகா-
வடக்கு – கிழக்கு – ஊவா ஆகிய 03 மாகாணங்களையும் யாழ்ப்பாணம் கிளிநொச்சி முல்லைத்தீவு திருகோணமலை மட்டக்களப்பு அம்பாறை மொனராகலை ஆகிய ஏழு மாவட்டங்களை இணைக்கும் 52 நாட்கள் 572 கி.மீற்றர் தூரம் கொண்ட இலங்கையின் மிக நீண்ட கதிர்காமப் பாதயாத்திரை வேல்சாமி மகேஸ்வரன் தலைமையில் இன்று 29ஆம் திகதி திங்கட்கிழமை காரைதீவில் வழியனுப்புகின்ற பாரம்பரியசடங்குடன் ஆரம்பமாகின்றது.
வேல்சாமி மகேஸ்வரன் காரைதீவைச்சேர்ந்தவரென்பதால் இன்று 29ஆம் திகதி திங்கட்கிழமை காரைதீவு நந்தவன சித்தி விநாயகர் தேவஸ்தானத்திலிருந்து வழமைபோல விசேடபூஜையுடன் ஆலயத்தலைவர்கள் உள்ளிட்ட ஆன்மீகச்சமுகம் அவரை வழியனுப்புகின்ற பாரம்பரிய சடங்கு இடம்பெறவிருக்கின்றது. அவர் நாளை காரைதீவிலிருந்து சில அடியார்களுடன் பேருந்தில் யாழ்ப்பாணத்திற்கு பயணித்து மறுகாலை சென்றடைந்து செல்வச்சந்நிதி ஆலயத்தில் தங்குவார்.
அங்கிருந்து எதிர்வரும் யூன்மாதம் 03ஆம் திகதி யாழ்ப்பாணம் செல்வச்சந்நிதி முருகனாலயத்திலிருந்து விசேட பூஜை புனஸ்காரங்களுடன் கதிர்காமத்திற்கான இப்பாதயாத்திரை உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகவுள்ளது என பாதயாத்திரைக்குழுவினர் தெரிவித்தனர்.
பாடசாலை செல்லும் மாணவர்கள் இப்பாதயாத்திரையில் பங்குபற்றமுடியாது.ஆண்கள் காவிநிறவேட்டியும் பெணண்கள் காவிநிற சாறியும் உடுத்துவரல் வேண்டும்.குறிப்பாக ஆண்கள் மேலாடை அணிதல்கூடாது. பாதயாத்திரையில் பங்கேற்கும் போது பக்திமுக்தியாக பலந்துகொள்ளும் அதேவேளை பஞ்சமாபாதகங்களில் கண்டிப்பாக ஈடுபடுதல்கூடாது. கலந்துகொள்ளவிரும்புவோர் 0773483437 என்ற இலக்கத்துடன் தலைவர் வேல்சாமியோடு தொடர்புகொள்ளலாமென குழுவினர் தெரிவித்தனர்.
ஆடிவேல்விழா உற்சவம்
மூவின மக்களும் பேதமின்றி தரிசிக்கும் புனிதபூமியாம் கதிர்காமத்திருத்தலத்தின் வருடாந்த ஆடிவேல்விழா உற்சவம் எதிர்வரும் யூலை 23ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி ஆகஸ்ட் 08ஆம் திகதி தீர்த்தோற்சவத்துடன் நிறைவடையவுள்ளது.
இந்த ஆடிவேல்விழாவையொட்டி இடம்பெறும் பாதயாத்திரை என்பது மிகவும் முக்கியமாகக்கருதப்படுகிறது.
வருடமொன்றுக்கு யால காட்டினூடாக சராசரி 40ஆயிரம் முதல் 50ஆயிரம் அடியார்கள் வரை நடந்து கதிர்காமத்திற்கு சென்று வருவதுண்டு. யுத்தம் நிலவிய காலப்பகுதியிலும்கூட பாதுகாப்புக்கெடுபிடிகள் பதிவுகள் மத்தியிலும் அடியார்கள் சென்று வந்திருந்தனர்.
பாதயாத்திரை சுருக்கம்!
எதிர்வரும் யூன்மாதம் 03ஆம் திகதி யாழ்ப்பாணம் செல்வச்சந்நிதி முருகனாலயத்திலிருந்து இப்பாதயாத்திரை ஆரம்பமாகவுள்ளது. இவர்கள் கொடிகாமம் முரசுமோட்டை முள்ளிவாய்க்கால் ஊடாக யூன் 10ஆம் திகதி முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகைஅம்மனாலயத்தைச்சென்றடையும்.
அங்கிருந்து அவர்கள் கொக்கிளாய் புல்மோட்டை ஊடாக யூன் 26ஆம் திகதி திருகோணலையைச்சென்றடைவர். மேலும் கிளிவெட்டி வந்தாறுமூலை ஊடாக குழுவினர் யூலை 2ஆம் திகதி மட்டக்களப்பை வந்தடைவர். மீண்டும் அவர்கள் களுவாஞ்சிக்குடீ மண்டுர் கல்முனை ஊடாக யூலை 8ஆம் திகதி காரைதீவை வந்தடைவர். அங்கிருந்து அக்கரைப்பற்று திருக்கோவில் பொத்துவிலூடாக யூலை 15ஆம் திகதி திகதி உகந்தைமலை முருகனாலயத்தை அடைவார்கள்.
பின்னர் யாலகாட்டுப்பாதைக்குள் பிரவேசித்து குமுக்கன் நாலடி வியாழை கட்டகாமம் வீரச்சோலை செல்லக்கதிர்காமம் ஊடாக யூலை 22ஆம் திகதி கதிர்காமத்தைச் சென்றடைவார்கள். யூலை 23ஆம் திகதி இடம்பெறும் கொடியேற்ற த்தில் அவர்கள் பங்கேறற்பார்கள். பின்பு ஆகஸ்ட் 8ஆம் திகதி நடைபெறும் தீர்த்தம்வரை அங்கு தங்கியிருந்து தீர்த்தமாடி வீடு திரும்புவார்கள்.