எம்.எஸ்.எம்.ஸாகிர்-
முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை மும் மொழியிலும் எடுத்துச் சொல்வதற்கான ஊடகங்களை உருவாக்குவது காலத்தின் தேவையாகவுள்ளது. இதற்கு வர்த்தக சமூகத்தவர்களும் வசதி படைத்தவர்களும் உதவுவதற்கு முன்வரவேண்டும் என நவமணிப் பத்திரிகையின் பிரதம ஆசிரியரும் முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவருமான என். எம். அமீன் அறைகூவல் விடுத்தார்.
ஜம்மியத்துஷ் ஷபாப் நிறுவனமும் நவமணிப் பத்திரிகையும் இணைந்து நடத்திய ரமழான் பரிசுமழை விழா வெள்ளிக்கிழமை (05) மாலை ஜம்மியத்துஷ் - ஷபாப் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற போது தலைமை வகித்து உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர் கூறியதாவது,
நாட்டின் முஸ்லிம் சமூகத்தவருடைய இஸ்லாமிய சிந்தனையை குறிப்பாக இளைய தலைமையினுடைய இஸ்லாமிய ஆற்றலை மேம்படுத்தும் நோக்கிலே இந்தப் போட்டிகளை நடத்துகின்றோம். அஷ்-ஷபாப் நிறுவனம் எங்களோடு கைகோர்த்து அவர்களே கேள்விகளைத் தயாரித்து அதனைத் திருத்துகின்ற பணிகளையும் மற்றும் போட்டியாளர்களையும் தெரிவு செய்கிறார்கள். இதற்காக பரிசுகளை வழங்குவதற்காக பல சகோதரர்கள் முன்வந்திருக்கிறார்கள். அதில் முக்கியமாக முதற்பரிசாக புனித உம்ரா செல்வதற்கான வாய்ப்பை மௌலானா ரவல்ஸ் வழங்கி இருக்கின்றார்கள்.
அடுத்து வட்டியில்லா வங்கியை செயற்படுத்திவரும் அமானா வங்கி ரமழான் வெற்றியாளர்களுக்கான சகல ஆறுதல் பரிசுகளையும் வழங்கி வருகின்றார்கள். மற்றும் பல சகோதரர்களும் ரமழான் பரிசு மழையில் தங்களது பங்களிப்பை வழங்கி இருக்கின்றார்கள். அவர்கள் அனைவருக்கும் நவமணி சார்பாக எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
நவமணி இந்த நாட்டினுடைய முஸ்லிம் சமூகத்துக்காக முஸ்லிம்களால் வெளியிடப்படுகின்ற ஒரே பத்திரிகை. நாங்கள் 21ஆவது வருடத்திலே காலடி எடுத்து வைத்திருக்கின்றோம். நாட்டில் முஸ்லிம்களுக்காக பத்திரிகை இல்லை. முஸ்லிம்களுக்கான ஒரு தனியான ஊடகம் இல்லை.
நீண்ட காலப் போராட்டத்திற்குப் பிறகு நவமணி தினசரிப்பத்திரிகையாக வெளிவந்து கொண்டிருக்கின்றது. முஸ்லிம் சமூகத்துக்காக குரல் கொடுக்க, அபிலாஷைகளை வென்றெடுக்க, இந்த சமூகத்துடைய தேவைகள் சம்பந்தமாக மற்றவர்களுக்கு எடுத்துக் கூற, முஸ்லிம் சமூகத்தவர்களால் நடத்தப்படுகின்ற ஒரே பத்திரிகையாகும். ஆனாலும் பல தியாகங்களுக்கு மத்தியில் 21 வருடங்களைக் கடந்து வந்திருக்கின்றோம். இந்தப் பணிணிலே அமைச்சர் றிஷாத் பதியுதீன் எவ்வித எதிர்ப்பார்ப்புக்களும் இல்லாமல் யாரும் செய்யாத நிறைய உதவிகளைச் செய்து வந்திருக்கிறார் என்பதை நான் இந்தச் சந்தர்ப்பத்திலே நினைவு கூருகின்றேன்.
தொழில் அதிபர். ரீ.எல்.எம். இம்தியாஸ், நெருக்கடியாக நாங்கள் இருந்த கட்டத்திலே இந்தப் பத்திரிகையை எடுத்துச் செல்வதற்கு அவர் அளித்த பங்களிப்பை நவமணி சார்பிலே நன்றியோடு நினைவு கூருகிறேன்.
1882 ஆம் ஆண்டு அறிஞர் சித்திலெப்பை முஸ்லிம் நேஷனை உருவாக்கினார். அது நூற்றாண்டு கடந்தும் இன்றும் நினைவு கூரப்பட்டுக் கொண்டிருக்கின்றது. காரணம். இந்த சமூகத்துக்கு நன்மை செய்கின்ற ஊடகத்துக்கு அவர் பங்களிப்புச் செய்ததன் காரணத்தால். அன்று முதல் இன்று வரை எத்தனையோ தனவந்தர்கள் இருந்தாலும் அவர் நினைவு கூரப்படுகிறார்கள் இல்லை.
இன்று வில்பத்துவிலே முஸ்லிம் மக்கள் தங்களது பாரம்பரியக் காணிகளை இழந்து வீதியில் இறங்கிப் போராடுகிறார்கள். இவற்றை சரியாக விளக்கிச் சொல்வதற்கு முஸ்லிம்கள் கைவசம் ஒரு ஊடகம் இல்லாதிருக்கின்றது.
இன்று இலங்கையில் 49 வானொலிகள், 21 தொலைக்காட்சிகள், 19 தினசரிப் பத்திரிகைள் இருந்தும் இன்று முஸ்லிம்களுடைய கைவசம் ஒரு தனியான ஊடகம் இல்லாமல் இருக்கின்றது. மிகுந்த சிரமத்தின் மத்தியில்தான் நவமணிப் பத்திரிகையை நாங்கள் முன்னெடுத்து சென்று கொண்டிருக்கின்றோம். இந்த நாட்டிலே முஸ்லிம்களுக்கு நடக்கின்ற அநீதிகள், அட்டூழியங்களை வெளிஉலகுக்குத் தெரியப்படுத்த வேண்டுமென்றால் முஸ்லிம்கள் மத்தியிலே தனியான ஒரு ஊடகம் இருக்க வேண்டும். அந்தப் பணியைச் செய்வதற்காக வேண்டித்தான் நவமணி அதற்கான பணியைச் செய்துவருகின்றது.
சமூகத்தின் பிரச்சினைகளை உரத்துப் பேசுவதற்கு தனியான ஊடகம் ஒன்று கட்டாயம் தேவைப்படுகின்றது. அப்போதுதான் முஸ்லிம்களின் உண்மையான பிரச்சினை என்பது என்பது வெளிஉலகுக்குத் தெரியவரும்.
ஆங்கில மொழியில் முஸ்லிம்களின் பிரச்சினையை எடுத்துக் கூற ஒரு சிறு பத்திரிகையாவது ஆரம்பிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
நவமணிப் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் என்.எம். அமீன் தலைமையிலும் நவமணிப் பத்திரிகையின் முகாமைத்துவப் பணிப்பாளர் எம்.கே.எம்.றிஸ்வியின் வழிகாட்டலிலும் நடைபெற்ற இவ்விழாவில், பிரதம அதிதியாக வர்த்தக கைத்தொழில் அமைச்சர் றிஷாத் பதியுதீன் கலந்து கொண்டார்.
நிகழ்வில் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் ஷகீல் ஹுசைன், முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம். அஸ்வர், அஷ்-ஷபாப் நிறுவனத்தின் பணிப்பாளர் மௌலவி ரஷீட், ஜம்மியத்துஷ் - ஷபாப் நிறுவனத்தின் பிரதிப் பணிப்பாளர் எம்.எஸ்.எம்.தாஸிம், தொழில் அதிபர் இம்தியாஸ், மௌலானா ரவல்ஸ் பணிப்பாளர் ஹாமீட் மௌலானா, பிரபல அறிவிப்பாளர் ஏ.ஆர்.எம். ஜிப்ரி, முன்னாள் முஸ்லிம் சேவைப்பணிப்பாளர் அஹ்மத் முனவ்வர், புரவலர் ஹாஷிம் உமர் உட்பட கல்விமான்கள், புத்திஜீவிகள், ஊடகவியலாளர்கள், நவமணி ஊழியர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
நவமணியின் ஆசிரியர் பீட சிரேஷ்ட உறுப்பினர் காவ்யாபிமானி கலைவாதி கலீலினால் கவிதை ஒன்றும் நிகழ்வில் வாசிக்கப்பட்டது. அத்தோடு முதல், இரண்டாம், மூன்றாம் பரிசுகளோடு, 22 ஆறுதல் பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டதோடு, கட்டுரைப் போட்டியில் 1ஆம் 2ஆம் 3ஆம் இடத்தைப் பெற்றவர்களுக்கு பணப்பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
நன்றியுரையை நவமணி செய்தி ஆசிரியர் எம்.எஸ்.எம். சாஜஹான் நிகழ்த்தியதோடு, நிகழ்வை நவமணி ஆசிரியர் பீட உறுப்பினர் கியாஸ் புஹாரி தொகுத்து வழங்கினார்.