பாறுக் ஷிஹான்
முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல் பின்னணியில் யார் யார் இருக்கிறார்கள் என தெரிந்தும் அரசாங்கம் அவர்களை கைது செய்ய எது விதமான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
முஸ்லிம் மக்களுக்கு எதிராக வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. 30 வருட போரினால் தமிழ் மக்களை அழித்து அவர்களின் உரிமைப்போராட்டத்தினை முடக்கியுள்ள நிலையில் அடுத்ததாக இருக்கின்ற சிறுபான்மை இனத்தவரான முஸ்லிம்களை குறிவைக்கின்றார்கள்.
முன்னாள் ஐனாதிபதி மகிந்த ராஜபக்சவின் காலத்திலும் முஸ்லிம்களுக்கு எதிராக தாக்குதல்கள் நடந்தேறின. அப்போது அதற்கு காரணம் மகிந்த ராஜபக்ச என கூறினோம். தற்போது நல்லாட்சியிலும் தாக்குதல்கள் இடம்பெறுகின்றன இதற்கு காரணம் மைத்திரிபால சிறிசேனஇ ரணில் என தனிநபர்களிடம் குற்றம் சாட்டிவிட முடியாது.
இது ஒட்டுமொத்த அரசாங்கத்தின் பிரச்சினை.தமிழ் மக்களுக்கு எதிராக வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டபோது முஸ்லிம் தலைவர்கள் எமக்கு உறுதுணையாக நிற்கவில்லை.
அவர்கள் ஒதுங்கி நின்றார்கள் அல்லது அரசாங்கத்தோடு சேர்ந்து நின்றார்கள். அவர்களுக்கே இன்று பிரச்சனை எனில் நாம் சிந்திக்க வேண்டும். 1980 களில் தமிழர்கள் பொருளாதார ரீதியாக எவ்வாறு பலம்பெற்று இருந்தார்களோ அது போலவே தற்காலத்தில் முஸ்லீம்கள் நாட்டின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறார்கள்.
இது சிங்கள பேரினவாதத்தின் இருப்பை அழித்துவிடும் என கருதியே முஸ்லீம்களுக்கு எதிரான வன்முறைகள் துண்டப்பட்டுள்ளன.
முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல் பின்னணியில் யார் யார் இருக்கிறார்கள் என தெரித்தும் அரசாங்கம் அவர்களை கைது செய்ய எதுவிதமான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. எனவே தான் அரசியல் ரீதியாக தமிழ் தலைமைகளோடு முஸ்லிம் தலைமைகள் ஒரு இணக்கப்பாட்டிற்கு வரவேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.