பலஸ்தீன சிறைக்கைதிகளின் உண்ணாவிரத போராட்டத்துக்கு ஆதரவைத் தெரிவிக்கும் வகையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் இன்று கையெழுத்திட்டார். பலஸ்தீன சிறைக்கைதிகளின் உண்ணாவிரத போராட்டத்துக்கு ஆதரவைத் தெரிவிக்கும் வகையில் கையொப்பம் பெறும் வேலைத்திட்டம் தற்போது பலஸ்தீன் தூதரகத்தில் இடம்பெறுகின்றது.
பலஸ்தீன சிறைக் கைதிகள் தினம் ஏப்ரல் மாதம் 17 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுகிற நிலையில் அதனை முன்னிட்டு இவ்வருடம் குறித்த தினத்திலிருந்து 1,500 பலஸ்தீன கைதிகள் சிறையிலுள்ள பலஸ்தீன் பாராளுமன்ற உறுப்பினர் மர்வான் பர்கூதி தலைமையில் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் உலகளாவிய ரீதியில் கையெழுத்து சேகரிக்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இக்கையொப்பம் பெறும் வேலைத்திட்டம் நேற்றும் இன்று (05) வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் நண்பகல் 12 மணி வரையும், கொழும்பு 07, இலக்கம் 110/10 விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள பலஸ்தீன தூதரகத்தில் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையிலுள்ள பலஸ்தீன ஆதரவாளர்கள் அனைவரையும் கலந்துகொண்டு இந்த வேலைத்திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் பலஸ்தீன சிறைக் கைதிகளின் போராட்டத்திற்கான ஒருமைப்பாட்டை தெரிவிக்குமாறும் தூதரகம் அழைப்பு விடுத்துள்ளது.