கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத் தீர்மானத்திற்கு எதிராக மேன்முறையீடு செய்யும் பட்சத்தில் கீதா குமாரசிங்ஹ நாடாளுமன்ற உறுப்பினராக தொடர முடியும் என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
அந்த மேன்முறையீட்டின் தீர்ப்பு வெளியாகும் வரை நாடாளுமன்ற உறுப்பினராக அவர் பதவி வகிக்க முடியும் என சபாநாயகர் கூறியுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து கீதா குமாரசிங்ஹ தகுதிநீக்கம் செய்யப்பட்டமை தொடர்பில் நேற்று வரை நீதிமன்றம் நாடாளுமன்றத்திற்கு அறிவிக்கவில்லை எனவும் கரு ஜயசூரிய குறிப்பிட்டார்.
இதேவேளை தம்மை தகுதிநீக்கம் செய்யும் தீர்ப்பிற்கு எதிராக மேன்முறையீடு செய்யப் போவதாக காலி மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்ஹ குறிப்பிட்டுள்ளார். சுவிட்ஸர்லாந்து மற்றும் ஸ்ரீலங்கா ஆகிய இரண்டு நாடுகளினதும் பிராஜாவுரிமையை கொண்டுள்ளதால் கீதா குமாரசிங்ஹவை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என 2015 ஆம் ஆண்டு நான்கு வாக்காளர்கள் மனுத் தாக்கல் செய்திருந்ததனர்.
இந்த மனுகள் தொடர்பான தீர்ப்பு நேற்று அறிவிக்கப்பட்டதுடன், மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் விஜித் மலல்கொடவின் இணக்கப்பாட்டுடன் கீதா குமாரசிங்ஹவை தகுதிநீக்கம் செய்யும் தீர்ப்பை மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி ப்ரீத்தி பத்மன் சூரசேன நேற்று வழங்கியிருந்தார்.