அல்லாஹ்வின் அருட்பெயரால்...
முன்னுரை
அன்பின் வாசக சகோதர, சகோதரிகளுக்கு!
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரகாத்துஹு
அல்- குர்ஆன் மற்றும் அல்- ஹதீஸில் தெளிவாகக் கூறப்படாத கருத்து வேறுபாட்டிற்குட்பட்ட விடயங்கள் மார்க்கத்தில் அதிகமாக இருக்கின்றன.
உதாரணமாக:
வுழுவின்போது உறுப்புக்களை அல்-குர்ஆனில் கூறப்பட்டுள்ள ஒழுங்கின்படிதான் கழுவ வேண்டுமா? அல்லது எப்படியும் கழுவலாமா?
தொழுகையில் றுகூவிலிருந்து எழுந்து நிற்கும் போது கைகள் இரண்டையும் மீண்டும் நெஞ்சின் மீது வைப்பதா? அல்லது தொங்க விடுவதா?
அத்தஹிய்யாத்தின் போதும், இரண்டு ஸஜதாக்களுக்கு இடையிலும் ஆட்காட்டி விரலை அசைக்க வேண்டுமா? அல்லது அசைப்பது அவசியமில்லையா?
பெண்கள் முகத்தை மூடுவது கட்டாயமா? கட்டாயம் இல்லையா? என்பன போன்ற அல்-குர்ஆனிலும், அல்-ஹதீஸிலும் தெளிவாகவும், தீர்க்கமாகவும் கூறப்படாத அல்லது பல்வேறு விதமாக அறிவிக்கப்பட்டுள்ள கருத்து வேறுபாடுகளுக்குட்பட்ட ஏராளமான விடயங்கள் இருக்கின்றன.
இப்படியான கருத்து வேறுபாடுகள் இஸ்லாமிய வரலாற்றின் நெடுகிலும் அறிஞர்களுக்கிடையில் நிலவி வந்திருக்கின்றன. என்றாலும் அந்த கருத்து வேறுபாடுகள் அவர்களுக்கு மத்தியில் எவ்விதத்திலும் பிளவையோ, பிரிவினையையோ தோற்றுவிக்க வில்லை. மாறாக அது அவர்களுக்கு மத்தியில் புரிந்துணர்வினையும், மரியாதையையும், சகோதரத்துவத்தினையும், சமூக ஐக்கியத் தினையும் வளரச் செய்து வலுப்படுத்தியது.
அவ்வாறே எமக்கு மத்தியிலும் இவ்வாறான கருத்து வேறுபாடுகள் பிளவையோ, பிரிவினையையோ தோற்றுவித்து விடாது ஒருவரின் கருத்தை ஒருவர் மதித்து நடக்கும் பெருந்தன்மையைத்தான் இஸ்லாம் எமக்குப் போதிக்கின்றது.
இதில் எனது ஆய்வுதான் சரியானது மற்றவர்களின் ஆய்வுகள் அனைத்தும் பிழையானது என்று வாதிடும் அதிகாரம் யாருக்கும் கிடையாது. அப்படி யாரும் எனது ஆய்வுதான் சரியானது மற்றவர்களின் ஆய்வுகள் அனைத்தும் பிழையானது என்று வாதாடினால் அது ஷைத்தானுடைய போக்காகும். ஷைத்தான்தான் தனது கருத்துத்தான் சரியானது என்று அல்லாஹ்வுடனேயே வாதாடியவன்.
இந்த அடிப்படையில்தான் ரமழான் கால இரவு வணக்கமாகிய தராவீஹ் தொழுகையையும் நாம் அனுக வேண்டியுள்ளது. ரமழான் கால இரவு வணக்கமாகிய தராவீஹ் தொழுகை விடயத்தில் நமக்கு மத்தியில் மட்டுமின்றி நம் முன்னோர்களான ஸலபுஸ் ஸாலிஹீன்கள் காலத்திலிருந்தே பலதரப்பட்ட கருத்து வேறுபாடுகள் நிலவி வருவதனை எம்மால் அவதானிக்க முடிகின்றது.
அத்துடன் இந்த ஆய்விற்கு தராவீஹ் தொழுகையும் தவறான புரிதலும் எனும் மகுடம் சூட்டப்பட்டுள்ளது இதற்கான காரணம் இன்று அதிகமானவர்கள் தராவீஹ் என்று ஒரு தொழுகை இல்லைளூ கியாமுல்-லைல், வித்று மற்றும் தராவிஹ் ஆகிய அணைத்துமே ஒரே தொழுகையைத்தான் குறிக்கின்றன என்றுப் பிரச்சாரம் செய்து வருவதனைக் காணக் கூடியதாகவுள்ளது. எனவே அவர்களின் இந்தத் தவறான புரிதலை அகற்றி தராவீஹ் என்றொரு விஷேடத் தொழுகை இருக்கின்றது என்பதனைத் தெளிவு படுத்துவதற்கேயாகும்.
எனவே வாசகர்கள் நடுநிலையோடு நிதானமாக சத்தியத்தினை தெரிந்து கொள்ள வேண்டும் எனும் நோக்கத்தில் இதனைப் படிக்குமாறு அன்புடன் வேண்டிக் கொள்கின்றேன்.
நாகரீகமான முறையில் முன்வைக்கப்படுகின்ற வாசகர்களின் கருத்துக்கள் மற்றும் விமர்சனங்கள் அனைத்தும் நயமே ஏற்றுக் கொள்ளப்படும்.
இப்படிக்கு
முனாப் நுபார்தீன்- ஜே.பி
இலங்கை இஸ்லாமிய வழிகாட்டல் நிலையம்.