ஐக்கிய தேசிய கட்சிக்கு உறுதியான தலைமைத்துவம் இருக்குமாக இருந்தால் அடுத்து வரும் 20 வருடங்களுக்கு இந்த அரசாங்கத்தை யாராலும் அசைக்க முடியாத நிலை ஏற்படும்.
அத்துடன் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஆதரவும் அரசாங்கத்துக்கு இருக்கின்றது என தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அஸாத் சாலி தெரிவித்தார்.
மேலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை அச்சுறுத்தவே ரணில் விக்ரமசிங்க மஹிந்த ராஜபக்ஷவுக்கு காலி முகத்திடலை வழங்கினார் எனவும் குற்றம் சாட்டினார்.
அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படுத்தும் இயக்கம் நேற்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,
நடைபெற்ற மேதின கூட்டத்தில் பிரதான இரண்டு கட்சிகளும் தங்களுக்கு சிறிய மைதானங்களை ஒதுக்கிக்கொண்டதால் அங்கு வந்த மக்களுக்கு இருக்க இடமிருக்கவில்லை.
ஐக்கிய தேசிய கட்சியின் பேரணி காலையில் ஆரம்பிக்கப்பட்ட போதும் கூட்டம் முடியும் நேரத்திலும் பேரணிகள் வருவதை கண்டு கொள்ள முடிந்தது.
ஆனால் பேரணியாக வருகின்றவர்கள் நிற்பதற்கு வசதி இல்லாத படியால் பேரணியாக வந்து அவ்வாறே தங்கள் வாகனங்களுக்கு செல்லக்கூடியதாக இருந்தது.
அதேபோன்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி கண்டியில் மேதின கூட்டத்தை நடத்திய மைதானம் சிறியதொன்றாகும்.
அதனால் அங்கு வந்த மக்கள் இருக்க இடமில்லாததன் காரணமாக தைதானத்தில் இருக்காமல் வீதியெங்கும் செல்லக்கூடியதை நேரடி ஒளிபரப்புகளின் மூலம் காணமுடிந்தது.
அத்துடன் காலி முகத்திடலுக்கு வந்த மக்களுக்கு அங்கு போதுமான இடவசதி மற்றும் கடல் காற்று இருந்ததால் அவர்கள் ஒரே இடத்தில் இருந்தார்கள்.அதனால் அவர்களின் கூட்டத்துக்கு வந்த மக்களை காட்டக்கூடியதாக இருந்தது. அத்துடன் ரணில் விக்ரமசிங்கவின் ஆசிர்வாதத்துடனே மஹிந்த ராஜபக்ச மேதின கூட்டத்தை நடத்தினார்.
பிரதான இரண்டு கட்சிகளுக்கும் பாரிய மக்கள் கூட்டம் வருவதை அறிந்து கொண்டு அவர்கள் காலி முகத்திடலை தெரிவு செய்யாமல் மஹிந்தவுக்கு வழங்கியமை அரசாங்கத்தின் பிழையான தீர்மானமாகும்.
அத்துடன் அவர்களுக்கு இந்த இடத்தை கொடுத்ததல்லாமல் அவர்கள் சவால் விடுக்கும் நிலைக்கு அரசாங்கம் தள்ளப்பட்டுள்ளது.அவர்களின் மேடையில் உரையாற்றிய அனைவரும் இனவாதத்தை தூண்டக்கூடிய வகையிலே உரையாற்றினர்.அத்துடன் ரணில் விக்ரமசிங்க மஹிந்தவுக்கு இந்த இடத்தை வழங்கியது ஜனாதிபதிக்கு அச்சறுத்தல் விடுப்பதற்காக இருக்கலாம். அரசாங்கத்தின் உறுதியற்ற தன்மையே இந்த நிலைக்கு காரணமாகும்.
1978ம் ஆண்டு ஜே.ஆா். அதிகாரத்துக்கு வந்ததுடன் ஸ்ரீமாவோ அம்மையாரின் பிரஜா உரிமையை பறித்தார்.
ஆனால் மஹிந்த ராஜபக்ஷ் செய்த தவறுக்கு அவரும் அவரது குடும்பமும் பல வருடங்கள் சிறையில் இருக்க வேண்டும்.ஆனால் அரசாங்கம் தொடர்ந்தும் மஹிந்தவுக்கு விட்டுக்கொடுத்து வருகின்றது. இதனால் அரசாங்கம் மீது மக்கள் வெறுப்படைந்துள்ளனர்.
அரசாங்கம் இவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து தேசிய கொள்கை மற்றும் திட்டங்களை அமைத்து உறுதியான நிலைக்கு அரசாங்கத்தை கொண்டு செல்ல வேண்டும்.அத்துடன் ஐக்கிய தேசிய கட்சிக்கு உறுதியான தலைமைத்துவம் இருக்குமாக இருந்தால் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஆதரவுடன் இந்த அரசாங்கத்தை 20 வருடங்களுக்கு யாராலும் அசைக்க முடியாத நிலைக்கு கொண்டு செல்லலாம்.
ஆனால் ரணில் விக்ரமசிங்க மஹிந்தவுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு அரசாங்கத்தை முன்னுக்கு கொண்டு செல்ல நினைத்தால் மக்கள் அதற்கு ககுந்த பாடத்தை புகட்டுவார்கள் என்றார்.