ஏ.எச்.ஏ. ஹுஸைன் -
ஒருவர் புரிந்து கொள்ளக் கூடிய மொழியில் உரையாடுவதை விட அவரின் தாய் மொழியில் மற்றவர் உரையாடுவது அவரது இதயத்தைத் தொடுவதைப் போன்றது என 23வது கட்டளைத் தளபதி எச்.டபிள்யூ.எஸ்.டி.பி. பனவல தெரிவித்தார்.
மட்டக்களப்பு சிவில் பிரஜைகள் சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 9 மாத சிங்கள மற்றும் ஆங்கில மொழி டிப்ளோமா பாடநெறியைப் பூர்த்தி செய்த 75 தமிழ் தமிழ் பேசும் தமிழ் முஸ்லிம் இளைஞர் யுவதிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு அவர் உரையாற்றினார்.
மட்டக்களப்பு கிரானிலுள்ள 'றெஜி' கலாசார மண்டபத்தில் மட்டக்களப்பு சிவில் பிரஜைகள் சபையின் பொதுச் செயலாளர் எச்.எம். அன்வர் தலைமையில் செவ்வாய்க்கிழமை (24.05.2017) இடம்பெற்ற இந்நிகழ்வில் மேற்படி சகோதர மொழியான சிங்களத்தையும் இணைப்பு மொழியான ஆங்கிலத்தையும் எழுத, பேச, வாசிக்கக் கற்றுக் கொண்ட தமிழ் பேசும் முஸ்லிம் மற்றும் தமிழ் இளைஞர் யுவதிகளால் பல்வேறு மொழிப் புலமையை வெளிப்படுத்தும் நிகழ்வுகள் மேடையில் நிகழ்த்தப்பட்டன.
இந்த நிகழ்வுகள் அங்கு வருகை தந்திருந்த அதிதிகளால் மிகுந்த வரவேற்பைப் பெற்றுப் பாராட்டப்பட்டது.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய கட்டளைத் தளபதி பனவலளூ
பல்லின, பல மொழி பேசும் மக்கள் வாழும் நமது நாட்டிலும் காலஞ்சென்ற தென்னாபிரிக்க அதிபர் கூறிய மொழி சம்பந்தமான சிந்தனைக் கருத்து மிகவும் பயன்படத்தக்கது.
மொழியைக் கற்றுக் கொள்வது எங்களது மூளைக்கும் இதயத்திற்கும் சென்று சிந்தனையோடு அன்பையும், அரவணைக்கும் விதத்தையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்த பெருந்துணை புரியும்.
எமது தாய் மொழி மட்டும் சிறப்புக்கும் செழிப்புக்கும் உரியது என்ற நினைப்புடன் நாம் மற்ற மொழிகளை குறைவாக மதிப்பிட்டு விடக் கூடாது.
எல்லா மொழிகளும் உன்னதமானவை, எல்லா மொழிகளும் அந்தந்த சமூகத்திற்குத் தாய் மொழிதான்.
நாங்கள் இலங்கையர் என்ற வகையில் எங்களில் எல்லோரைப் பற்றியும் ஒருவர் மற்றவர் மீது அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும்.
மற்றவர்களின் வாழ்வில் இடம்பெறும் இன்ப துன்பங்களில் பங்கு கொள்ள வேண்டும்.
அப்போது நம்மிடையே அன்பும் அறமும் தழைத்தோங்கும்.
உடன்பாடில்லாத விடயங்களில் முரண்படாது புரிந்து கொள்வதற்குக் கற்றுக் கொள்ள வேண்டும்.
மற்றவர்கள் உங்களை மதியீனர்களாகப் பயன்படுத்துவதற்கு நீங்கள் ஒருபோதும் இடமளிக்கக் கூடாது.
எனதருமை செல்வங்களே ! நீங்கள் தமிழ் முஸ்லிம் சிங்களம் என்பதல்ல பிரச்சினை., நீங்கள் இந்த நாட்டில் எதிர்காலத்தில் எவ்வாறு ஒன்றாக வாழக் கற்றுக் கொளளப் போகின்றீர்கள் என்பதே இப்பொழுது நம்முன்னுள்ள சவால்.
இந்த நாட்டின் முதுசங்களை உங்களிடம் நாங்கள் ஒப்படைக்கின்றோம். அவற்றை நீங்கள் பிரிவினையின்றி ஐக்கியப்பட்டு ஓரணியில் நின்று பாதுகாத்து பயன்படுத்தி இந்த நாட்டை வளம் நிறைந்ததாக மாற்றுங்கள்.' என்றார்.
இந்நிகழ்வுகளில் 231வது படைப் பிரிவின் பிரிகேடியர் என்.டி.எஸ்.ரி. நிவன்ஹெல ( Nனுளுவு. Nறையnhநடய) சித்தாண்டி 11வது ஆர்ட்டிலறி பிரிவின் மேஜர் சுதர்ஷன வீரசிங்ஹ, ஏறாவூர் பொலிஸ் பொறுப்பதிகாரி சிந்தக பீரிஸ், கல்குடா கல்வி வலய அபிவிருத்திக்கான பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஷாமினி ரவிராஜா, மட்டக்களப்பு சிவில் பிரஜைகள் சபையின் மாவட்ட அமைப்பாளர் ஏ.எஸ்.எம். ஸாதிக் ஆகியோரும் டிப்ளோமா பாடநெறியை முடித்துக் கொண்ட பயிலுநர்களும் கலந்து கொண்டனர்.