இன்றைய நிலையில், 100 கோடி ரூபாய் செலவில் திட்டம் மேற்கொள்ள வேண்டும் என்றால், அதில், அரசின் பல்வேறு படிநிலைகளுக்கு, 30 முதல் 50 சதவீதத்தை லஞ்சமாக கொடுக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.
சமீப காலமாக, நம் கையை கடிக்கும் அளவிற்கு விலைவாசி உயர்ந்து விட்டது. சொந்த வீடு தான் எட்டாக்கனியாக உள்ளது என்றால், காய்களும் கனிகளும் கூட எட்டும் விலையில் இல்லை என்பது, பல நடுத்தர குடும்பங்களுக்கு வேதனையை அளித்து வருகிறது. இதற்கு என்ன காரணம்?கடந்த சில ஆண்டுகளாக ஏற்பட்டுள்ள பொருளாதார சீரழிவை முக்கிய காரணமாக குறிப்பிடலாம். பொருள் இல்லை என்றால், பொருளாதாரம் ஸ்தம்பித்துப் போகும். பொருள் உற்பத்திக்கு ஆதரவாக இருக்க வேண்டியது ஆட்சி செய்யும் அரசின் பொறுப்பு. ஆட்சி செய்யும் அரசு பொருள் உற்பத்திக்கான இந்த ஆதரவை கொடுக்க தவறிவிட்டது.அரசின் பொருளாதார கொள்கையின் மேல் ஏற்பட்டுள்ள அவநம்பிக்கை, அந்த அரசின் நிர்வாக திறமையின்மையால், தலைவிரித்தாடும் ஊழல் உள்ளிட்ட காரணங்களால், நம் நாட்டில் புதிய முதலீடுகளை செய்ய, தொழில் முனைவோர் தயக்கம் காட்டி வருகின்றனர்.
கடந்த ஆண்டுகளில், உள்நாட்டில், சிறு, குறு தொழில்கள் பெரிய அளவிற்கு பாதிக்கப்பட்டு உள்ளன.மற்ற தொழில்களைவிட இவை அதிக வேலை வாய்ப்பு அளிப்பதால், பெருமளவு மக்களின் வருமானமும் குறைவதற்கு அரசு காரணியாக இருந்து உள்ளது. ஆட்சித்திறன் பற்றாக்குறை, முதலீட்டு பற்றாக்குறையாக மாறி வருகிறது. முதலீட்டு பற்றாக்குறை, உற்பத்தி பற்றாக்குறையாக மாறுகிறது. உற்பத்தி பற்றாக்குறையை சரி செய்ய, வெளிநாடுகளில் இருந்து, ஏராளமான பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகிறன.
சீனாவில் இருந்து, பெருமளவில் ஏராளமான பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகிறது.இவ்வாறு, வெளிநாடுகளில் இருந்து, இறக்குமதி செய்யப்படுவது, வர்த்தக பற்றாக்குறைக்கு வழி வகுக்கிறது. வர்த்தக பற்றாக்குறை, டாலர் பற்றாக்குறையாக மாறிக் கொள்கிறது. டாலர் பற்றாக்குறை, டாலரின் மதிப்பை உயர்த்தி, ரூபாய் மதிப்பை கீழே தள்ளி விடுகிறது. இதன் காரணமாக, இறக்குமதி செய்யப்படும் எண்ணெய் விலை உயர்ந்து விடுகிறது எண்ணெய் விலை உயர்ந்தால், அதுவே, பணவீக்கத்தை மேலும் அதிகரிப்பதற்கு காரணியாக அமைகிறது.
மேற்கண்ட காரணங்கள் அனைத்தும், ஒன்றுடன் ஒன்று, பிணைக்கப்பட்டு இருந்தாலும், ஆட்சித்திறன் பற்றாக்குறை தான் மூல காரணம் ஆகும். 'பொருளாதாரமும், அரசியலும், ஒரு நாணயத்தின் இரண்டு முகங்கள்'ஆட்சித்திறன் பற்றாக்குறை வந்துவிட்டால், ஏதேனும், ஒரு பற்றாக்குறை பொருளாதாரத்தில் தான் வந்து சேரும். இன்றைய சூழலில், பல பற்றாக்குறைகள் உள்ளன. இதற்கு காரணம், தவறான பொருளாதார சிந்தனைகள் தான். இதை சரி செய்ய, மாற்று அரசு மற்றும் மாற்றும் சிந்தனை ஏற்படுத்த வேண்டும். அது, மக்கள் கையில் தான் உள்ளது. இவ்வாறு தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி இஸ்தாபகர் மொஹிடீன் பாவா கருத் து தெரிவித்தார்.