வடமாகாணத்திலுள்ள வேலையற்ற பட்டதாரிகள் ஒன்றிணைந்து வடமாகாண சபையை இன்று முற்றுகையிட்டு போராட்டமொன்றை நட த்தியுள்ளனர். வடமாகாண சபையின் 92 ஆவது அமர்வு இன்று நடைபெறும் நிலையில் வேலையற்ற பட்டதாரிகள் மாகாண சபையின் வாயிற் கதவுகளை மூடி முற்றுகைப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
அதேவேளை, வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனின் அலுவலகத்தையும் வேலையற்ற பட்டதாரிகள் மற்றும் வடமாகாண சுகாதார தொண்டர்கள் முற்றுகையிட்டனர்.
மேலும் அமர்வுகளில் கலந்துகொள்ள அங்கு வந்த வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் வட மாகாண சபையில் நுழைய அனுமதிக்கப்படவில்லை. இதனைத் தொடர்ந்து அவர் அங்கிருந்து வெளியேறியமை குறிப்பிடத்தக்கது.
வேலைவாய்ப்பை வழங்குமாறு கோரி வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் இன்று 72 ஆவது நாளாக தமது தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
வேலையற்ற பட்டதாரிகளுடன் முதலமைச்சர் கலந்துரையாடிய போதிலும் முதலமைச்சரின் கோரிக்கையை போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பட்டதாரிகள் நிராகரித்துள்ளனர். இதனையடுத்து அவர் அங்கிருந்து வெளியேற வேண்டி ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.