திருகோணமலை மூதூரில் குடியிருப்புக்காணிகள்,விவசாய நிலங்களை மீட்டுத்தருமாறுகோரி பழங்குடியினர் ஆர்பாட்டம்



எம்.ஏ. கீத் திருகோணமலை-

லங்கைத்தீவில் வாழும் பூர்வீக பழங்குடிகளான நாங்கள் இயக்கர் நாகர் வழிவந்த வழித்தோன்றல்களாக எம்மைக்கருதுகிறோம். எம்மில் ஒரு பிரிவினர் மகியங்கனையை அண்டிய பகுதிகளில் ஒரு பிரிவாகவும் நாம் வாகரைஇ வெருகல் மற்றும் மூதூரை அண்டியும் சுமார் 35 கிராமங்களை உள்ளடக்கிய பகுதியிலும் வாழ்ந்து வருகின்றோம். எமக்கான பூர்வீக மொழி ஒன்றை நாம் பேச்சு வழக்கில் கொண்டுள்ளோம். 

எம்மில் சிலர் இன்னும் அதனைப்பேசி வருகின்றனர். ஆனாலும் நாம் தமிழ் மொழியையே பேச்சு மொழியாகக் கொண்டுள்ளோம். இப்பிரதேசத்தின் மிக மூத்த குடிகளாக நாம் இருந்தமைக்கான வரலாற்றுச் சான்றுகள் கிடைக்கப்பெற்றிருக்கின்றன.

கடந்து போன வன்முறைச்சூழல் முழுவதும் யுத்தத்திற்கும் வறுமைக்கும் இடையில் சொல்லெணாத் துன்பங்களை அனுபவித்து தற்போது நிம்மதிப் பெருமூச்சு விடுவதற்கான காலம் கனிந்துள்ளதாக நம்பிக்கை துளிர்த்திருந்த காலங்களில் எம்மீது திட்டமிடப்பட்ட வகையில் ஏவிவிடப்படும் பொருளாதார ரீதியான முற்றுகை மூலமான நில ஆக்கிரமிப்பு எனும் செயற்பாடு எம்மை இன்று இப்போராட்டக் களத்திற்கு கொண்டு வந்திருக்கிறது.

எமது பூர்வீக கிராமங்களான சாலையூர்இ சந்தோசபுரம்இ இளக்கந்தைஇ பாட்டாளிபுரம் வீரமாநகர்இமலைமுந்தல்இ நீனாக்கேணிஇ நல்லூர்இ உப்பூறல்இ சந்தனவெட்டைஇ சீனன்வெளி மற்றும் இலங்கைத்துறை முகத்துவாரம் தொடக்கம் வாகரை வரையான நீண்ட நிலப்பரப்பில் நாங்கள் காலம் காலமாக வாழ்ந்து வருகின்றோம். எமது வாழ்க்கையை மேம்படுத்துவதற்கென 50 களில் மதிப்பிற்குரிய டி.எஸ். சேனாநாயக்க பிரதமர் அவர்களால் நல்லூரிலே உல்லை குளத்தையும் 700 ஏக்கர் வயற்காணிகளையும் ஏற்படுத்தித் தந்ததன் பின்னர் எமது வாழ்க்கை முன்னேற்றம் காணத் தொடங்கிற்று.

 இக்காலப்பகுதியில் அரசினால் உருவாக்கப்பட்டு எம்மால் இயக்கப்பட்ட பத்தினியம்மன் விவசாய சம்மேளனம் இப்பகுதியின் விவசாய மேம்மபாட்டு நடவடிக்கையில் மும்முரமாக ஈடுபாட்டைக் காட்டி வந்தது. ஆயினும் கடந்த 30 ஆண்டுகளாக நாட்டிலே நிலவிய கடுமையான யுத்தம் எம்மை மீண்டும் வறுமைக்கோட்டினுள் தள்ளி விட்டதை யாவரும் அறிவீர்கள். மீள முடியாத வறுமையையும் இடப்பெயர்வையும் சொத்து உயிரிழப்புக்களையும் தந்த யுத்தம் முடிவடைந்ததன் பின்பு அயற் கிராமமான தோப்பூரிலே வசிக்கின்ற முஸ்லீம் முதலாளிகள் சிலரின் திட்டமிடப்பட்ட பொருளாதார சுரண்டல் காரணமாக இன்று நல்லூர் மற்றும் உப்பூறல் ஆகிய கிராமங்கள் முற்று முழுதாக எமது கைகளை விட்டு பறிபோய்விட்டது. அத்துடன் உல்லைக் குளமும் 700 ஏக்கர் வயற்காணிகளும் எம்மிடமிருந்து அடாவடியாகப் பறிக்கப்பட்டிருக்கிறது. எமது மேய்ச்சல் நிலங்கள் அவர்களது தென்னந் தோப்புகளாகியிருக்கின்றது. எமது மேட்டு நிலங்கள் அவர்களது முந்திரிகைத் தோட்டமாகியிருக்கிறது.

அரசினால் எமக்கென வழங்கப்பட்டிருக்கும் காணி அனுமதிப்பத்திரங்கள் எம்வசம் இருக்கும் போதே முஸ்லிம் விவசாயிகளாக தம்மை இனங்காட்டிக்கொள்ளும் முதலாளிகள் அரசின் அனுமதிப்பத்திரத்துடன் தமது விவசாய நடவடிக்கைகளை எமது பூர்வீக மண்மீது ஆரம்பித்து விட்டனர். விவசாய சம்ளேனம் கூட அவர்களுக்கானதாக மாற்றம் கண்டுவிட்டது.

அரச இயந்திரம் அரசியற் செல்வாக்கின் பலம் கொண்டு பாமர பழங்குடி மக்களாகிய எம்மீது கோர ஒடுக்குமுறை ஆயுதம் கொண்டு நிகழ்த்தப்பட்டுக் கொண்டிருக்கும் இவ்வன்முறைக்கெதிராக நாங்கள் தொடர்ச்சியாக முறைப்பாடுகளைச் செய்தும் எமது அரசியல் தலைமைகளிடமும் அதிகாரிகளிடமும் முறையிட்டும் எது வித பலனும் இல்லாத ஒரு சூழலில் நாம் வேறு வழிகளின்றி இப்போராட்டத்தை நடாத்த வேண்டிய வரலாற்று தேவை எம் மீது திணிக்கப்பட்டிருக்கிறது.

அதே வேளை எமது வாழ்வாதாரத்தின் பெரும் பகுதி தங்கியிருக்கும் எமக்குச் சொந்தமான வனப்பகுதி அரசினால் வனஇலாகாவிற்குச் சொந்தமானதாக பிரகடனப்படுத்தப்பட்டதன் பின்பு அப்பகுதியில் எதுவித பொருளாதார நடவடிக்கைகளும் மேற்கொள்வதற்கு நாம் அனுமதிக்கப்படவில்லை. ஏற்கனவே விளைச்சல் காணிகளைப் பறிகொடுத்திருக்கும் நாம் மேற்படி நடவடிக்கை மூலம் இன்னும் அதிகமாக பாதிக்கப்பட்டு தற்போது வாழவழியின்றி தவித்து வருகின்றோம். 

சுய கௌரவத்துடனும் சுயசார்பு பொருளாதார கட்டமைப்புடனும் வாழ்ந்து வந்த ஒரு இனம் யுத்தம் நிறைவடைந்ததன் பின் வீதி வீதியாக யாசகம் கேட்டுப் பிழைப்பு நடாத்தும் கொடிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றோம் என்பதனை இங்கு பதிவு செய்ய முனைகின்றோம். இந்நிலைக்கான முக்கிய காரணம் எம்மீதான ஒடுக்குமுறையை ஆதரித்து நின்ற அரச இயந்திரமும் அதிகார வர்க்கமேயாகும்.

நடைபெற்றுக் கொண்டிருக்கும் இப்போராட்டம் ஒரு குறிப்பிட்ட இனத்திற்கோ அன்றி மதத்திற்கோ எதிரானதல்ல. இது எமது இருப்பிற்கான போராட்டம் மட்டுமே. எம்மிடமிருந்து அநியாயமாகப் பறிக்கப்பட்ட ஆக்கிரமிக்கப்பட்ட எமது மண் எமக்கே மீண்டும் திருப்பித் தரப்பட வேண்டும். எங்கள் முற்றத்தின் மீது அமர்ந்து நீங்கள் உங்கள் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப நாம் ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை என்பதை கவனத்திற் கொள்ளுமாறு இத்தால் எமது நில ஆக்கிமிப்பாளர்களை கேட்டுக் கொள்கிறோம்.
அத்துடன்
1. சேனைப்பயிர்ச்செய்கை எமது பாரம்பரிய உரிமைஇ அந்நிலங்கள் எமக்கே சொந்தம்.
2. எமது பாரம்பரிய தொழில்கள் காப்பாற்றப்பட வேண்டும்.
3. எமது குடியிருப்புக்களிலிருந்து இராணுவ முகாம்கள் அகற்றப்பட வேண்டும்.
4. மலை நீலியம்மன்இ பெரியசாமி கோவில்களை ஆக்கிரமித்து இருக்கும் பௌத்த ஆக்கிரமிப்பாளர்கள் அங்கிருந்து வெளியேற வேண்டும்.
5. எங்கள் பாலக்காட்டு மடு இக்பால் நகரமாகியதும் கோபாலபுரபட்டணம் 30 வீட்டுத்திட்டமாகியதும் எவ்விதம் என விசாரணை செய்யப்பட்டு அவை எம்மிடம் மீளக் கையளிக்கப்பட வேண்டும்.
6. மலைமுந்தல்இ நல்லூர்இ உப்பூறல் பகுதிகளை ஆக்கிரமித்து மேற்கொள்ளப்படும் சாஹிப் நகர் கிராம வேலைத்திட்டம் நிறுத்தப்படுதல் வேண்டும்.
7. உல்லக்குளம் எம்மிடம் மீளக் கையளிக்கப்பட வேண்டும்.
8. இறால்குளிஇ சுவாந்திர ஆறுஇ கொக்கட்டி ஆறுகளில் நாம் தொழில் செய்ய அனுமதிக்கப்பட வேண்டும்.
9. முஸ்லிம் மக்கள் மீதான சிங்கள பௌத்த தாக்குதல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

ஆகிய கோரிக்கைகளை இத்தால் நாம் முன்வைக்கின்றோம்.
அரசே! இவ்விடயம் தொடர்பாக காத்திரமான நடவடிக்கையை மேற்கொண்டு எம்மிடமிருந்து பறிக்கப்பட்ட நிலங்களை எமக்கே மீளளிப்பதுடன் எமது கோரிக்கைகளை நிறைவேற்ற ஆவன செய்வதுடன் மீளவும் இவ்விதமான ஆக்கிரமிப்புக்கள் நடைபெறாமல் இருப்பதனை உறுதி செய்ய வேண்டும் என இத்தால் கோருகின்றோம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -