ஏ.எச்.ஏ. ஹுஸைன் -
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பெண் தொழில் முயற்சியாளர்களின் உற்பத்திகளுக்கு சந்தை வாய்ப்பை ஏற்படுத்தவும், அவர்களது வியாபார நடவடிக்கைகளை ஊக்குவிக்கவும் மாபெரும் கண்காட்சியும், விற்பனையும் சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனமான வீ எபெக்ட் (றுந நுககநஉவ) நிறுவனத்தின் அனுசரணையுடன் வியாழக்கிழமை 25.05.2017 ஆரம்பித்து வைக்கப்பட்டதாக அந்நிறுவனத்தின் இலங்கைக்கான திட்ட இணைப்பாளர் ரீ. மயூரன் தெரிவித்தார்.
ஒன்பதாவது வருடமாக இத்தகைய பெண்களை ஊக்குவிக்கும் சந்தைக் கண்காட்சியும் விற்பனையும் இடம்பெறுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
மட்டக்களப்பு காவியா பெண்கள் அபிவிருத்தி நிறுவனத்தினால் ஒழுங்கமைக்கப்பட்ட இந்த ஊக்குவிப்புச் சந்தை மூன்று தினங்களுக்கு இடம்பெறவுள்ளது.
மட்டக்களப்பு செல்வநாயகம் மண்டப வளாகத்தில் இடம்பெற்ற மேற்படி கண்காட்சித் திறப்பு நிகழ்வில் சுவீடன் நாட்டின் இந்தியாவுக்கான உயர்ஸ்தானிகர் அன்னா உக்லா பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
உதவி மாவட்ட செயலாளர் ஏ. நவேஸ்வரன், வீ எபெக்ட் நிறுவனத்தின் இலங்கை திட்ட இணைப்பாளர் ரீ. மயூரன், சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனத்தின் திட்ட இணைப்பாளர் ஆர். சிவப்பிரகாசம், மண்முனை வடக்கு பிரதேச யெலாளர் கே. குணநாதன், ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிதிய திட்ட இணைப்பாளர் கே. பிருந்தன், இன்னும் பல அதிகாரிகளும் பயனாளிகளான பெண் உற்பத்தி முயற்சியாளர்களும் இதில் கலந்து கொண்டனர்.
கணவனை இழந்த கைம்பெண்களின் உற்பத்திகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கு சந்தை வாய்ப்பினைப் பெற்றுக்கொடுக்கும் வகையிலும் தமது உற்பத்தினை மேலும் வினைத்திறன் மிக்கதாக கொண்டு செல்லும் வகையிலும் இந்த கண்காட்சி தொடர்ச்சியாக வருடந்தோறும் ஒழுங்கு செய்யப்படுவதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.