ஏ.எச்.ஏ.ஹுஸைன்-
அரசாங்கம் அளித்துள்ள வாக்குறுதிக்கு அமைய நாளை வியாழக்கிழமை (25.05.2017) மேற்கொள்ளப்படவிருந்த ஹர்த்தால் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக குறித்த ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்திருந்த முஸ்லிம் உரிமைகளுக்கான அமைப்பு (ஆசுழு) அறிவித்துள்ளது.
முன்னதாக, அந்த அமைப்பு விடுத்திருந்த பகிரங்க அழைப்பில், நாட்டில் சிறுபான்மையினரான முஸ்லிம்கள் மீது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இனவாதத் தாக்குதல்களைக் கண்டித்து வியாழக்கிழமை (25.05.2017) நாடளாவிய ரீதியில் ஹர்த்தாலை மேற்கொள்ளுமாறு கேட்டிருந்தது.
அந்த அமைப்பு விடுத்திருந்த வேண்டுகோளில், ஜனநாயக ரீதியில் எமக்குள்ள உரிமையைப் பயன்படுத்தி நாடாளாவிய ரீதியில் இந்த ஹர்த்தாலை வெற்றிகரமாக நடாத்துவதற்கு உதவுமாறு சகல தரப்பினரிடமும் வினயமாக வேண்டிக்கொள்கிறோம் என்றும் அரச தனியார் நிறுவனங்களும், அரச தனியார் பாடசாலை நிருவாகங்களும், வர்த்தக நிறுவனங்களும் தமது கடமையிலிருந்து விலகி இந்த ஹர்த்தாலுக்கு பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்றும் கேட்டிருந்தது.