அப்துல்சலாம் யாசீம்-
எனது கட்டளை மீறப்பட்டமையை நானே விசாரிப்பது நீதிக்கு புறம்பானது என திருகோணமலை நீதிமன்ற பிரதம நீதவான் எம்.எச்.எம்.ஹம்ஸா நேற்று (09) தெரிவித்தார். வேலையில்லாப்பட்டதாரிகள் கிழக்கு மாகாண சபைக்கு முன்னால் கடந்த 25ம் திகதி ஆர்ப்பாட்டம் நடாத்திய போது நடந்து கொள்ள வேண்டிய நடைமுறைகள் தொடர்பான கட்டளையொன்று பிரதம நீதவானினால் பிறப்பிக்கப்ட்டிருந்தது.
இந்த கட்டளையை திருகோணமலை தலைமையக பொலிஸார் ஆர்ப்பாட்டக்காரர்களிடம் கையளித்த போது அக்கட்டளை கிழித்து காலுக்கு கீழே போட்டு தூஷன வார்த்தைகளால் பேசியதாக தலைமையக பொலிஸாரினால் இந்நபர்களுக்கெதிராக வழக்கு கோவையிடப்பட்டிருந்தது. இந்நிலையில் இவ்வழக்கினை திருகோணமலை சட்டத்தரணிகள் சங்கத்தினால் நகர்த்தல் பிரேரணை மூலம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதுடன் சட்டத்தரணிகள் சார்பில் பிடியானை கட்டளையை பிறப்பிக்குமாறும் கோரப்பட்டிருந்தது.
இந்நிலையில் திருகோணமலை பிரதம நீதவான் எம்.எச்.எம்.ஹம்ஸா நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட கட்டளையை கிழித்து காலால் மிதிக்கும் போது பொலிஸார் பார்த்துக்கொண்டிருந்ததாகவும் அதே வேளை இவர்களை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தியிருக்கலாம் என பொலிஸாருக்கு தெரிவித்ததுடன் பிடியானை கட்டளை தேவையில்லையெனவும் நீங்கள் கைது செய்து நீதிமன்றத்திற்கு ஆஜர்படுத்துமாறும் அல்லது சந்தேக நபர்களை நேரடியாக வருகை தந்து நீதிமன்றில் ஆஜராகுமாறும் நீதவான் தெரிவித்தார்.
இது தொடர்பான வழக்கு விசாரணை நேற்று (09) திருகோணமலை பிரதம நீதவான் எம்.எச்.எம்.ஹம்ஸா முன்னிலையில் நடைபெற்றபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்த வழக்கு தற்போது விசாரணைக்காக திருகோணமலை மேலதிக நீதவானுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டுள்ளதுடன் இம்மாத் 23ம் திகதி நடைபெறவுள்ளதாகவும் திருகோணமலை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.