கிழக்கு மாகாண சபையால் அமைக்கப்பட்டுள்ள குழுவின் தீர்மானத்துக்கு முன்னதாக மாயக்கல்லி மலையில் யாராவது அத்துமீறி செயற்பட்டால் அது அரசியல் யாப்பிற்கு முரணானதாகும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்தார்.
அரசியல் யாப்பை மீறி நடப்பவர்கள் அதிகாரிகளாக இருந்தாலும் அவர்கள் மீது நீதித்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க முடியும் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என கிழக்கு முதலமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இறக்காமம் ஜாமிய்யதுத் தைக்க பள்ளிவாயலில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமின் பங்கேற்புடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் இதனைக் கூறினார்,
அங்கு மேலும் உரையாற்றிய கிழக்கு மாகாண முதலமைச்சர்,
கிழக்கு மாகாண சபையில் கொண்டு வரப்பட்ட பிரேரணைக்கு ஏற்ப யாப்புரீதியாக மாகாண சபைக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கமைய குழுவொன்று நியமிக்கப்பட்டு மாயக்கல்லி மலையில் அத்துமீறல் தொடர்பில் மாகாண சபை இறுதித் தீர்மானத்தினை மேற்கொள்ளவுள்ளது.
இந்தக் குழுவில் முதலமைச்சர் காணியமைச்சர் மற்றும் அம்பாறை மாவட்ட மாாகாண சபை உறுப்பினர்களும் உள்ளடங்குகின்றனர்.
அத்துடன் மாவட்ட அரசாங்க அதிபர்,காணிஆணையாளர், , அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்,இறக்காமம் பிரதேச செயலாளர்,பிரதேச சபையின் செயலாளர், தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள்,நில அளவை திணைக்கள அதிகாரிகள்,தமன பொலிஸாரும் இந்தக் குழுவிற்கு உட்பட்டவர்கள்.
ஆகவே விரைவில் மாகாண சபையால் நியமிக்கப்பட்ட குழுவினர் கூடி சுமுகமாக கலந்துரையாடி மாணிக்கமடு பிரச்சினைக்கு நியாயமான தீர்வொன்றை பெற்று அடுத்த மாகாண சபைக் கூட்டத்தில் அறிவிக்கவுள்ளோம்,
இனமுறுகல் ஒன்று ஏற்படாவண்ணம் சுமுகமாக இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கே அனைவரும் விரும்புகின்றோம் அதையே நாம் இப்போது செய்து வருகின்றோம்,
ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களும் ஜனாதிபதியுடன் பேசி இந்த பிரச்சினையை தீர்க்க சாதகமாக நடவடிக்கைகளை எடுத்துள்ளார்.
அத்துடன் கௌரவத் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களும் எதிர்க்கட்சித் தலைவர் இரா சம்பந்தன் ஐயா அவர்களும் இணைந்து செயலாற்றுவதன் ஊடாக இந்தப் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காண முடியும் என நம்புகி்ன்றோம் என கிழக்கு முதலமைச்சர் தெரிவித்தார்.