கடந்த காலங்களில் ஹஜ் யாத்திரைக்கான ஏற்பாடுகளில் இடம்பெற்று வந்த குளறுபடிகள், ஊழல், மோசடிகள் அனைத்தும் முஸ்லிம் சமய கலாசார, தபால் சேவைகள் அமைச்சர் எம்.எச்.அப்துல் ஹலீம் அவர்களின் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளினால் இல்லாதொழிக்கப்பட்டு, தற்போது எவருக்கும் பாதிப்பில்லாத வகையில் கோட்டா பகிர்வுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது என அந்த அமைச்சின் இணைப்புச் செயலாளரும் ஐக்கிய தேசியக் கட்சியின் கல்முனைத் தொகுதி பிரசாரச் செயலாளருமான செயிட் அஸ்வான் ஷக்காப் மௌலானா தெரிவித்தார்.
அமைச்சர் எம்.எச்.அப்துல் ஹலீம் தொடர்பில் தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் ஆசாத் சாலி ஊடகங்களில் தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்து இன்று புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அஸ்வான் ஷக்காப் மௌலானா இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் அதில் மேலும் தெரிவித்திருப்பதாவது;
"நல்லாட்சி அரசாங்கத்தில் முஸ்லிம் சமய கலாசார, தபால் சேவைகள் அமைச்சராக எம்.எச்.அப்துல் ஹலீம் நியமிக்கப்பட்டது தொடக்கம் அசாத் சாலி அவர் மீது அடிக்கடி அபாண்டமான குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகின்றார். அமைச்சர் மீது கொண்டுள்ள காழ்ப்புணர்ச்சி காரணமாகவே எவ்வித அடிப்படையுமில்லாமல் ஆசாத் சாலி இவ்வாறான அபாண்டங்களை சுமத்தி வருகின்றார்.
முன்னர் முஸ்லிம் கலாசார அமைச்சு இருந்த காலத்திலும் சரி அந்த அமைச்சு இல்லாத காலத்திலும் சரி செயற்றிறனற்று காணப்பட்டிருந்த முஸ்லிம் கலாசார திணைக்களத்தை அமைச்சர் ஹலீம் பதவியேற்றது தொடக்கம் செயலூக்கம் மிக்கதாக மாற்றியமைத்து அதன் செயற்பாடுகளை சிறப்பு மிக்கதாக விஸ்தரிப்பு செய்துள்ளார்.
அதேவேளை ஹஜ் யாத்திரைக்கான ஏற்பாடுகளில் கடந்த காலங்களில் நிறைய குளறுபடிகளும் ஊழல் மோசடிகளும் இடம்பெற்றிருந்தன. அக்காலப்பகுதியில் ஆசாத் சாலியும் அரச ஹஜ் குழு உறுப்பினராக இருந்துள்ளார். அப்போது கொமிஷன் பெற்றுக்கொண்டு சில ஹஜ் பயண முகவர்களுக்கு கூடுதலான கோட்டாக்கள் வழங்கப்பட்டு, இன்னும் சில ஹஜ் பயண முகவர்கள் புறக்கணிப்பு செய்யப்பட்டு வந்துள்ளதை அவரால் மறுக்க முடியுமா?
இப்படியான குளறுபடிகள், ஊழல், மோசடிகள் அனைத்தையும் இல்லாதொழிக்கும் வகையில் அனைவருக்கும் சமத்துவமான ஹஜ் கோட்டா பகிர்வுக்கு முறையான திட்டமொன்றை அமுல்படுத்தி, அது வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுவதை ஆசாத் சாலி அறியாமலில்லை.
இருந்தபோதிலும் அமைச்சர் ஹலீம் புதிய ஹஜ் குழுவில் ஆசாத் சாலியை ஒரு உறுப்பினராக சேர்த்துக் கொள்ளாமல் நியாயமாக செயற்படுகின்ற புத்திஜீவிகளை அக்குழுவில் உள்வாங்கியிருப்பது ஆசாத் சாலிக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியிருக்கலாம். அதன் காரணமாகவே அமைச்சருக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் அவர் நாளும் பொழுதும் பொய்களை சொல்லி அமைச்சரை திட்டித் தீர்த்து வருகின்றார்.
இந்த வகையில் சென்ற வருடம் ஹஜ் கடமைக்காக விண்ணப்பித்தவர்களிடம் முஸ்லிம் கலாசார திணைக்களத்தினால் பத்தாயிரம் ரூபா கட்டுப்பணம் பெற்றுக்கொள்ளப்பட்டதாகவும் அது சம்மந்தப்பட்டவர்களுக்கு மீளளிக்கப்படவில்லை எனவும் ஆசாத் சாலி கூறியிருக்கிறார். இக்குற்றச்சாட்டில் எவ்வித உண்மையுமில்லை.
அவ்வாறான ஒரு கட்டுப்பணம் அறவிடும் நடைமுறை இந்த வருடமே அமுலுக்கு வந்துள்ளது. இம்முறை ஹஜ்ஜுக்காக விண்ணப்பிப்பவர்கள் 25 ஆயிரம் ரூபா முற்பணம் செலுத்த வேண்டும் எனவும் அது மீளளிக்கப்படும் எனவும் முஸ்லிம் கலாசார திணைக்களத்தினால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அதேவேளை கடந்த காலங்களை விட இம்முறை இலங்கைக்கான ஹஜ் கோட்டா அதிகரிக்கப்பட்டுள்ளது. இது அமைச்சர் ஹலீம் எடுத்துக் கொண்ட அயராத முயற்சியினால் கிடைக்கப்பெற்றுள்ள வரப்பிரசாதமாகும்.
அது மாத்திரமல்லாமல் கடந்த மஹிந்த ஆட்சியின்போது ஆசாத் சாலி அங்கம் வகித்திருந்த அரச ஹஜ் குழு செயற்பட்ட காலங்களில் எட்டு இலட்சம் ரூபா வரை அறவிடப்பட்ட ஹஜ் யாத்திரைக்கான கட்டணம் நல்லாட்சியில் அமைச்சர் ஹலீம் மேற்கொண்ட அதிரடித் தீர்மானம் காரணமாக நான்கு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபா வரை குறைக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் ஒரு சில மாபியாக் கும்பலின் பிடிக்குள் அகப்பட்டிருந்த ஹஜ்ஜுக்கான ஏகபோக உரிமை ஒழிக்கப்பட்டு வெளிப்படைத்தன்மையுடன் அனைவருக்கும் பொதுவான திட்டம் ஒன்று அமுலுக்கு கொண்டு வரப்பட்டிருக்கிறது.
அதுபோன்று முஸ்லிம் கலாசார திணைக்களத்திற்குரிய அதிகாரிகள் நியமனம் அமைச்சரின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கப்பால் மிகவும் நேர்மையாகவே இடம்பெற்றுள்ளதையும் திணைக்களத்தின் கணக்காய்வுகள் அரச பிரமாணங்களுக்கு ஏற்ப சுயாதீனமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பதையும் ஆசாத் சாலி நன்கறிந்திருந்தும் விடயங்களை திரிபுபடுத்தி பொய்யான கருத்துக்களை பரப்பி வருகின்றார்.
அமைச்சர் ஹலீம் அவர்களின் அயராத முயற்சி காரணமாகவே இந்த நல்லாட்சியில் முஸ்லிம் காலாச்சார திணைக்களத்திற்கு பல கோடி ரூபா செலவில் தலைநகரில் ஒரு கட்டிடக் தொகுதி அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டிருக்கிறது என்பதை முழு உலகும் அறியும்.
இப்படி மிகவும் அர்ப்பணிப்புடனும் தூய எண்ணத்துடனும் செயற்றிறனுடனும் சமூகத்திற்காக உழைத்து வருகின்ற ஓர் அரசியல் தலைமையை முஸ்லிம் கலாசார அமைச்சை வகிப்பதற்கு அருகதையற்றவர் என்பது போல் ஓர் அபிப்பிராயத்தை உருவாக்குவதற்கு ஆசாத் சாலி முனைந்திருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கதாகும்.
கொழும்பில் அரசியல் போக்கிடமில்லாமல் கண்டியில் அடைக்கலம் புகுந்த ஆசாத் சாலியை கண்டி மாவட்ட மக்கள் அரவணைத்து, மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி சார்பில் போட்டியிட அனுமதித்து, அவரை வெற்றியீட்டவும் செய்வதற்கு காரணகர்த்தாவாக இருந்த அமைச்சர் ஹலீம் அவர்களின் பாரிய பங்களிப்பை அவர் இன்று மறந்து செயற்படுகிறார்.
காலத்திற்கு காலம் கட்சி மாறி மாறி அரசியல் அதிகார அந்தஸ்த்தை தேடியலைகின்ற ஆசாத் சாலி, மிகவும் நேர்மையும் ஒழுக்கமும் கண்ணியமும் மிக்க ஒரு கனவான் அரசியல் தலைவரான அமைச்சர் ஹலீமை நாகரிகமற்ற வார்த்தைகளினால் தூஷிப்பதை சமூகம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது.
தனக்கு அரசியல் முகவரியைப் பெற்றுத்தந்த ஐக்கிய தேசியக் கட்சி அன்று அதிகாரமற்ற நிலையில் மிகவும் நலிவடைந்திருந்தபோது பதவிப் பேராஷை காரணமாக அக்கட்சியில் இருந்து விலகி மன்னராட்சி நடத்திய மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து சுகபோகங்களை அனுபவித்து கொண்டிருந்த ஆசாத் சாலி முஸ்லிம் காங்கிரசில் இணைந்து கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டு மண்கவ்வி விட்டு, இன்று மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியின் வுட் போர்ட்டில் தொங்கிக் கொண்டிருக்கின்ற அதேவேளை மறைமுகமாக ஜனாதிபதி மைத்திரியிடம் சலுகைகளை பெற்றுக் கொண்டு சுகம் அனுபவித்து வருவதை இந்த சமூகம் அறியாமில்லை. தான் ஏதோ உண்மையான சமூகப்பற்றாளன் என்பதுபோல் காட்டிக்கொண்டு இன்று நல்லாட்சியையும் அமைச்சர் ஹலீம் அவர்களையும் அவர் விமர்சித்து வருகின்றார்.
ஆகையினால் ஐக்கிய தேசியக் கட்சியில், கண்டி மாவட்டத்தில் தனது அரசியல் எதிர்காலம் நீடிக்க வேண்டுமாயின் எமது கட்சியையும் எமது அமைச்சர் ஹலீம் அவர்களையும் சீண்டுவதை ஆசாத் சாலி உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும்" என்று முஸ்லிம் சமய கலாசார அமைச்சரின் இணைப்புச் செயலாளர் அஸ்வான் ஷக்காப் மௌலானா வேண்டுகோள் விடுத்துள்ளார்.