ஒலுவில் மீன்பிடித் துறைமுகத்தை மூடுவதற்கு தாம் ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என சுகாதாரப் பிரதி அமைச்சரும் அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவருமான பைஷால் காசீம் தெரிவித்தார்.
அட்டாளைச்சேனை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று பிரதேச செயலகத்தில் நடைபெற்றது, அக்கூட்டத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பில் மேலும் அவர் தெரிவிக்கையில்;
'ஒலுவில் மீன்பிடித் துறைமுகத்தின் மூலம் நூற்றுக்கணக்கான மீனவர்கள் பயனடைந்து வரும் நிலையில், இத்துறைமுகத்தை மூடவுள்ளதாக மீன்பிடித்துறை அமைச்சர் கூறிய விடயம் பொறுப்பற்ற செயற்பாடாகும். இத்துறைமுக நுழைவாயிலில் காணப்படும் மணல் மேட்டை அகற்றுவதற்கு ஹோகாட் நிறுவனம் ஆய்வை முன்னெடுத்துள்ளது. இதற்கு சுமார் 350 மில்லியன் ரூபாய் நிதி தேவைப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது' என்றார்.
மேலும் அட்டாளைச்சேனையில் நவீன சந்தை அமைத்தல் மீன்சந்தை மற்றும் ஆடு, மாடு அறுக்கும் மடுவ இடமாற்றம். அட்டாளைச்சேனையில் காணி அனுமதிப்பத்திரங்கள் இல்லாதோருக்கு காணிக் கச்சேரி நடத்தி அனுமதிப்பத்திரங்கள் வழங்குதல். அஸ்ரப் நகர் திண்மக்கழிவு வளாகத்திலுள்ள கழிவுகளை மீள்சுழற்சிக்கு உட்படுத்தல். சேனநாயக்க சமுத்திரத்தினால் பாதிக்கப்பட்டு சதுப்பு நிலமாக மாறியுள்ள அட்டாளைச்சேனை வயல் காணிகளை மீண்டும் விவசாயம் செய்யும் காணிகளாக மாற்றுதல் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.