கடந்த பதிவின் தொடர்ச்சி............
மாவனல்லையில் முஸ்லிம்களுக்கு எதிரான பேரினவாதிகளின் வன்முறைக்கு இன்று 16 வருடங்கள்.
இந்தவிடயத்தை திரிவு படுத்தி முஸ்லிம்கள் சிங்களவர்களை தாக்க ஆயத்தமாவதாகவும், தாய் நாட்டை பாதுகாக்க சிங்களவர்கள் ஒன்றிணையுமாறும், சிங்கள இனவாதிகள் பாமர மக்களிடையே வதந்திகளை பரப்பியிருந்தனர். இதில் சிலர் முஸ்லிம்கள் கூடியிருந்த தினத்தன்று அவர்களும் நகரில் கூடியிருந்தனர்.
இந்த சந்தர்ப்பத்துக்காக காத்திருந்து அதனை சரியாக பயன்படுத்திய சிங்கள காடையர்கள் குழு, சிங்கள பாடசாலை ஒன்றுக்கு பின்புறமான ஒதுக்குப்புற பகுதியில் ஆயுதங்களுடன் சிலரை தயார்படுத்தி வைத்திருந்ததுடன், பல இடங்களிலும் சிங்களவர்கள் தாக்குதலுக்கு தயாராகுமாறு தகவல்களை பரிமாற்றிக் கொண்டனர்.
பாரிய சதித்திட்டமொன்று தங்களுக்கு எதிராக அரங்கேற்றப் படுகின்றது என்று அறியாது நகரில் கூடியிருந்த முஸ்லிம்கள் மீது திடீரென வந்திறங்கிய பொலிஸார் தூப்பாக்கிச் சூடு நடத்த ஆரம்பித்தார்கள்.
ஏற்கனவே தயார்நிலையிலிருந்த சிங்கள காடையர்கள் பொலிசாருடன் இணைந்து முஸ்லிம்களை தாக்க ஆரம்பித்ததுடன், முஸ்லிம்களின் கடைகளை அடித்து நொறுக்கியும், தீ வைத்தும், கொள்ளையடித்தும் முஸ்லிம்களின் பொருளாதாரத்தை சூறையாடும் படலத்தை பொலிஸாரின் முன்னிலையிலேயே அரங்கேற்றினர்.
தங்களுடைய உடமைகளைப் பாதுகாத்துக் கொள்வதற்காக முஸ்லிம்களும் தற்பாதுகாப்பில் இறங்கினர். சிங்கள காடையர்களை நகருக்குள் முன்னேற விடாமல் தடுக்கும் வகையில் பல தந்திரோபாயங்களை மேற்கொண்டார்கள்.
மாவனல்லை நகரில் ஏற்பட்ட தாக்கம் வேகமாக அதனை அண்டிய ஏனைய முஸ்லிம் பிரதேசங்களான பத்தாம்பிட்டிய, அரநாயக்க, திப்பிட்டிய, யஹம்மாத்துகம, கனேத்தன்ன போன்ற பகுதிகளுக்கும் பரவத் தொடங்கியது. இதனால் முஸ்லிம் மக்களின் பாதுகாப்பும், இருப்பும், பொருளாதாரமும் கேள்விக்குறியானது.
இச்சம்பவம் காட்டுத்தீ போன்று நாடுமுழுக்க பரவியது மட்டுமல்லாது உலக நாடுகளினதும் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அதன்பின்பே அப்போதைய சந்திரிகா அரசு இதனை தடுப்பதற்கான நடவடிக்கைகளில் இறங்கியது.
அங்குள்ள போலிசார் கலவரத்தினை தடுத்து நிறுத்துவதற்கு பதிலாக சிங்கள இனவாதிகளுக்கு துணைபோனதனால், விசேட பொலிஸ் குழு கொழும்பிலிருந்து அனுப்பப்பட்டதுடன். முழு நேர ஊரடங்குச் சட்டம் அமுலாக்கப்பட்டு இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுக்குள் மாவனல்லை நகரம் கொண்டு வரப்பட்டது.
இந்த கலவரத்தினை கேள்வியுற்று முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரவுப் ஹக்கீம் அவர்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்ததுடன், முஸ்லிம் மக்களுக்கு பாதுகாப்பு வளங்கத்தவறிய அரசாங்கத்துக்கு கண்டனத்தினை தெரிவித்ததுடன் இது பற்றி விவாதிப்பதற்கு உடனடியாக நாடாளுமன்றம் கூட்டப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
அமைச்சர் ரவுப் ஹக்கீமின் கோரிக்கைக்கு அமைய உடனடியாக நாடாளுமன்றம் கூட்டப்பட்டதுடன் விவாதங்களும் இடம்பெற்றன. ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு நேரடி விசேட உரையயொன்றை நிகழ்த்தி அமைதியையும், நல்லிணக்கத்தையும் வலியுறுத்தியிருந்தார்.
பாதிக்கப்பட்ட மாவனல்லை மக்களுக்காக நாடு முளுவதிலுமுள்ள முஸ்லிம்கள் துஆ பிராத்தனைகளில் ஈடுபட்டதுடன், முஸ்லிம்களை பாதுகாக்கத்தவறிய அரசாங்கத்துக்கு எதிராக ஹர்த்தால்களும் அனுஷ்டிக்கப்பட்டது.
குறிப்பாக கிழக்கு மாகாணம் முழுக்க ஹர்த்தால்களும், ஆர்ப்பாட்டங்களும் இடம்பெற்றதுடன், வெளிநாடுகளில் வாழ்கின்ற முஸ்லிம்களும் சந்திரிக்காவின் அரசாங்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டார்கள் இதனால் சந்திரிக்காவின் அரசாங்கம் சற்று ஆட்டம் கண்டது.
மாவனல்லையில் முஸ்லிம்களின் பொருளாதாரத்தை அழித்து அவர்களது ஆணவத்தை அடக்க வேண்டும் என்று பல வருடங்களாக திட்டமிட்ட சிங்கள பேரினவாதிகள், தங்களது திட்டப்படி இனவாத செயல்பாடுகளை கட்சிதமாக செய்து வெற்றி கண்டார்கள்.
இந்த கலவரத்தின் மூலம் இருவர் சஹீதானதுடன், இருபதுக்கு மேற்ப்பட்ட முஸ்லிம்கள் காயமடைந்தார்கள். மேலும் தற்காப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஏராளமான முஸ்லிம் இளைஞ்சர்கள் பொலிசாரினால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்கள்.
ஏராளமான முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் கொள்ளையடிக்கப்பட்டதுடன் 12௦ க்கு மேற்ப்பட்ட வியாபார நிலையங்கள் தீமூட்டி எரித்து சாம்பலாக்கப்பட்டது. அத்துடன் வாகனங்கள், எரிபொருள் நிரப்பு நிலையம், இரண்டு வரவேற்பு மண்டபங்கள், இரண்டு அரிசி ஆலைகள், இரண்டு ஆடை தொழிற்சாலைகள், ஒரு இறப்பர் தொழிற்ச்சாலை போன்றவைகளும் எரித்து சாம்பலாக்கப்பட்டது. இதனால் கோடிக்கணக்கான ரூபாய் முஸ்லிம்களின் பொருளாதாரம் அழிக்கப்பட்டது.
மேலும் ஏராளமான பள்ளிவாசல்கள் சேதமாக்கப்பட்டதுடன், அங்கிருந்த அல் குரான் பிரதிகள் எரிக்கப்பட்டு அப்பள்ளிவாசல்களில் இருந்த வரலாற்று ஆவணங்களும் அழிக்கப்பட்டது.
கலவரம் முடிவுக்கு வந்ததன்பின்னர் மாவனல்லை நகரம் சுடுகாடாக காட்சியளித்தது. இதனைக்கண்டு சிங்கள பேரினவாதிகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்கள். அதேநேரம் இந்த கலவரத்தினால் பாதிக்கப்பட்டு தங்களது அனைத்தையும் இழந்த முஸ்லிம்கள் தாங்கள் என்ன செய்வது என்று தெரியாமல் மிகவும் மன உளைச்சல்களுக்கு ஆளானார்கள்.
பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு முழுமையான நஷ்ட ஈட்டினை வழங்க சந்திரிக்கா அரசாங்கம் முன்வரவில்லை. இதனால் முழுமையான நஷ்ட ஈட்டினை முஸ்லிம் மக்களுக்கு வழங்கக்கோரி முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவுப் ஹக்கீம் ஜனாதிபதி சந்திரிக்காவுடன் முரண்பட்டார். இந்த முரண்பாடு ஆட்சி மாற்றத்துக்கு காரணமாகியது.
எனவே அன்று மாவனல்லை, பின்பு பேருவளை, அளுத்கம. நாளைக்கு எந்த பிரதேசமோ தெரியவில்லை. இப்படியாக சிங்கள பேரினவாதிகளின் இனவாத செயல்பாடுகள் அவர்களது நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப தொடர்ந்து கொண்டே செல்கின்றது.
அதற்கான எந்தவித முன்னேற்பாடுகளும் எங்களிடமில்லை. அதாவது நாங்கள் எங்களது எதிர்கால பாதுகாப்பு பற்றி சிந்திப்பதில்லை. பாதுகாப்பில்லாத பொருளாதார முன்னேற்றம் பற்றி மட்டுமே சிந்திக்கின்றோம். இதன்மூலம் முஸ்லிம்களின் எதிர்கால சந்ததிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாக இருப்பதோடு இன்னுமொரு மாவனல்லை உருவாகமாட்டாது என்று கூறுவதற்கு எந்த உத்தரவாதமுமில்லை.
முகம்மத் இக்பால்,
சாய்ந்தமருது.