NFGG ஊடகப் பிரிவு-
"உங்கள் வருகைக்காக மண்ணாக்கப்பட்ட ஏறாவூர் பாடசாலை மைதானத்தை சீரமைப்பதற்கான பணிப்புரையை வழங்குதோடு ,தங்களின் பெயரைப் பயன்படுத்தி நடைபெறும் இது போன்ற வீண் விரயங்களையும், துஸ்பிரயோகங்களையும் எதிர்காலத்திலாவது உன்னிப்பாக அவதானித்து கட்டுப்படுத்துங்கள்" என நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளது.
சில மாதங்களுக்கு முன்னால் ஜனாதிபதியின் வருகைக்கென செய்யப்பட்ட தீவிர ஏற்பாடுகளின் காரணமாக சேதமாக்கப்பட்ட ஏறாவூர் பாடசாலை மைதானம் ஒன்று தொடர்பாக ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்திலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.
"மட்டக்களப்பு ஏறாவூர் பிரதேச மக்களினது சார்பாக குறிப்பாக ஏறாவூர் அலிகார் மத்திய கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் சார்பாக இந்தக் கோரிக்கையை முன்வைக்கின்றோம்.
கடந்த பெப்ரவரி முதலாம் திகதி மட்டக்களப்பிற்கு விஜயம் செய்திருந்த நீங்கள் ஏறாவூருக்கும் விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தீர்கள்.
கிழக்கு முதலமைச்சர் உள்ளிட்ட உள்ளூர் அரசியல் பிரமுகர்களினால் தங்கள் வருகைக்கான எற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன. குறிப்பாக ஏறாவூர் அலிகார் வித்தியாலயத்திற்கு சொந்தமான மைதானத்தில் உங்களை வரவேற்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இறுதி நேரத்தில் மழை பெய்ததன் காரணமாக அம் மைதானத்தின் சில இடங்களில் நீர் நிறைந்து காணப்பட்டது. அதனை சமாளிப்பதற்காக உங்களது வரவேற்பாளர்களினால் பெருந்தொகை மணலை கொட்டி அம்மைதானம் அவசர அவசரமாக நிரப்பப்பட்டது.
ஓரளவு சிறந்த கிறவல் மேற்பரப்பைக் கொண்ட அம்மைதானத்தில் மண்ணைக் கொட்டி நிரப்பினால் அம்மைதானத்தின் நிலை என்னவாகும் என்பது பற்றி அவர்கள் யாரும் கவலைப்படவில்லை. அவர்களுக்கு தேவைப்பட்டதெல்லாம் நீங்கள் வருகை தரும் ஓரிரு மணித்தியாலயங்களில் அம்மைதானத்தில் மண்ணையும் நிரப்பி மக்களையும் நிரப்பி கூட்டத்தை சிறப்பாக நடாத்தி விட்டதாக உங்களுக்குக் காட்டி விடுவதுதான்.
இந்நிகழ்வு முடிந்து இப்போது மூன்று மாதங்களாகி விட்டன. இம்மைதானம் கால் புதையும் மண்ணைக் கொண்ட மணல் மேடாக மாறியுள்ளது. இம்மைதானத்தை பாவிக்க முடியாத நிலைமைக்கு அப்பாடசாலை மாணவர்களும் இப்பிரதேச மக்களும் தள்ளப்பட்டுள்ளனனர். (இம்மைதானம் உங்கள் வரவுக்கு முன்னால் எப்படி இருந்தது. உங்கள் வரவுக்குப் பின்னர் இப்போது எப்படி இருக்கிறது என்பதைத் தெளிவாகக் காட்டும் புகைப் படங்களையும் இத்துடன் இணைத்துள்ளேன்.)
இம்மைதானத்தை பாவிக்கக்கூடிய நிலையில் சீர் படுத்தித் தருமாறு பிரதேச மக்கள் சம்மந்தப்பட்ட அனைவரையம் கேட்டு விட்டனர். எதுவும் இதுவரை நடை பெறவில்லை. இதனை ஊடகங்களில் சுட்டிக்காட்டிய அரசாங்க உத்தியோகத்தர்கள் சிலரை இடமாற்றம் செய்வோம் என்ற அச்சுறுத்தல் மாத்திரமே உங்கள் வருகைக்கான ஏற்பாடுகளைச் செய்த அரசியல் வாதிகளின் தொண்டர்களிடமிருந்து கிடைத்திருக்கிறது.
மேலும் உங்கள் வருகைக்கான ஏற்பாடுகளுக்காக பெருமளவு பொதுப்பணமே செலவு செய்யப்பட்டுள்ளதாகவும் அறியக்கிடைக்கிறது.அரசியல் தேவைகளுக்காக எவ்வாறு பொதுச் சொத்துக்களும், பொதுப்பணமும் நாசம் செய்யப்படுகிறது என்பதற்கு மற்றுமொரு உதாரணமாக இது மாறியிருக்கிறது.
இது போன்ற துஸ்பிரயோகங்களை இல்லாமல் செய்வோம் என்பதுவும் உங்களுக்காக வாக்குகளைக் கோரிய போது நீங்களும் நாங்களுமாக மக்களுக்கு வழங்கிய வாக்குறுதி என்பதனை நீங்கள் மறந்திருக்கப மாட்டீர்கள் என நம்புகின்றோம்.தமது பிரதேசத்திற்கு ஜனாதிபதியொருவர் வருகை தரும் போது அந்த வரவானது தமது வாழ்வு நிலைமைகளில் ஒரு சிறு முன்னேற்றத்தையாவது ஏற்படுத்த வேண்டும் என்றே மக்கள் எதிர்பார்க்கிறார்கள். ஆனால், இங்கு உங்கள் வரவானது மக்களிக்கிருந்த மைதானம் என்ற வசதியையும் இல்லாமல் செய்திருக்கறது என்பது துரதிஷ்டமானதாகும்.
எனவே, உங்கள் வரவைக் காரணமாக்கி நாசமாக்கப்பட்ட மைதானத்தை உடனடியாக சீர் செய்து கொடுக்குமாறு சம்மந்தப்பட்டவர்களுக்கு கட்டளையிடுமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம். மேலும் தங்களின் பெயரைப் பயன்படுத்தி நடைபெறும் இது போன்ற வீண்விரயங்களையும் துஸ்பிரயோகங்களையும் எதிர்காலத்திலாவது உன்னிப்பாக அவதானித்து கட்டுப்படுத்துமாறும் கேட்டுக் கொள்கிறோம்"