ஊடகப்பிரிவு-
வடக்குக் கிழக்கில் அழிந்து போன தொழிற்சாலைகளை புனரமைப்புச் செய்து மீண்டும் வினைத்திறன் கொண்ட தொழிற்சாலைகளாக அவற்றை இயங்கச் செய்வதற்கான வேலைத்திட்டத்தை கைத்தொழில் வர்த்தக அமைச்சு ஆரம்பித்துள்ளதாகவும் வட மாகாண சபை, கிழக்கு மாகாண சபை, அவ்விரண்டு மாகாணங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள், மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பூரண ஒத்துழைப்பு நல்க வேண்டுமென அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பாராளுமன்றில் தெரிவித்தார்.
கைத்தொழில் வர்த்தக அமைச்சின் கீழான கம்பனி பதிவாளர் திணைக்களத்தின் கீழ் வரும் நிறுவனங்கள் மற்றும் சங்கங்கள், குழுமங்களின் மீளமைக்கப்பட்ட பதிவுக்கட்டணங்கள் தொடர்பில் பாராளுமன்றத்தின் அங்கீகாரத்தைப் பெறுவதற்கான பத்திரத்தை சமர்ப்பித்து உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
அமைச்சர் மேலும் கூறியதாவது,
கடந்த வரவு செலவுத் திட்டத்தில் நிதியமைச்சர் ரவி கருணாநயக்கவின் பிரேரணையில் கூறப்பட்டதற்கிணங்க இந்தக் கட்டணங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளதென அவர் தெரிவித்தார்.
வடக்குக் கிழக்கில் கைத்தொழிற்சாலைகளை வினைத்திறனாக்குவதன் மூலம் பல்வேறு நன்மைகளை பெற்றுக்கொள்ள முடியுமெனவும் இதனால் பாரிய பல வேலைத்திட்டங்களை முன்னெடுக்க முடியுமெனவும் தெரிவித்தார்.