எஸ். ஹமீத்-
முஸ்லிம் தேசங்களின் தூதுவர்களும் இந்த அரசில் நம்பிக்கையிழந்து விட்டார்கள் என்பதைக் கடந்த 06 -05 -2017, சனிக்கிழமையன்று கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் நடந்த பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் செய்யித் ஷகீல் ஹுசைன் அவர்களுக்கான பிரியாவிடை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இலங்கைக்கான முஸ்லிம் நாடுகளின் தூதுவர்கள் பலரிடையே நடந்த கருத்துப் பரிமாறல்கள் மூலம் உணர்ந்து கொள்ள முடிகிறது.
ஹில்டன் ஹோட்டலுக்கு வந்திருந்த இலங்கைக்கான முஸ்லிம் நாடுகள் பலவற்றின் தூதுவர்களும் அங்கே மனம்விட்டுத் தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது, நடந்து முடிந்த இலங்கையின் மே தினம் பற்றியும் அவர்கள் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டார்கள். கோல்பேஸ் திடலில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்காகத் திரண்டிருந்த மக்கள் வெள்ளத்தைப் பற்றி அவர்கள் ஆச்சரியப்பட்டுப் பேசினார்கள். அடுத்த ஆட்சியை மகிந்த ராஜபக்ஷ மிக எளிதாகக் கைப்பற்றிக் கொள்வாரென்றும் அவர்கள் தங்களுக்கிடையே கூறிக் கொண்டார்கள்.
மேலும், இந்த அரசாங்கம் முஸ்லிம்களின் மீதோ, அல்லது முஸ்லிம் நாடுகளின் மீதோ தக்க அக்கறையற்றிருப்பதாகவும், பாரபட்சமாக நடந்து கொள்வதாகவும் அங்கு பேச்சுக்கள் அடிபட்டன. அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளைத் திருப்திப்படுத்துவதற்கும் அவர்களது நலன்களை இலங்கையில் முன்னெடுப்பதற்கும் மிக்க ஆவலோடு இருக்கும் இந்த அரசாங்கமானது முஸ்லிம் நாடுகளின் மீதான வெளிநாட்டுக் கொள்கையில் அத்தனை திருப்திகரமாக நடந்து கொள்வதில்லையென்றும் அவர்கள் மனம் வருந்திக் கொண்டார்கள்.
மகிந்த காலத்தில் ஹஜ்ஜுக்குச் செல்வோர்களின் எண்ணிக்கையை சவூதி அரேபியா குறைத்தாலும் கூட அந்த எண்ணிக்கையைப் போராடி அதிகரித்துக் கொள்வதில் மகிந்தவின்அரசு முனைப்புடன் செயற்பட்டதாகவும், ஆனால் இந்த அரசாங்கம் ஹஜ் கோட்டா பற்றியெல்லாம் எவ்விதக் கரிசனையுமின்றிச் செயற்படுவதாகவும் அங்கு ஒரு முஸ்லிம் நாட்டுப் பிரதிநிதி விசனப்பட்டுக் கொண்டார்.
தங்கள் மீதான இனவாதச் செயற்பாடுகளை புதிய அரசாங்கம் முழுமையாக இல்லாதொழிக்குமென்ற நம்பிக்கையிலேயே இலங்கை முஸ்லிம் மக்கள் மகிந்த அரசுக்கெதிராக வாக்களித்திருந்தார்களென்றும் ஆனால், இந்த அரசாங்கம் அதனைச் செய்யத் தவறிவிட்டது என்றும், அதேவேளை தனது ஆட்சியில் முஸ்லிம் மக்களுக்கு ஏற்பட்ட துயரங்களுக்கும் அசௌகரியங்களுக்கும் மகிந்த ராஜபக்ஷ தற்போது பகிரங்கமாக மன்னிப்புக் கேட்பது சிறந்த விடயமென்றும் இன்னொரு பிரதிநிதி கருத்துத் தெரிவித்தார்.