மு.இ.உமர் அலி-
சிறுநீரகம் செயலற்றவர்களின் இரத்தத்தினை சுத்திகரிக்கும் வசதிகளுடன் கூடிய நவீன மயமான விடுதி ஒன்று (DIALYSIS UNIT) இன்று கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சுகாதார பிரதி அமைச்சர் பைசால் காசீம் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது
இப்பிரதேசத்தில் உள்ள சிறுநீரக நோயாளிகள் தமது நோய்நிலையை தணித்துக்கொள்வதற்காக குருதியை சுத்திகரிக்கும் நோக்கில் மட்டக்களப்பு அம்பாறை மற்றும் நாட்டின் பல இடங்களுக்கு சென்று இன்னல்களை அனுபவிக்கின்றனர்.
ரூபா 13 மில்லியன் பெறுமதியான இப்பிரிவினை இங்கு ஆரம்பித்து வைப்பதனால் இப்பிராந்திய மக்களுக்கு மிகவும் பிரயோசனமாக இருக்கும்.
பைசால் காசீம் அவர்கள் பிரதியமைச்சராக பதவியேற்றபின்னர் அவரது வேண்டுகோளிற்கினங்க இதுபோன்ற சிறுநீரக சுத்திகரிப்பு நிலையங்களை அம்பாறை மாவட்டத்தில் பொத்துவில்,சம்மாந்துறை,தெகியத்தகண்டி மற்றும் நிந்தவூர் ஆகிய ஆதார வைத்தியசாலைகளிலும் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்விற்கு தலைமை தாங்கிய இவ்வைத்தியசாலையின் அத்தியட்சகர் டாக்டர் பளீலுள் ரகுமான் அங்கு நன்றி தெரிவித்து உரையாற்றுகையில்..
“இவ்வைத்தியசாலை ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்து மறைந்த தலைவர் MHM அவர்களிற்கு பின்னர் பிற பிரதேசங்களை சேர்ந்த பல சுகாதார அமைச்சர்கள் உதவி புரிந்துள்ளார்கள்,எமது பிரதேசத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல்வாதிகளிடமிருந்து குறிப்பிடத்தக்க பாரிய உதவிகளை பெற்றுக்கொள்ள முடியவில்லை.ஆனால் பிரதியமைச்சர் பைசால்காசீம் அவர்கள் இவ்வைத்தியசாலைக்கு அனைவரையும் விட அதிகளவிலான நிதிகளை பெற்றுத்தந்துள்ளார்.பிரதேச மக்களது சார்பாக அவருக்கு நான் விசேடமாக நன்றிகூற கடமைப்பட்டுள்ளேன்.
அவரது இந்த பிரதியமைச்சர் பதவியினை பயன்படுத்தி அவரிடமிருந்து இன்னும் பல சேவைகளை நாம் பெற்றுக்கொள்ள வேண்டும்.அத்துடன் இந்த வைத்தியசாலையானது கல்முனைக்குடிக்கு மட்டும் உரியது அல்ல என்பதனை நாமனைவரும் விளங்கிக்கொள்ள வேண்டுமெனவும் கூறினார்.
அமைச்சருக்கு வைத்தியசாலையின் பிரிவுகள் சார்பாக பொன்னாடையும் போர்த்தப்பட்டது.
பிரதியமைச்சர் பைசால்காசீமவர்களது முயற்சியின் பயனாக ஆறுமாடிகளுடன் கூடிய நவீன வசதிகளுடன் கூடிய அவசரசிகிச்சை மற்றும் விபத்துச்சேவை பிரிவொன்றினை இவ்வைத்தியசாலையில் நிர்மாணிக்க அரசினால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பது நாமனைவரும் அறிந்த விடையமே !