இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக இஸ்லாமிய கற்கைகள், அரபு மொழி பீடமானது தனது நான்காவது சர்வதேச ஆய்வரங்கினை இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் செப்டம்பர் 20 ம் திகதி நடாத்த திட்டமிட்டு வருகிறது. ”Contemprary Issues in Islamic & Arabic Studies : The way forward” எனும் தொனிப்பொருளில் நடைபெறவுள்ள இவ்வாய்வரங்குக்கு ஆய்வாளர்களிடமிருந்து ஆய்வுக்கட்டுரைகள் கோரப்படுகின்றன.
இஸ்லாமிய மற்றும் அரபு மொழிக் கற்கைகள் தொடர்பில் ஏராளமான ஆய்வு இடைவெளிகளும், கண்டடையப்பட வேண்டிய ஆய்வுப் பிரச்சினைகளும், புதிய கண்டுபிடிப்புக்களும், தற்கால சமூக நீரோட்டத்தில் அவசரமாக தீர்க்கப்பட வேண்டிய சமூகம் மற்றும் மொழி சார்ந்த பிரச்சினைகளும் நிலவிவரும் இந்த சூழலில் மிக முக்கியமான ஆய்வுக்கருப்பொருளுடன் இஸ்லாமிய கற்கைகள், அரபு மொழி பீடமானது தனது நான்காவது சர்வதேச ஆய்வு மாநாட்டை வடிவமைத்துள்ளது.
இச்சர்வதேச ஆய்வரங்கானது இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிம் அவர்களின் ஆலோசனையின்கீழ் பீடத்தின் பீடாதிபதி அஷ்-ஷெய்க் எஸ்.எம்.எம். மசாகிர் அவர்களின் தலைமைப் பொறுப்புடனும், சிரேஷ்ட விரிவுரையாளரும், அரபு மொழித் துறைத்தலைவருமான எம்.எச்.ஏ. முனாஸ் அவர்களின் ஒருங்கிணைப்பின் கீழும், சிரேஷ்ட விரிவுரையாளரும், இஸ்லாமிய கற்கைகள் துறையின் துறைத்தலைவர் எம்.எச்.எம். நைரூஸ் அவர்களின் நிதியாள்கையின் கீழும், தகவல் தொழிநுட்ப விரிவுரையாளர் எப்.எச்.ஏ. ஷிப்லி அவர்களின் செயலாற்றுகையின் கீழும், ஏனைய சிரேஷ்ட விரிவுரையாளர்களின் குழுப்பங்களிப்புடனும் இன்ஷா அல்லாஹ் வெகு சிறப்பாக இடம்பெற ஏற்பாடுகள் நடைபெற்றுவருகின்றன.
பின்வரும் உபபிரிவுகளில் உங்கள் ஆய்வுக்கட்டுரைகள் எதிர்பார்க்கப்படுகின்றன.
01. இஸ்லாமிய சிந்தனையும், நாகரீகமும்
a. இஸ்லாமிய சிந்தனையும், நாகரீகமும்
b. இஸ்லாமியக் கல்வியும் வரலாறும்
c. இஸ்லாமும் விஞ்ஞானமும்
d. முஸ்லிம் சிறுபான்மையினர்
e. இஸ்லாமும் இன ஒற்றுமையும்
f. இஸ்லாமிய அரசியல் சிந்தனைகள்
02. இஸ்லாமிய சட்டம்
a. முஸ்லிம் தனிநபர் சட்டம்
b. இஸ்லாமும், பாரம்பரிய சட்டமும்
c. இஸ்லாமிய நீதி பரிபாலனம்
03. இஸ்லாமிய வங்கியும் நிதியியலும்
a. இஸ்லாமியப் பொருளியல்
b. இஸ்லாமிய வங்கியும் நிதியியலும்
c. இஸ்லாமிய கண்ணோட்டத்தில் முகாமைத்துவமும், தலைமைத்துவமும்
d. இஸ்லாமிய வங்கி முறைமையும், பாரம்பரிய வங்கி முறைமையும்
04. அரபு மொழியும், இலக்கியமும்
a. அரபு மொழியும் இலக்கணமும்
b. அரபு இலக்கியம்
c. சொல்லாட்சி ஆய்வுகள்
d. புனித அல்-குரானின் முன்மாதிரிகள்
e. அரபு மதரசா கல்வி முறைமை
f. ஒப்பீட்டு இலக்கிய ஆய்வுகள்
g. அரபு-தமிழ் இலக்கியம்
05. மொழியியலும், மொழிபெயர்ப்பும்
a. மொழி பெயர்ப்பும், வெளிநாட்டு மொழிகளும்
b. மொழியும், தகவல் தொழினுட்பமும்
c. மொழியும், கல்வி உளவியலும்
d. இரண்டாம் மொழியாக அரபை கற்பித்தல் தொடர்பான ஆய்வுகள்
e. மொழியியல் கற்கைகள்
மேற்படி பிரிவுகளில் அமையப்பெறும் ஆய்வுக்கட்டுரைகளை தமிழ், அரபு, சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் உங்களுக்குப் பொருத்தமான ஏதேனும் ஒரு மொழியில் சமர்ப்பிக்க முடியும். ஒருவர் முதன்மை ஆய்வாளராக அதிகபட்சம் இரண்டு ஆய்வுக்கட்டுரைகளை சமர்ப்பிக்க முடியும்.
ஆய்வுக்கட்டுரைகள் மற்றும் சர்வதேச ஆய்வு மாநாடு தொடர்பான எல்லா விடயங்களையும்www.seu.ac.lk/intsymfia2017 எனும் ஆய்வு மாநாட்டின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ள முடியும். அத்தோடு fiaintsymp2017@gmail.com எனும் மின்னஞ்சல் ஊடாகவும் உங்கள் சந்தேகங்கள் மற்றும் மேலதிக விபரங்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.
ஆய்வு மாநாட்டுக்கான ஆய்வுக்கட்டுரைகளை இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் ஜூன் 09 ம் திகதிவரை சமர்ப்பிக்க முடியும். இணையத்தளத்தில் காணப்படும் மாதிரி ஆய்வுக்கட்டுரை அமைப்பை பின்பற்றி உங்கள் ஆய்வுக்கட்டுரைகளை தயாரித்து fiaintsymp2017@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு முடிவுத்திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்கவும்.
எப்.எச்.ஏ. ஷிப்லி,
செயலாளர்,
நான்காவது சர்வதேச ஆய்வு மாநாடு,
இஸ்லாமிய கற்கைகள் அரபு மொழி பீடம்,
இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகம்.