எந்தத் தடைகள் வந்தாலும் எங்களை சிறையில் அடைத்தாலும் ஜனாதிபதியினால் எம் மீது எத்தனை அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டாலும் மாயக்கல்லியில் விகாரை அமைத்தே தீருவதென நாம் உறுதி பூண்டுள்ளோம்.
அமைச்சர் ரவூப் ஹக்கீமினாலோ முதலமைச்சரினாலோ எம்மைக் கட்டுப்படுத்த முடியாது என சிங்கள ராவய அமைப்பின் செயலாளர் மாகல்கந்தே சுதந்த தேரர் தெரிவித்தார்.
மாயக்கல்லி விவகாரம் தொடர்பிலும் எதிர்கால முன்னெடுப்புகள் தொடர்பிலும் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு கூறினார். அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்; மாயக்கல்லி பிரதேசம் தொல்பொருள் வலயமாக தொல்பொருள் சட்டத்தின் கீழ் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. மாயக்கல்லி மலையில் எமது புராதன சைத்திய ஒன்று இருந்துள்ளது. அந்த சைத்தியவையும் தொல்பொருட்களையும் முஸ்லிம்கள் அகழ்ந்து எடுத்துள்ளார்கள்.
தீகவாபி சைத்திய மாணிக்கம் களஞ்சியப்படுத்துவதற்காக சிங்கள மன்னர்களால் கொண்டுவரப்பட்டுள்ளது. இதனாலே இப்பகுதி மாணிக்கமடு என தமிழர்களால் அழைக்கப்படுகிறது. மதத்தலங்கள் மக்களை நல்வழிப்படுத்துவதற்காகவும் நல்லிணக்கத்தை போதிப்பதற்காகவுமே நிர்மாணிக்கப்படுகின்றன.
அப்படியென்றால் கிழக்கில் எம்மால் விகாரை அமைக்க முடியாதா?கிழக்கில் உள்ள முஸ்லிம்கள் அங்கு விகாரை அமைப்பதை எதிர்ப்பதென்றால் அவர்கள் தெற்கில் இருக்கும் பள்ளிவாசல்கள் அனைத்தையும் அங்கிருந்து அகற்றி கிழக்குக்கு மாற்றிக் கொள்ள வேண்டும்.
மாயக்கல்லி பகுதியில் விகாரை அமைக்கும் எமது திட்டத்தை எவராலும் தடுத்து நிறுத்த முடியாது. பௌத்த தேரர்கள் நாம் இரத்தம் சிந்தியாவது விகாரையை நிர்மாணித்தே தீருவோம்.விகாரை நிர்மாணிப்பதை எதிர்ப்பதும் தடுக்க முயற்சிப்பதும் நல்லிணக்கத்தையும் இன நல்லுறவையும் இல்லாமற் செய்வதற்கு சமமாகும்.
முஸ்லிம் அடிப்படைவாதிகளும் தங்களது சுயநலத்திற்காக அரசியல் செய்யும் ரவூப் ஹக்கீம் போன்றவர்களுமே விகாரை நிர்மாணிக்கப்படுவதை எதிர்க்கின்றனர்.ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விகாரை அமைக்கப்படுவதை எதிர்க்கமாட்டாரென நாம் நம்புகிறோம் என்று தெரிவித்துள்ளார்.
விடிவெள்ளி