புதிய அரசியலமைப்பை நிறைவேற்றுவதற்கு நாட்டு மக்கள் அனைவரும் எம்முடன் கைக் கோர்க்க வேண்டும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். கொழும்பு, கெம்பல் மைதானத்தில் நேற்று இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினக் கூட்டத்தின்போதே அவர் இவ்வாறு கூறினார்.
இதன்போது தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
நாட்டை கட்டியெழுப்பி முன்னோக்கிச் கொண்டுசெல்ல வெளிநாட்டு முதலீடுகள் அதிகமாக தேவைப்படுகின்றது. அரச சொத்துகளை வழங்காது, முதலீடுகளை பெற்றுக்கொள்ள மாற்று வழி இருந்தால் அது தொடர்பிலும் நிச்சயமாக அவதானம் செலுத்த வேண்டும். இந்த பயணத்துக்கு நாட்டு மக்களும் அரசுக்கு ஒத்துழைக்க வேண்டும்.
மேலும், கடந்த அரசு காலத்தில் பலர் அரசியல் பழிவாங்களுக்கு உள்ளாக்கப்பட்டமை அனைவரும் அறிந்த ஒரு விடயமே. இரண்டு வருடங்களுக்கு முன்னர் நாங்கள் உருவாக்கிய நல்லாட்சி அரசில் தான் இவற்றுக்கான நிவாரணங்களும் வழங்கப்படுகின்றன.
இவ்வாறு இன்னும் நிறைவேற்றவேண்டிய பல விடயங்கள் நாட்டில் காணப்படுகின்றன. அந்தவகையில், புதிய அரசியலமைப்பை நிறைவேற்றுவது அத்தியாவசியத் தேவையாகக் காணப்படுகின்றது.
அதிகார பகிர்வு, புதிய தேர்தல் முறை போன்ற முக்கிய விடயங்களும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன. இந்தக் கடமையை நிறைவேற்ற நாட்டு மக்களும் எம்முடன் கைக்கோர்த்து செயற்பட வேண்டும் என்றார்.
அ.அருண் பிரசாந்த், எஸ்.பர்சான்.