எஸ்.ஹமீத்-
காலியைச் சேர்ந்த அவன் காதலித்துத்தான் மஹியங்கனையைச் சேர்ந்த அந்தப் பெண்ணை மணந்து கொண்டான். நல்ல காதலனாக இருந்த அவன் அவளுக்கு ஓர் அருமையான கணவனாகவும் இருந்தான். எட்டு வருடங்களில் இரண்டு பிள்ளைகளுக்குத் தந்தையானான். 5 வயது மற்றும் 3 வயதுகளில் இரு குழந்தைகள்.
தக்க தொழிலின்மையால் அவனையும் குடும்பத்தையும் வறுமை சுட்டுப் பொசுக்கத் தொடங்கியது. வேறு வழியில்லாமல் வெளிநாட்டுக்கு உழைப்பதற்காகச் சென்றான் அவன்.
வெளிநாடு சென்ற சில மாதங்களுக்குள் அவனது நண்பர்களிடமிருந்து அவனுக்கு அதிர்ச்சியையும் ஆறாத சோகத்தையும் சுமந்தபடித் தகவல்கள் வரத் தொடங்கின. ''நண்பனே...உனது மனைவி இன்னொருவருடன் படுக்கையைப் பங்கிட்டுக் கொண்டிருக்கிறாள்!''
முதலில் அவன் நம்பவில்லை. 'என் காதல் மனைவி அப்படிப்பட்டவளல்ல!' என்று தனது இதயத்துக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டான். ஆனால், நண்பர்கள் மீண்டும் மீண்டும் சொன்னார்கள். 'நீ நாட்டுக்கு வந்தால் உண்மையைக் கண்டு கொள்வாய்.' என்றார்கள்.
தனது மனைவி ஒரு விபசாரி என்று கடைசியாக அறிந்து கொள்ளும் அபாக்கியசாலிதான் கணவன் என்று சொல்வார்கள். அந்தக் கடைசி மனிதனாகத் தான் இருந்துவிடக் கூடாது என்று அவன் பிரார்த்தனை செய்து கொண்டான். எனினும், நண்பர்களின் வற்புறுத்தலின் பேரில் நாட்டுக்கு வர முடிவு செய்தான்.
'எனது அம்மா இறந்துவிட்டதாக நீங்கள் தகவல் அனுப்பினால், நான் அதனை எனது முதலாளியிடம் காட்டி நாட்டுக்கு வர முடியும்.' என்று நண்பர்களுக்குத் தெரிவித்தான். அவ்வாறே அவனுக்குத் தகவல் அனுப்பப்பட்டது. அவனும் நாட்டுக்கு வந்தான்.
நாட்டுக்கு வந்தவன் நண்பர்களோடு மறைந்திருந்தான். என்ன கொடுமை. அதோ, நபர் ஒருவர் அவனது வீட்டுக்குள் பதுங்கிப் பதுங்கிச் செல்கிறார்.
உலகத்தின் மொத்த வேதனைகளையும் அவனது நெஞ்சம் உள்வாங்கிக் கொண்டது போலிருந்தது. உள்ளுக்குள் பீறிட்டெழும் துன்பத்தைத் தாங்கி கொண்டு அவன் தன் வீட்டுக் கதவைத் தட்டினான்.
அங்கே...எதிர்பாராத ஒரு தருணத்தில் தன் கணவனைக் கண்ட அவனது மனைவி வெலவெலத்துப் போய் நின்றாள். அரைகுறை ஆடைகளோடு நின்றிருந்த அவளை மௌனமாகப் பார்த்தபடி அவன் படுக்கையறையை அடைந்தான். படுக்கையறையின் கட்டிலில் மனைவியின் கள்ளக் காதலன் கண்ணயர்ந்தபடிக் கிடந்தான். இவனைக் கண்டதும் உடல் நடுங்க எழுந்தான்.
அந்த அன்பான கணவன் வெகு நிதானமாகத் தனது மனைவியின் கையைப் பிடித்து அழைத்து வந்தான். அவளது காதலனின் கையில் அவளது கையை ஒப்படைத்தான். 'நன்றாக இருங்கள்!' என்று கண்ணீரோடு வாழ்த்தினான்.
பின்னர் தனது இரண்டு பிள்ளைகளையும் பொறுப்பாகப் பார்த்துக் கொள்ளுமாறு அவர்களைக் கேட்டுக் கொண்டான். பிள்ளைகளுக்காகத் தான் வெளிநாட்டிலிருந்து கொண்டு வந்திருக்கும் எல்லாப் பொருட்களையும் அவர்களிடமே கொடுத்தான். மீண்டும் தான் வெளிநாடு சென்று மாதா மாதம் குழந்தைகளின் செலவுகளுக்காகப் பணம் அனுப்புவதாகவும் கூறினான்.
இறுதியில்...உறங்கிக் கொண்டிருந்த தனது இரு செல்வங்களையும் அணைத்துச் சற்று நேரம் கண்ணீர் விட்டு அழுதான். அதன் பின்னர் அவ்விடத்தை விட்டுச் சென்றுவிட்டான்.
இந்த நிகழ்வு மஹியங்கனை மக்களிடையே பலத்த சோகத்தையும் நெகிழ்வையும் ஏற்படுத்தியுள்ளது.