இவ்வாண்டு மே தினம் தனது ஆதரவாளர்கள் அதிகளவானோர் சகிதம் சிறப்பாகக் கொண்டாடப்பட்டதாக திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார்.
'கிண்ணியா மே தினத்தில் 3 எம்.பிக்களில் இருவரே பங்கேற்பு. ஒருவரைக் காணவில்லை' ஏன்ற செய்தி தொடர்பாக அவர் அனுப்பி வைத்துள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
நான் பிரதிநிதித்துவப் படுத்துகின்ற ஐக்கிய தேசியக் கட்சி மே தினத்தை ஆண்டாண்டு காலமாக தேசிய மட்டத்தில் கொண்டாடி வருவதை மே தினம் பற்றிய அறிவுள்ள அனைவரும் அறிவர். அந்த வகையில் திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த அதிகளவு ஆதரவாளர் சகிதம் கொழும்பு கெம்பல் பார்க் மைதானத்தில் நேற்று நடந்த ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினக் கூட்டத்தில் நான் கலந்து கொண்டேன்.
புல நூறு மைல்கள் வித்தியாசத்தில் நடைபெறும் இரு மேதினக் கூட்டங்களில் ஒருவரால் ஒரே நேரத்தில் கலந்து கொள்வது என்பது சாத்தியமான விடயமல்ல. கிண்ணியாவில் மே தினக் கொண்டாடத்தை ஏற்பாடு செய்தவர்களுக்கு இது நன்கு தெரியும். கொழும்பு மே தினக் கூட்டத்தில் அதிகளவு ஆதரவாளர் சகிதம் கலந்து கொள்ளும் என்னால் கிண்ணியா மே தினக் கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாது என்பதை எனக்கு அழைப்பிதழ் தர வந்தவர்கள் ஒத்துக் கொண்டார்கள்.
இந்த பின்புலத்தை தெரிந்து கொள்ளும் அறிவு இல்லாதவர்கள் மற்றைய இரு எம்.பிக்கள் கலந்து கொண்டார்கள் நான் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தேன் என்ற பாணியில் இச்செய்தியை எழுதியுள்ளார்கள்.
மற்றைய இருவரும் பிரதிநிதித்துவப் படுத்தும் கட்சிகள் மேதினக் கூட்டங்களை ஒழுங்கு படுத்துவதில்லை. அதனால் அந்தக் கட்சி எம்.பிக்களால் அன்றைய தினம் முடியுமான சகல வைபவங்களிலும் கலந்து கொள்ள முடியும் என்பதை நான் சொல்லித் தெரிய வேண்டுமென்பதில்லை.
கிண்ணியா மே தினக் கூட்டத்தில் இடம் பெற்ற வேண்டத் தகாத சம்பவங்கள் குறித்து சமூக வலைத்தளங்கள் மூலம் அறிந்து கொள்ள முடிகின்றது. புலர் இது தொடர்பாக விசனம் தெரிவித்து வருகின்றனர். நடுநிலை நின்று எழுதும் செய்தியாளர் ஒருவர் இந்த விடயங்களையும் குறிப்பிட்டிருக்க வேண்டும். ஆனால் அவர் இச்செய்தியை எழுதியதன் நோக்கம் என்னைக் குற்றம் காண்பதைத் தவிர வேறில்லை என்பதால் இதனை அவர் எழுதவில்லை போல் தெரிகின்றது.
நான் மக்கள் பிரதிநிதி என்ற வகையில் என்னை வெற்றி பெற வைத்தவர்களுக்கு முடியுமான சேவைகளை வழங்கி வருகின்றேன். தொடர்ந்தும் வழங்கி வருவேன். இது போன்ற காழ்ப்புணர்வு செய்திகள் எனது ஆதரவைக் கூட்டுமே தவிர ஒரு போதும் குறைக்கப் போவதில்லை என்பதைக் கூறிக்கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.