யாழ்ப்பாணம் புங்குடுதீவு பாடசாலை மாணவியான சிவலோகநாதன் வித்தியாவின் பாலியல் வல்லுறவு வழக்கானது கொழும்பு மேல் நீதிமன்றுக்கு மாற்றப்படவுள்ளது. குறித்த வழக்கானது ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றில் இடம்பெற்று நீதிவான் நீதிமன்ற விசாரணைகள் நிறைவுற்று வழக்கின் விசாரனை அறிக்கைகள் சட்டமா அதிபரிடம் சமர்பிக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் குறித்த வழக்கின் முதல் ஒன்பது சந்தேகநபர்களின் பிணை விண்ணப்பம் தொடர்பான வழக்கு விசாரணையானது யாழ்.மேல் நீதிமன்றில் கடந்தவாரம் எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தது. இதன்போது குறித்த வழக்கின் குற்றப் பத்திரத்தை இம் மாதம் 12ஆம் திகதிக்கு முன்னர் மேல் நீதிமன்றில் தாக்கல் செய்வதாக சட்டமா அதிபர் சார்பில் அரச சட்டவாதி உறுதியளித்திருந்தார்.
இவ்வாறான நிலையிலேயே குறித்த வழக்கை கொழும்பு மேல் நீதிமன்றுக்கு மாற்றவுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்கள தகவல்கள் தெரிவித்துள்ளன. இதன்படி இவ் வழக்கை ரயலட்பார் முறையிலான மூன்று சிங்களம் பேசும் பெரும்பான்மை இன நீதிபதிகள் முன்னிலையில் விசாரணை செய்யும் வகையில் குறித்த மூன்று நீதிபதிகளையும் பிரதம நீதியரசர நியமித்துள்ளதாகவும் உறுதியான தகவல்கள் தெரிவித்துள்ளன.