ஏ.எச்.ஏ. ஹுஸைன்-
சமத்துவ வளர்ச்சி, நிதி மற்றும் நிறுவனங்களுக்கான உலக வங்கியின் துணைத் தலைவர் ஜான் வலிஸர் இரண்டு-நாள் உத்தியோக பூர்வ விஜயத்தை மேற்கொண்டு வியாழக்கிழமை கொழும்பு வந்தடைந்தவர் சனிக்கிழமை 06.05.2017 திரும்பியுள்ளார்.
இந்த விஜயத்தின் போது இலங்கையின் மறுசீரமைப்பு நிகழ்ச்சிநிரல் தொடர்பாக நேரடியான புரிந்துணர்வை அவர் பெற்றுக்கொண்டார் என்று உலக வங்கியின் இலங்கைக்கான பிரதிநிதி டிலினிகா பீரிஸ்- ஹோல்சிங்கர் தெரிவித்துள்ளார்.
மறுசீரமைப்பு நிகழ்ச்சி நிரலானது, மேல்-நடுத்தர வருமான தகைமை கொண்ட நாடாக இலங்கை மாற்றமடைவதற்கும் பகிரப்படும் சுபீட்சத்தை அதிகரித்துக்கொள்வதற்கும் முக்கியமானதாகும் என உலக வங்கியின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
'பரந்துபட்ட ரீதியிலான நிதித்துறை, பொருளாதார மற்றும் ஆட்சிமுறை மறுசீரமைப்புக்களை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை உறுதியான அர்ப்பணிப்பை வெளிப்படுத்தியுள்ளது.
இந்த முன்முயற்சிகளுக்கு உலக வங்கி குழுமமானது தற்போது வழங்கிவருகின்ற ஆதரவை எவ்வாறு மேலும் வலுப்படுத்தமுடியும் என்பது தொடர்பாக அரசாங்கத்தரப்பினருடனான சந்திப்புக்களின் போது விளங்கிக்கொள்வதற்கு ஆவலுடன் எதிர்பார்த்திருக்கின்றேன்.' என வலிஸர் தெரிவித்தார்.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தினை நிறைவேற்றியமை தொடர்பாக அரசாங்கத்திற்கு பாராட்டுக்களைத் தெரிவித்துள்ள வலிஸர் 'அபிவிருத்தியின் வினைத்திறன்மிக்க தன்மை தொடர்பான அவதானக் குவிப்புடன் பயன்படுத்தப்படுமாக இருப்பின் இலங்கையின் சுபீட்சத்தை நோக்கிய பாதையில் தகவல் அறியும் உரிமைச் சட்டமானது ஒரு பெரும் மாற்றகரமான விடயமாக அமையும்.
இது அனைத்து பொதுமக்களுக்கும் விசேடமாக பொருளாதார ரீதியில்; நலிவடைந்தவர்களுக்கும், தனியார் அல்லது அரச சார்பற்ற துறையினர் மற்றும் ஊடகத்துறையினர் ஆகியோர் அரச துறையின் தீர்மானமெடுக்கும் செயற்பாட்டில் முக்கிய பங்காற்றுவதற்கான கருவியாக அமைந்துள்ளது.
தகவல் அறியும் உரிமைச் சட்ட நடைமுறைக்கிடலில் ஏனைய அபிவிருத்திப் பங்காளர்கள் மற்றும் முக்கியமான பங்குதாரர்களுடன் இணைந்து ஒத்துழைப்பை வழங்க உலக வங்கியின் உறுதிப்பாட்டை அவர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.