சிறிலங்காவில் வெள்ளம், நிலச்சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவிப் பொருட்களை இரண்டு கடற்படைக் கப்பல்களில் இந்தியா அனுப்பி வைத்துள்ளது.
மேல், தென் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் ஏற்பட்டுள்ள பாரிய வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகளினால் 91 பேர் உயிரிழந்ததாகவும், 110 பேர் காணாமல் போயுள்ளதாகவும், சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது.
இந்த அனர்த்தங்களினால் ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து நிர்க்கதியாக தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமாறு சிறிலங்கா அரசாங்கம் விடுத்த வேண்டுகோளை ஏற்று, இந்தியா இரண்டு கப்பல்களில் உதவிப் பொருட்களை அனுப்பியுள்ளது.
இந்தியக் கடற்படையின் கப்பல் ஒன்று உதவிப் பொருட்களுடன் நாளை கொழும்பு துறைமுகத்தை வந்தடையும் என்றும் மற்றொரு கப்பல், நாளை மறுநாள் கொழும்பு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.