பலயீனமான முஸ்லிம் தலைமைத்துவங்களும் அரசைக் குறைகூறும் பரிதாபமும்..!

சுதந்திர இலங்கையின் அரசுகள் அனைத்தும் பேரினவாதத்தையே தமது அடிநாதமாக கொண்டிருந்திருக்கின்றன; என்பதே வரலாறாகும். சிறுபான்மைகள் தங்களது உரிமைகளைப் பாதுகாத்துக்கொள்வது; என்பது ஒரு தொடர் போராட்டமாகும்.

தேசியக் கட்சிகளில் சிறுபான்மைகள், குறிப்பாக முஸ்லிம்கள் கொண்டிருந்த பிரதிநிதித்துவங்களுக்கு இந்த போராட்டத்தில் நின்றுபிடிப்பதற்கான வீரியம் இருக்கவில்லை; என்பதுதான் தனித்துவக்கட்சிகள் பிறந்ததற்கான அடிப்படையாகும். அடக்கியாள முற்படும் ஆட்சியாளர்களின் கட்சிகளில் அடங்கிப்போன பிரதிநிதித்துவங்கள் அடக்குமுறைகளுக்கெதிராக குரல் கொடுக்கமுடியாமல் போனமைதான் சுதந்திரக் குரலுக்கு வித்திட்டது.

இந்த சவாலான பணியை மறைந்த தலைமைத்துவம் கணிசமான அளவு திருப்திகரமாக செய்தது. அதன் அடையாளங்களில் ஒன்றுதான் அரசதுறையில் அதுவரை நான்கு விகிதமாகவும் ( state sector) அரச உயர்பதவிகளில் இரண்டு விகிதமாகவும் (bureaucracy) முஸ்லிம்கள் இருந்த சூழ்நிலையில் விகிதாசாரப்படி அரச நியமனங்கள் வழங்க வேண்டும்; என்ற கொள்கைத் தீர்மானத்தை எடுத்து சந்திரிகா அரசை அதனை அமுல்படுத்த வைக்கவும் செய்ததாகும். ( அவரின் மறைவிற்குப் பின் அம்முறை கைவிடப்பட்டு விட்டது).

கடந்த மகிந்த அரசில் இனவாத கொடுக்கான்கள் மூலமாக அதியுச்ச அடக்குமுறை பாவிக்கப்பட்டது. எனவே அந்த அரசினை தூக்கிவீசினோம். நல்லாட்சி அரசு நீதமாக நடக்கும்; என எதிர்பார்த்தோம். ஆனால் மஹிந்த அரசைவிட இது மோசமான அரசா? என்று சிந்திக்கின்ற அளவு நிலைமை இருக்கின்றது.

முஸ்லிம்களின் பாரம்பரிய பிரதேசங்களில் சிலைவைக்கப் படுகின்றது. முஸ்லிம் பெரும்பான்மைப் பிரதேசங்களில் இருக்கின்ற பிரதான அரச அலுவலகங்கள் பேரினவாதப் பிரதேசங்களுக்கு மாற்றப்படுகின்றன. எந்த ஞானசாரர்களுக்கெதிராக ஆட்சிமாற்றத்தைக் கொண்டுவந்தோமோ அவர்கள் இந்த ஆட்சியிலும் கோலோச்சுகிறார்கள். முஸ்லிம்களுக்கு காணிகள் வழங்குவதைவிட மிருகங்களுக்கு காணி வழங்குவது முக்கியம்; என்கின்ற நிலையில் அரசு இருக்கின்றது. போதாக்குறைக்கு முஸ்லிம்கள் ஈத்தம் பழத்தின் மூலம் நோன்பு திறப்பார்களா? அப்படியானால் அரசுக்கு விசேட ஜிஸ்தி ( வரி) கட்ட வேண்டும். இதுதான் இன்றைய நிலை.

இந்த நிலைமைக்கு தீர்வு என்ன? தலைவலிக்கு தலையணையை மாற்றுவது தீர்வாகுமா? இன்று மீண்டும் மஹிந்தவை ஆட்சிக்குக் கொண்டுவருவது தொடர்பாக பேச ஆரம்பித்திருக்கின்றோம். வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறாது; என்பதற்கு என்ன உத்தரவாதம்? எங்களது இந்த நிலைக்கு அரசுகளை மாற்றுவதுதான் தீர்வா?


நாங்கள் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். யார் ஆட்சிக்கு வந்தாலும் அது பேரினவாத ஆட்சிதான். யார் ஆட்சிக்கதிரையில் இருந்தாலும் பேரினவாதம் தன் குணத்தைக் காட்டத்தான் செய்யும். ஆட்சிக்கட்டிலை அலங்கரிப்பவரைப் பொறுத்து பேரினவாதத்தின் வீரியத்தில் ஏற்றத்தாள்வுகள் ஏற்படலாம். ஆனால் பேரினவாதம் தன் இயற்கைக் குணத்தை மாற்றிக்கொள்ளாது. எனவே பேரினவாதத்தின் விசை நம்மை ஒரு பக்கம் அழுத்துகின்றபோது, அந்தப் பேரினவாதத்தை எதிர்த்திசையில் அழுத்துகின்ற நமது அரசியல் வீரியத்தின் வீச்சுதான் இந்த சமன்பாட்டின் சமத்துவத்தை அளவிடுகின்ற அளவுகோலாகும்.

இந்த சமன்பாட்டை சமப்படுத்தத்தான் நமக்கு தனித்துவ அரசியல் தேவைப்பட்டது. அதை மறைந்த தலைவர் கணிசமான அளவு நிறைவேற்றினார். ஆனால் இன்று நடப்பதென்ன? நமது தாயகத்தை ஆதிக்க வெறி பிடித்தவர்கள் சிலை கொண்டு கபளீகரம் செய்ய முற்படும்போது, நமது காரியாலயங்கள் நம்மிடமிருந்து பிரிக்கப்படும்போது, நமது உரிமைகள் ஒவ்வொன்றாக பறிக்கப்படும்போது கையறுநிலையில் இருந்துகொண்டு, " வாய் இல்லாவிட்டால் காகம் கொண்டு போய்விடும்" என்பதுபோல வீரம்பேசிக் கொண்டிருக்கின்றோம்.

மறுபறம் 2012 ம் ஆண்டு வன்னியில் 12000 ஏக்கர்தான் பறிபோனது. போராடியதாகச் சொன்னோம். நமது போராட்டத்தின் கெட்டித்தனம் இன்று ஒரு இலட்சம் ஏக்கர்களை பறிகொடுத்துவிட்டு நிற்கின்றோம்.

எனவே நமது பலயீனம் நாம் தெரிவுசெய்த தலைமைத்துவங்களிலும் பிரதிநிதித்துவங்களிலும்தான் இருக்கின்றது; என்பது புரியவில்லையா? அரசை மாற்றவேண்டும்; என்று சிந்திக்கின்ற நாம் நமது தலைமைத்துவங்களை, பிரதிநிதித்துவங்களை மாற்றவேண்டும்; என யோசிக்கின்றோமா?

தேர்தல் வந்தால் அவர்களுக்கே வாக்களிப்போம். அடுத்த ஆறுவருடங்கள் அவர்களைத் திட்டித்தீர்ப்போம். அடுத்த தேர்தலிலும் அவர்களுக்கே வாக்களிப்போம். மீண்டும் அதே புலம்பல். ஒரு முஸ்லிம்/ முஃமின் ஒரு குழியில் ஒரு முறைதான் விழுவான்; என்பது நபி ( ஸல்) வாக்கு. ஆனால் நாம் திரும்பத்திரும்ப அதே குழியில் விழுந்து கொண்டு அதே புலம்பலைப் பாடுகின்றோமே? நாம் திருந்தமாட்டோமா?

இந்த சமூகத்தில் புதிய தலைமைத்துவம் வழங்க தகுதிவாய்ந்தவர்களே இல்லையா? புதிய பிரதிநிதிகளாக பொருத்தமானவர்களே இல்லையா? இந்த புலம்புகின்ற நேரத்தை அவ்வாறானவர்களைத் தேடுவதற்கு செலவிடலாமே. ஒரு சமூகம் தன் தலைவிதியை தாமாக மாற்றிக்கொள்ளாதவரை அச்சமூகத்தின் தலைவிதியை இறைவனும் மாற்றமாட்டான். இத்தனை முஸ்லிம் அமைச்சர்கள் இருக்கத்தக்கதாக, முஸ்லிம்களின் ரமளானைக் குறிவைத்து பேரித்தம் பழத்திற்கு இந்த ஆட்சி வரி விதிக்கின்றது; என்றால் இந்த அமைச்சர்களுக்கு இந்த அரசில் இருக்கின்ற மரியாதையைப் புரிந்துகொள்ள முடியாதா? அதுவும் தொங்குபாராளுமன்றத்தில் ஆட்சி நடத்துகின்ற அரசியிலே நமது அமைச்சர்களின் கௌரவம் இதுவென்றால், பலமான அரசு ஒன்று வந்தால் நிலைமை என்ன?

எனவே, அரசை மாற்றுவதைப்பற்றி சிந்திக்கமுன் தலைமைத்துவங்களை மாற்றி ஒரு புதிய தலைமைத்துவமும் அடுத்த தேர்தலில் போட்டுயிட ஒரு புதிய வேட்பாளர் அணியையும் இப்பொழுதே அடையாளம்காண புறப்படுங்கள். இதுவரை இவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கியது போதும், எதிர்காலத்தையும் இழந்துவிடவேண்டாம்.
வை எல் எஸ் ஹமீட்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -