தென்மேற்கு பருவப் பெயர்ச்சி மழையின் அசாதாரண நிலை காரணமாக இலங்கையின் ஏழு மாவட்டங்களில் மண்சரிவு அபாயம் என்று சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இது தொடர்பான எச்சரிக்கை அறிவித்தலை சற்றைக்கு முன்னர் இலங்கை கட்டிடவியல் ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
எதிர்வரும் 24 மணி நேரத்திற்கு தொடர்ச்சியாக மழை பெய்யும் பட்சத்தில் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள மண்சரிவு அபாயத்தை எதிர்கொண்டுள்ள மலைப் பிரதேசங்களில் வசிக்கும் பொதுமக்கள் அங்கிருந்து பாதுகாப்பான இடங்களை நோக்கி இடம்பெயருமாறு குறித்த சிவப்பு எச்சரிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த எச்சரிக்கை எதிர்வரும் 29ம் திகதி நண்பகல் வரை செல்லுபடியாகும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இரத்தினபுரி , கேகாலை, காலி , களுத்துறை , மாத்தறை , ஹம்பாந்தோட்டை , கண்டி ஆகிய மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.