பாறுக் ஷிஹான்-
வடக்கு-கிழக்கு இணைப்புத் தொடர்பில் கருத்துக் கேட்டதும் போது அது தொடர்பில் கருத்துக் கூறமுடியாது என்று மக்கள் விடு தலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்து நழுவிச் சென்றார்
இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் முற்றவெளியில் நேற்று(30) மாலை இடம்பெற்ற மேதின நிகழ்வில் இடம் பெற்றது.
வடக்கு – கிழக்கு இணைப்புத் தொடர்பாக உங்கள் கருத்து என்ன? என்று செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர்.
இதன்போது இந்த விடயம் தொடர்பாக இப்போது எவ்வித கருத்துக்களையும் என்னால் கூற முடியாது. நான் இன்றைய கூட்டத் தில் பேசியதை மட்டும் நீங்கள் கவனத்தில் எடுங்கள் என்று கூறியபடியே இடத்தை விட்டு அனுரகுமார நழுவிச் சென்றார்.
வடக்கு கிழக்கு மாகாணம் முன்னர் அரசியல் நிர்வாக அலகுகளுள் ஒன்றாகவே காணப்பட்டது. வடக்கு-கிழக்கு மாகாணத்தை நிர்வகிப்பதற்காகக் கொண்டு வரப்பட்ட நிர்வாக சபையே வடக்கு-கிழக்கு மாகாண சபை. 1987 ஆம் ஆண்டியில்இ இந்தியத் தலைமை அமைச்சராக இருந்த ராஜீவ் காந்திக்கும் இலங்கை அரச தவைராக இருந்த ஜே.ஆர்.ஜெயவர்த்தனவுக்கும் இடையே 1987 ஆம் ஆண்டு ஜூலையில் இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைகளைத் தீர்க்கும் நோக்குடன் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்டன. 1988 இல் நடைபெற்ற வடக்கு-கிழக்கு மாகாண சபைக்கான பொதுத் தேர்தலைத் தொடர்ந்து இலங்கை-இந்திய ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்தது.
இந்த ஒப்பந்தின்படி இலங்கை ஒரு பல்லின பல்மத பல்மொழி நாடாக ஏற்று வடக்கு-கிழக்கை தமிழ் முஸ்லிம் மக்களின் இணைந்த தாயகப் பிரதேசமாக ஏற்றுத் தமிழ்மொழியை அரச மொழியாக ஏற்று மாகாண சபைகளுடான அதிகாரப் பரவலாக்கத்தை முன்வைத்து ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
ஆனால் 2007 ஆம் ஆண்டு வடக்கு-கிழக்கைப் பிரிக்கவேண்டும் என்று ஜே.வி.பி. கட்சியினர் வழக்குத் தாக்கல் செய்திருந்தனர். வழக்கையடுத்து உயர்நீதிமன்றின் அப்போதைய தலைமை நீதியரசர் சரத் என் சில்வா தலைமையிலான 5 நீதிபதிகளைக் கொண்ட ஆயம் 1987 இல் கைச்சாத்திடப்பட்ட இந்திய-இலங்கை ஒப்பந்தத்துக்கு அமைய ஒன்றாக்கப்பட்ட இலங்கையின் வடக்கு-கிழக்கு மாகாணங்களின் இணைப்பு செல்லுபடியற்றது என்று அறிவித்தது. இதனால் வடக்கு-கிழக்கு மாகாணங்கள் பிரிக்கப்பட்டதன் முக்கிய சூத்திரதாரிகள் ஜே.வி.பியினரே என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது.