எம்.ரீ.ஹைதர் அலி-
உழைப்பின் உன்னத தன்மையினையும், தொழிலாளர்களின் ஒற்றுமையினையும் பிரதிபலிக்கும் நல்லதொரு இந்நாளில் மே தினத்தை கொண்டாடும் உலகவாழ் தொழிலாளர்கள் அனைவருக்கும் எனது கௌரவமான வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன் என இன்றைய மே தினத்தை முன்னிட்டு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் அவர்கள் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
அந்த வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மனித உழைப்பின் உன்னதத்தினையும், மேன்மையினையும் நினைவுகூரும் முகமாக சர்வதேச ரீதியில் கொண்டாடப்படும் இவ் மே தினமானது தொழிலாளர்களின் ஒற்றுமையினை உலகிற்கு பிரதிபலிக்கக்கூடிய ஒரு நன்னாளாக அமைந்துள்ளது.
உலகில் பல்வேறு நாடுகளிலும் முதலாளித்துவத்தின் அடிமைத்தனங்கள் மேலோங்கியிருந்த காலகட்டங்களில் தமது உரிமைகளை வென்றெடுப்பதற்காக தொழிலாளர்கள் வரலாறு நெடுகிலும் எதிர்கொண்டுவந்த பல்வேறு சிரமங்களும் அவர்களின் கண்ணீர் மற்றும் உயிர் தியாகங்களும் இந்நாளில் நினைவு கூறத்தக்கதாகும்.
ஒவ்வொரு நாட்டின் முன்னேற்றத்திலும் தொழிலாளர்களே முதுகெலும்பாக செயற்படுகின்றனர். மேலும் உழைப்பின் காரணமாகவே உலகில் உன்னதமான பல்வேறு மாற்றங்கள் இடம்பெற்றிருக்கின்றன. தொழிலாளர்களின் அர்பணிப்புமிக்க உழைப்பின் திறமையினாலேயே இன்றைய நவீன உலகம் தோற்றம் பெற்றிருக்கின்றது.
அதே போன்று வரலாறுதொட்டு இன்று வரை எமது எமது நாட்டின் முன்னேற்றத்திலும் தொழிலாளர்கள் ஆற்றிவந்த சேவை மிகவும் பாராட்டத்தக்கதாகும்.
இத்தகைய பெருமைமிக்க தொழிலாளர்களுக்கு அடிமைத்தனங்கள் நீங்கி, சுபீட்சம், மகிழ்ச்சி, சுதந்திரம் மற்றும் ஒற்றுமைமிக்க தொழிலாளர் சக்தி ஒன்று நிலைநாட்டப்பட வேண்டி பிராத்திக்கின்றேன் என தனது வாழ்த்துச் செய்தியில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் தெரிவித்துள்ளார்.