தேசிய காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம். அதாஉல்லா அவர்களினால் கண்ணியத்திற்குரிய மஹாநாயக்க தேரர்களுக்கு அனுப்பி வைத்த மடல்
கண்ணியத்திற்குரிய மஹாநாயக்க தேரர் அவர்களே!
உலகப் பூகோளத்தில் நமது நாடு அமையப் பெற்ற அமைவிடமும் நமக்கென்றிருக்கின்ற திருகோணமலை போன்ற இயற்கை வளங்களுமே நமது நாட்டை அந்நியர்கள் காவுகொள்ள நினைப்பதற்கும், நம்மை அறியாமலே நமது மக்களை அழிப்பதற்கும் காரணமாக அமைந்திருக்கின்றன. நமது வளங்கள் முழுவதுவுமே அவர்களின் கழுகுப் பார்வையிலிருந்து தப்பிக்கொள்ளவும் முடிந்திருக்கவில்லை.
இதனால்,
போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் என்று நம்மை நேரடியாக ஆட்சி செய்தவர்கள், நமது வளங்களை முடியுமானவரை சூறையாடினார்கள். பின்னர் அவர்களும் அவர்களைப் போன்ற நாட்டவர்களும் தங்களுடைய இறைமையின் கீழ் இந்த நாட்டை வைத்துக் கொள்வதற்காக, தந்திரோபாயமான போராட்டங்களைத் தொடர்ச்சியாக நடத்திவருகின்றார்கள். அதற்கமைவாகவே, ஆட்சி மாற்றங்களையும் கொண்டு வருவதற்கு திரைமறைவில் இயங்கி வந்தவைகளை நாம் வாழுகின்ற இக்காலத்திலேயே கண்கூடாகக் காணக்கூடியதாகவிருக்கிறது.
அன்று,
அமெரிக்கா, ஜேஆர் ஜயவர்த்தன அவர்களுடைய ஆட்சிக்காலத்தில் இவ்வெண்ணெய்க் குதத்தினையும் திருகோணமலையின் துறைமுகத்தினையும் கையகப்படுத்த முனைந்தபொழுது, இந்தியா அதற்கு இணக்கம் தெரிவிக்காமல் மறுப்பைத் தெரிவித்திருந்தது. அன்று இந்தியா, அமெரிக்காவின் கொள்கைகளுக்கு எதிராகத் தொழிற்பட்டதனால் தங்களின் இருப்பையும் அவர்களின் பொருளாதாரச் சந்தையினை விரிவுபடுத்திக் கொள்வதற்குமாக அவர்கள் முனைந்திருந்த அவ்வேளை, இலங்கைக்குள் அமெரிக்கா நுழைவதை அவர்கள் விரும்பியிருக்கவில்லை. இதனால், இலங்கை அரசாங்கத்திற்கு பல வழிகளில் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டன. இத் தொடர்ச் செயற்பாடுகளுக்கமைய, அன்றைய பிரதமர் இந்திரா காந்தியினுடைய ஆசிர்வாதத்தோடு இலங்கையின் தமிழ் இளைஞர்களுக்கு இந்திய முகாம்களில் குழுக்களாகப் பயிற்சிகள் கொடுக்கப்பட்டு, அங்கேயே உரமூட்டப்பட்டது. இதன் மூலமும் நமது நாட்டிற்கு பாரிய அழிவுகள் ஏற்பட்டிருந்தன. இதன் தொடர்கதையே ரஜிவ்காந்தி - ஜேயாரினால் 1987ஆம் ஆண்டு செய்துகொள்ளப்பட்ட இலங்கை இந்திய ஒப்பந்தமாகவும் அது உருப்பெற்றது.
இதேபோன்றுதான்,
மற்றுமொரு சந்தர்ப்பத்தில் அமெரிக்கா, இஸ்ரேல் போன்றோர்களின் செல்லப்பிள்ளையான நோர்வே ஊடாக, இங்கு வேறொரு அடிப்படையில் காத்திருந்து - நேரம் பார்த்து - மூக்கை நுழைத்திருந்தது. நோர்வேயின் சமாதான ஒப்பந்தம் என்ற அடிப்படையில், பயங்கரவாதிகளுக்குப் போதுமான ஆயுதங்களை வழங்கி, நம் நாட்டின் மூவின மக்களும் அழிந்து போகின்ற அளவிற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. பிரிவினைக்கு அத்தியாவசியமான வானூர்திகள் வழங்கியமை இதனை நிரூபிக்கின்றது. இதன் இறுதியில் கோர யுத்தம் நடாத்தப்பட்டு நம் நாட்டு மக்களே கொன்று குவிக்கப்பட்டார்கள்; இன்னும் பலர் ஊனமுற்றும் வாழ்கிறார்கள்.
யுத்தமும் நிறைவுக்கு வந்தபின் நாட்டில் வாழும் தமிழ் சிங்கள முஸ்லிம் மக்கள் கூடிப்பேசி, நிரந்தரமான தீர்வு ஒன்றை எட்டுவதற்கான காலம் கனிந்திருந்தது. நாட்டில் வாழும் எல்லா சமூகங்களும் அச்சமில்லாது சுதந்திரத்தோடு வாழ்வதற்கு வாய்ப்புக் கிட்டியிருந்தது. இவ்வேளையில் நமது நாட்டு மக்களின் அதீத அக்கறையும் அன்பும் வைத்திருப்பதாகக் கூறும் வெளிநாடுகள், இந்தச் சூழ்நிலையைப் பாவித்து நாட்டு மக்களை ஒற்றுமைப்படுத்துவதற்கும் அதன் மூலம் இந்த நாட்டைப் பலப்படுத்துவதற்கும் முனைந்திருக்கலாம். மாறாக, உள்நோக்கம் கொண்டவர்களாக இவர்கள் தொழிற்படுவதனால், இலங்கை அரசோடு கோபமுற்று இத்தீய சக்திகள் ஆட்சிமாற்றத்திற்கும் பின்னணியில் தொழிற்பட்டிருக்கின்றன என்பதை இலங்கையில் வாழும் அனைத்து மக்களும் முற்றாகவே அறிந்து வைத்திருக்கின்றனர்.
இது இவ்வாறிருக்க,
அமெரிக்கா தங்களது தேவைக்கேற்ப தொழிற்படுவதற்கு பிரதமர் மோடியை உருவாக்கிவிட்டு இந்தியாவைத் தன்னுடைய ஆளுகைக்குள் எடுத்துக் கொண்டு பாகிஸ்தானை கைகழுவிவிட்டது.
இவ்வாறான சூழ்ச்சிகளினால்,
நமது நாடு மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது; பொருளாதாரம் வீழ்ந்து கொண்டே செல்கிறது. மொசாட், சிஐஏ, ரோ என்றும் நோர்வேயின் உளவாளிகள் என்றும் நமது நாடு நிறைந்து காணப்படுகிறது. இவ்வாறான தீய சக்திகள் தனித்தும் சேர்ந்தும் நம் இனங்களிடையில் கசப்புணர்வுகளையும் மோதல்களையும் அவர்களுடைய தேவைகளுக்காக உருவாக்குவதற்கும் பின்னணியில் தொழிற்பட்டுக் கொண்டிருக்கின்றன.
இது இவ்வாறிருக்க,
நாட்டின் நமது வரலாற்றுக் காலங்களில் எப்பொழுதுமே முஸ்லிம்கள் நாட்டுப்பற்றுள்ளவர்களாய் நடந்து கொண்டதனை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்கள். முஸ்லிம்கள், அன்று ஆட்சி செய்த அரசர்களின் காலங்களிலும் கூட நம் நாட்டுக்காகத் தியாகம் செய்திருப்பதனை வரலாற்றில் அறிந்து கொள்ள முடியும். அரசர்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமான போர்வீரர்கள், வைத்தியர்கள், பாதுகாவலர்கள், உணவு வழங்குனர்கள் என்றவர்களாகவும் நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு முதுகெலும்பாகவும் இம்மக்கள் செயற்பட்டிருக்கிறார்கள்.
மேலும்,
சில வரலாற்றுக் காலங்களில் கரையோர முஸ்லிம் மக்கள் அந்நியர்களால் தாக்கப்பட்ட பொழுதெல்லாம், நமது நாட்டின் உன்னதமான அந்த மன்னர்களே முஸ்லிம்களுக்கான வேறு மாற்று இடங்களை வழங்கியிருக்கிறார்கள். தங்களுக்காகச் சேவை செய்த பரம்பரையினர்கள் வாழ்வதற்கு இடமொதுக்கி வாழ வைத்திருக்கிறார்கள். மதிப்பிற்குரிய தேரர் அவர்களே! அவர்களால் இனாமாக வழங்கப்பட்ட பல கிராமங்கள் நம் நாட்டில் அதிகமதிகம் இருப்பதனை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்கள். கிழக்கு மாகாணம் பற்றிய வரலாற்றினையும் நீங்கள் அறிந்திருப்பீர்கள். செனரத் மன்னனின் முஸ்லிம்களுக்கான பெருங்கொடையிது.
அன்றைய அரசர்களால் தேவைக்கேற்ப வழங்கப்பட்ட காணிகளைவிட அதன் பின் வந்த தலைவர்கள் இம்மக்களுக்காக இடங்களை ஒதுக்கி இருக்கிறார்களா? போகட்டும். முன்னைய மன்னர்கள் வழங்கிய பிச்சையைக் கூட பறித்தெடுக்கின்ற அளவிற்கு நமது மக்களினுடைய மனநிலைகள் மாறியிருப்பதனை நீங்கள் கண்டிருப்பீர்கள். இது பௌத்த தர்மத்திற்கு எதிரான செயற்பாடு என்பதனை நம் சிங்கள உடன்பிறப்புகளுக்கு நீங்கள் எத்திவைக்க வேண்டும்.
நமது வரலாற்றுக் காலங்களில்,
தமிழர்களும் சிங்களவர்களும் மூட்டிவிடப்பட்டிருக்கிறார்கள்; தமிழர்களும் முஸ்லிம்களும் கலவரங்களில் அழிய வைக்கப்பட்டிருக்கின்றார்கள். முஸ்லிம்களுக்கும் சிங்களவர்களுக்குமிடையில் பல சண்டைகள் மூண்டிருக்கிறன. எது எவ்வாறாக நடந்த பொழுதிலும், இங்குவாழும் சமூகங்கள் உலகம் முடியும் வரைக்கும் இந்த நாட்டில் வாழவேண்டியிருக்கின்ற யதார்த்தத்தையும் அதில் பொதிந்துள்ள மனிதாபிமானத்தையும் எல்லா மார்க்கங்களும் போதித்திருந்ததனால், மக்களும் பயபக்தியோடு அதனை ஏற்று நடந்திருக்கிறார்கள். இதனால், நமது நாடு பாரிய அழிவுகளிலிருந்தும் காப்பாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது.
கபிலவஸ்துவில் பிறந்த கௌத்தம புத்தபிரானின் வாழ்க்கை வரலாறுகளையும், அவர் போதித்த பௌத்த தர்மங்களையும் நாங்கள் அறிந்திருக்கிறோம். அன்னாரின் கொள்கைகளையும், மனிதாபிமான செயற்பாடுகளையும் உலகத்தில் மிளிரச் செய்தவர்கள் நம் நாட்டின் பௌத்த மத குருமார்கள் என்பதனை நாங்கள் நன்கு அறிவோம். அதன் அடிப்படையில் என் அன்புக்குரிய பௌத்த மக்களை மனிதநேயமுள்ளவர்களாவே அன்றிலிருந்து இன்றுவரை முஸ்லிம்கள் நம்பிக்கொண்டிருக்கிறார்கள்.
இதனால், இலங்கை முஸ்லிம்கள் 'தாம் இலங்கையர்' என்ற அடையாளத்தோடும் முஸ்லிம் என்ற தனித்துவத்தோடும் வாழ்ந்து வருகிறார்கள். அன்புக்குரிய தேரர் அவர்களே! வரலாற்றுக் காலங்களில் நம் முன்னோர்களும் அவ்வாறுதான் தனித்துவமாகவும், ஒற்றுமையாகவும் வாழ்ந்து உதாரணம் படைத்திருப்பதனை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்கள்.
இந்த நிலையில்,
நம் நாட்டை நிறைத்துள்ள வெளிநாட்டின் தீய சக்திகள் நம் சமூகங்களின் ஒற்றுமையைச் சின்னாபின்னமாக்கி அவர்களின் சுய தேவைகளை அடைந்து கொள்வதற்காகவே இனக்கலவரங்களைத் தோற்றுவித்துச் செயற்படுவது நம்மவரின் கண்முன்னே இன்று மலிவாகக் கிடைக்கப்பெறுகின்ற துக்ககரமான செய்தியாகும்.
இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின்போது நமது நாட்டின் இறைமை சூறையாடப்பட்டது. இதனால் தமிழர் சமூகமும் முஸ்லிம் சமூகமும் அடித்துக் கொள்வதற்குச் சந்தர்ப்பம் உருவாக்கப்பட்டது. சிங்கள மக்களும் அச்செயற்பாட்டை பொறுத்துக் கொள்ள முடியாது இந்தியாவின் இச்சதியை மனதார வெறுக்கவைத்தது.
இது இவ்வாறிருக்க,
இன்னுமொரு நகர்வாக நோர்வே ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதானது, பயங்கரவாதிகளுக்கு மேலும் உரமூட்டி வடகிழக்கிற்குள் முஸ்லிம் சிங்கள மக்கள் மாத்திரமன்றி ஆயுதங்களுக்காய் தமிழர்களும் அடிமைகளாவதற்கு வழி சமைத்தது. இதனால் தொடர்ந்து பல கலவரங்களும் யுத்தங்களும் மூண்டன் அழிவுகள் ஏராளமாய்ப் போயிற்று. இச்சம்பவங்கள் இரண்டும் ஐக்கிய தேசியக் கட்சியின் காலத்திலேயாகும் என்பதனை நீங்கள் மறந்திருக்கமாட்டீர்கள்.
குறிப்பாக,
இவ்வாறான சூழ்நிலைகளின் போதெல்லாம் சிங்களவர், தமிழர், முஸ்லிம்களுடைய பூர்வீகக் குடியிருப்புகள், பள்ளிவாசல்கள், ஆலயங்கள், பன்சலைகள், பண்ணை வளங்களெல்லாம்; அழிக்கப்பட்டிருந்தன. பூர்வீக விளைச்சல் நிலங்களை இழந்து பல்லாண்டுகள் நமது விவசாயிகள் வாடியிருக்கின்றார்கள். இன்னும் சில பிரதேசங்களில் காலம் கடந்ததால் காடுகளாகி சில பூர்வீகக் காணிகள் இன்று, வௌ;வேறு அரச திணைக்களங்களுக்கென பிரகடனப்படுத்தப்பட்டிருக்கின்றன. இவைகளுள் சிங்கள, தமிழ் மக்களுக்கான சொத்துக்கள் அவரவர்களுக்கு வழங்கப்பட்டுக் கொண்டும் இருக்கின்றன. ஆனால், முஸ்லிம் மக்கள் என்ற காரணத்திற்காகவே அவர்களுக்குத் தங்களின் பூர்வீக சொத்துக்களை வழங்குவதற்கு அரசு பின்னிற்பதனை பார்க்கின்றபொழுது, திட்டமிட்டு வெளிநாட்டின் தீய சக்திகள் இதன் பின்னணியில் இருப்பதனை அறியக்கூடியதாக இருக்கிறது. எப்பாடுபட்டாவது ஆட்சிமாற்றம் ஒன்றினைக் கொண்டு வரவேண்டுமென்பதற்காக, அளுத்கமயில் சிங்கள முஸ்லிம் கலவரத்தை உருவாக்கி வெற்றி கண்ட வரலாறு இதனை நிரூபித்திருக்கிறது. பாவம் இந்த முஸ்லிம் மக்கள்! என்று நீங்கள் ஏற்றுக் கொள்வீர்கள்.
இது இவ்வாறிருக்க,
இந்தியா தனக்குச் சவாலாக உள்ள சீனாவையும் பாகிஸ்தானையும் எதிர்கொள்வதற்குத் தன்னைப் பலப்படுத்த முனைந்து கொண்டிருக்கிறது. அதற்கு இன்றைய அமெரிக்காவும் அதன் சார்பு நாடுகளும் உரமூட்டிக் கொண்டிருக்கின்றன. அவர்களின் எதிர்கால செயற்பாடுகளுக்கு இலங்கையின் தளம் மிக முக்கியமானது என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும். அதற்கமைய, இலங்கை சமூகத்துள்ளும் அரசாங்கத்துள்ளும் ஊடுருவி அவர்கள் வெற்றியடைந்து கொள்வதற்காக மாத்திரம் காய்களை நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள்.
இதில் ஒன்றாக,
இலங்கை முஸ்லிம்கள் தொடர்பில் பிழையான கருத்துக்களை இரகசியச் செய்திகளாக அரசுக்குள்ளும் வெளியிலும் அவிழ்த்துவிட்டு சிங்கள – முஸ்லிம் கலவரங்களை உருவாக்க எத்தனித்திருப்பதை விளங்கக்கூடியதாக இருக்கிறது. இதற்கு இன்னும் வலுச்சேர்ப்பதற்காக ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகள் இலங்கையில் இருப்பதைப்போல் கதையளக்கின்றார்கள். இதனால் முஸ்லிம்களையும், சிங்களவர்களையும் ஆளையாள் சந்தேகம் கொண்டு பார்க்கின்ற நிலைமைக்குத் தள்ளப்பார்க்கிறார்கள். ஐ.எஸ்.ஐ.எஸ் போன்ற பயங்கரவாதிகளை உருவாக்குபவர்களும் இவர்கள்தான். இத்தீய சக்திகளின் செயற்பாடுகளை புரிந்தோ புரியாமலோ அரசாங்கமே முன்னெடுத்துச் செல்வது வேதனையளிக்கிறது.
இனவெறுப்புப் பிரச்சாரங்களை முன்னெடுத்துச் செல்லும் தீவிரவாத இயக்கங்களுக்கு அரசு துணைபோயிருப்பதன் மூலம், இது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இச்செயற்பாடுகள் இலங்கையன் என்ற அடிப்படையில் சிந்திக்கின்ற எல்லோரையும் கவலை கொள்ள வைத்திருக்கிறது. இந்த வெறுப்புப் பிரச்சாரங்களின் மூலம், சிங்கள மக்கள் முஸ்லிம் மக்களை வேறுகண்கொண்டு பார்க்க வைப்பதற்கு முயற்சிக்கப்படுகிறது. இதனால் முஸ்லிம் மக்கள் தன் சொந்த நாட்டின் மூத்த சகோதரர்களான சிங்கள மக்களை ஏக்கத்தோடும் கவலையோடும் பார்க்கவேண்டியுள்ளார்கள்.
கண்ணியமிக்க மஹாநாயக்க தேரர் அவர்களே!
வடக்கில் வெறுங்கையோடு வெளியேறி, அகதிகளாக 30 ஆண்டுகளுக்கு மேல் வரலாற்று சோகங்களை அனுபவித்த உங்கள் சோதர முஸ்லிம் மக்களுக்கு வில்பத்து விஸ்தரிப்பு என்ற பெயரில் திட்டமிட்டுப் போடப்பட்ட வேலியின் அநியாயம் உங்களுக்குப் புரிந்திருக்கும்.
தமிழ் - முஸ்லிம் - சிங்கள மக்கள் கிழக்கிலும் சந்தோசமாக வாழ முயற்சித்துக் கொண்டிருக்கின்ற இத்தறுவாயில், கிழக்கு மாகாணத்தின் இறக்காமத்தில் - சிங்கள மக்கள் யாருமே வாழாத மாணிக்கமடுவில் - சிலை வைத்திருப்பது எதற்காக? சரி இருக்கட்டும் என்று விட்டுக் கொடுத்த பின்னரும், வேறொன்றும் தேவையில்லை என்ற பௌத்த குருக்கள் இப்பொழுது அவ்விடத்தினை அபிவிருத்தி செய்வதற்காக முனைவதன் மூலம், முஸ்லிம் மக்களின் பூர்வீகக் காணிகளை அபகரிக்க முனைவதேனோ? இவ்வாறுதான் கிழக்கில் முஸ்லிம்களை ஒடுக்குவதற்காக இன்னும் பல இடங்கள் திட்டமிட்டு அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறன என்று நம் முஸ்லிம் மக்கள் பீதியடைந்திருக்கிறார்கள்.
நமது வரலாற்றுக் காலங்களில்
முஸ்லிம் பள்ளிகளை அமைப்பதற்கு முடியுமான வழிகளிலும் உதவிகளைச் செய்து, அவைகளைப் பாதுகாத்தும் வந்தவர்கள் எம் சகோதர சமூகமான பௌத்த மக்கள். இது எல்லா மார்க்கங்களிலும் கூறப்பட்டிருக்கின்ற தர்மங்களிலொன்றாகும்.
இதற்கமையவே.
கிழக்கு மாகாணத்து முஸ்லிம் மக்கள் யுத்த காலங்கள் மட்டுமன்றி அதற்குப் பின்னரும் பௌத்த மக்களின் ஆலயங்களையோ வரலாற்று அடையாளங்களையோ பாதுகாக்கக் தவறியிருக்கவில்லை. தீகவாபி புனித பிரதேசம் முஸ்லிம்களால் பாதுகாக்கப்பட்டிருக்கிறது. முஸ்லிம் அமைச்சர்கள்தான் அதன் அபிவிருத்தியை ஆரம்பித்து செய்து கொண்டுமிருந்தார்கள்; இது வரலாறாகும். அட்டாளைச்சேனை பிரதேச செயலாளரின் ஆளுகைக்குட்பட்ட இந்த ரஜமஹா விகாரைக்கு 662 ஏக்கர் 3 ரூட் 37 பேச்; காணி முஸ்லிம்களின் ஒப்புதலோடும் - மற்றுமொரு சந்தர்ப்பத்தில் அவர்களுக்குத் தெரியாமலும் - பிரகடனப்படுத்தப்பட்டு வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுப் படமும் வரையப்பட்டுள்ளது.
தேவையான சிலைகளையோ, அவசியமான மண்டபங்களையோ கட்டுவதற்கு அந்நிலப்பரப்புள் போதிய அளவு இடமுண்டு. இவ்வாறு இருக்கையில், மேலும் மேலும் தேவையற்றவாறும் உத்தம புத்தர் விரும்பாத செயற்பாடுகளையும் முன்னெடுத்து முஸ்லிம்களை அடக்குவது என்றாற்போல், செயற்பட்டுக் கொண்டிருக்கும் பௌத்த மக்களில் ஒரு சிறு குழுவினரை இவ் அதர்மச் செயலினை நிறுத்தும்படி சொல்லுங்கள்.
எம் பௌத்த மக்கள் மதிக்கின்ற இந்த புராதன பூமி, எம் கிழக்கு மண்ணிலே இருப்பதற்காக நாங்கள் பெருமை கொள்வோம். எம் கிழக்கு மாகாணத்தில் இருக்கின்ற இதனையும் இதனைப்போன்றவைகளையும் தரிசிப்பதற்குக் கிழக்கிலும், கிழக்கிற்கு வெளியிலும் வாழ்கின்ற நமது சிங்கள உடன் பிறப்புகள் வருகை தருவது எங்களுக்கு பெருமையைத் தருகின்றது. இதன் மூலம் கிழக்கில் வாழ்கின்ற எம் மக்களுக்கு சிங்கள மக்களுடனான நல்லுறவும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்கின்ற மனப்பாங்கும் அதிகரிக்கும் இச்செயற்பாட்டை முஸ்லிம்கள் விரும்புகின்றவர்கள்.
ஆனால் இன்றோ,
அரசியல் நோக்கத்திற்காக மாத்திரமன்றி அடக்குமுறைகளைக் கையாண்டுகொண்டிருக்கும் வெளிநாட்டின் தீய சக்திகளின் தேவைகளுக்காகவும்; கலவரங்களை உருவாக்குகின்ற நோக்கத்திற்காகவும் மாத்திரம் கண்ட நின்ற இடங்களிளெல்லாம் ஒரு காலமும் இல்லாதவாறு - புத்தபெருமானின் சிலைகளை நிறுவுவதற்கு முயல்கின்றனர். இச் செயற்பாட்டினை புத்தபெருமானின் கொள்கையை ஏற்று மக்களை வழிநடத்துகின்ற நீங்களும் இதனை நிராகரிப்பீர்கள்.
கண்ணியமிக்க மஹாநாயக்க தேரர் அவர்களே!
முஸ்லிம் மக்களும் அப்படி இனவாதிகள் அல்லர் என்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும். அவர்களும் இந்நாட்டின் பிரஜைகள் என்பதனை நீங்கள் அறிவீர்கள். அம்மக்கள் பௌத்தர்களோடும் தமிழர்களோடும் கிறிஸ்தவர்களோடும் சந்தோசமாக வாழ்வதற்கு விரும்புகின்றார்கள். இலங்கை நாட்டவர் என்ற உணர்வுகளோடும் உரித்தோடும் மரணிக்கவும் விரும்புகிறார்கள். ஆனால் அவர்களிலும் ஒருசிலர் அறிந்தோ அறியாமலோ சில தீய வெளிநாட்டு சக்திகளுக்குள் மாட்டியிருக்கக்கூடும். அதற்காக, மொத்த முஸ்லிம் சமூகத்தையும் என் அன்புக்குக்குரிய சிங்கள சமூகம் வேற்று சமூகமாகப் பார்ப்பதற்கு இடம் கொடுத்துவிடாதீர்கள். நாங்கள் எப்பொழுதும் இலங்கை எங்கள் நாடு என்ற உணர்வுகளோடு தியாகங்கள் பல செய்திருக்கிறோம் என்பதற்கு நீங்களும் சாட்சியாவீர்கள்.
அன்று வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டார்கள்; இன்று கிழக்கிற்கு வெளியில் முஸ்லிம் மக்களை வாழ விடாமல் செய்வதற்கான பல சூழ்ச்சிகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. இதே காலத்திலேயே இன்று கிழக்கிலும் முஸ்லிம்களை அடக்குவதற்கான செயற்பாடுகள் நடைபெறுவது வேதனையளிக்கிறது.
கண்ணியமிக்க மஹாநாயக்க தேரர் அவர்களே!
புத்தபெருமான் இன்று உயிரோடு வாழ்ந்திருந்தால், இவ் அதர்மச் செயலினை ஏற்றுக் கொண்டிருப்பாரா? அவர் வழியில் அவரது மனநிலைகள் செயற்பாடுகளை மதித்து வாழ்கின்ற பௌத்த சமூகம் ஏற்றுக்கொள்ளுமா? முஸ்லிம்களோடு காலாதிகாலம் வாழ்ந்துவந்த நம் முன்னோர்கள் சகோதர வாஞ்சையோடு வாழ்ந்திருந்த வாழ்க்கையை எண்ணிப்பாருங்கள். முஸ்லிம்களோடு இன்று உடன்பிறந்தவர்களாக இருக்கின்ற என் சிங்கள சமூகம் முஸ்லிம்கள் இந்நாட்டின் பிரஜைகள் என்ற அடிப்படையிலாவது அம்மக்களை அவர்களது பூர்வீகக் காணிகளில் தடைகளில்லாமல் வாழ வைக்க வேண்டும். புத்தபெருமானின் வழியில் மக்களை வழிநடத்துகின்ற நீங்கள் இவ்வாறான அதர்மச் செயலுக்கு எதிராக குரல்கொடுக்க முன்வரவேண்டும்.
கண்ணியமிக்க மஹாநாயக்க தேரர் அவர்களே!
இன்று நாடு முழுவதும் முஸ்லிம் மக்களுக்கு ஏற்பட்டிருக்கின்ற செயற்பாடுகள் முஸ்லிம் மக்கள் சிங்கள சமூகத்தின் மேல் வைத்திருக்கின்ற நன்மதிப்பையும் அன்பையும் இல்லாமலாக்கி வெறுக்கவைத்து தமிழர்களோடு சேர்ந்து எந்த நிபந்தனைகளுமின்றி வடக்கு கிழக்கை இணைப்பதற்கு துணைபோய்விடுமோ என்று நான் அச்சப்படுகிறேன். அண்மையில் இந்தியாவின் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஜெயசங்கர் அவருடைய இலங்கை விஜயத்தின் போது, வடக்கு கிழக்கு இணைப்பை இந்தியா வற்புறுத்தாது என்று கூறியிருப்பதானது, இதனை நிரூபித்திருக்கிறது. இந்தியா இப்படி வெளிப்படையாகச் சொல்லியிருப்பது அவர்களின் இன்றைய உள்நோக்கத்தை நமக்கு விளங்க வைத்திருக்கிறது. மற்றைய நாடுகளை விடவும் இந்தியாவிற்கே இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தேவைப்படுகின்றன. அவர்கள் வடக்கை மாத்திரம் எடுப்பது அவர்களுடைய நோக்கமன்று. கிழக்கு மாகாணமே அவர்களின் குறியில் ஒன்று. எனவே, எல்லா விடயங்களிலும் இந்தியா இலங்கையில் மூக்கை நுழைத்துக் கொண்டு விளையாடுகிறது.
வடக்கு கிழக்கு இணைப்பு தொடர்பாக நான் கூறியதனை வைத்துக் கொண்டு மாகாணங்களுக்கு அதிகாரங்கள் பகிரப்படக்கூடாது என்று எண்ணத்தேவையில்லை. வரலாற்றில் காலத்திற்குக்காலம் ஆட்சி செய்த நமது முன்னைய அரசியல் தலைமைகள் அரசியலுக்கப்பால் சென்று நாடு என்று சிந்தித்திருந்தால் இவ்வாறு மாகாணங்கள் உருவாக்கப்பட்டிருக்கத் தேவையில்லை. இன்றுகூட இந்நாட்டின் சிறுபான்மை மக்களும் வாழக்கூடியவாறான ஒரு யாப்பு மாற்றத்தைக் காத்திரமாக கொண்டு வர முடியுமானால், இந்தச் சிறிய நாட்டை 09 துண்டுகளாகப் பிரித்து எதிர்காலத்தில் அம்மாகாணங்கள் வௌ;வேறு வெளிநாட்டு சதிகளுக்குள்ளாகி இந்நாடு அல்லோலகல்லோலப்படுவதிலிருந்து தவிர்த்துக் கொள்ள முடியும்.
இந்த வரலாற்றுப் பின்னணியில்தான்,
இன்று மிகத் தந்திரமாக கிழக்கு மாகாணத்தின் திருகோணமலையை தன்வசப்படுத்துவதன் மூலம், முழு இலங்கையையும் வசப்படுத்துவதற்கு இந்தியா முனைகிறது. அன்று நம் நாட்டு மக்களை வரலாற்றில் ஆட்டி வைத்த இந்தியாவிற்கு திருகோணமலையின் எண்ணெய்க் குதத்தைக் கொடுப்பதென்பது முழு இலங்கையையும் எழுதிக் கொடுப்பது போன்றாகும். இன்னுமொரு உலகப்போரோ அல்லது பிராந்தியப் போர்களோ துவக்கப்பட்டால் நமது நாட்டு மக்களுக்கு எண்ணெய்யினை களஞ்சியப்படுத்துவது எவ்வாறு? எனவே, இச்செயற்பாடானது நாட்டுக்குச் செய்கின்ற பெரும் துரோகச் செயற்பாடாகும் என்பதனை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்கள். இச்செயற்பாட்டிற்கு எதிராக, பெற்றோலிய கூட்டுத்தாபன ஊழியர்கள் மாத்திரமன்றி சிங்கள தமிழ் முஸ்லிம் சமூகம் என்ற பாகுபாடுகளுக்கப்பால் இலங்கையன் என்ற அடிப்படையில் முகம் கொடுக்கத் தயாராக வேண்டும்.
இது நம்மை அறியாமலே நமது மண்ணை கொலைக்களமாக்கும் முயற்சியாகும். இவ்வாறான காட்சிகளை நம் மக்கள் இனியும் காணக்கூடாது.
பெரும் சோகங்களை நம்மில் திணிப்பதற்காக இந்தியாவின் உளவுத்துறை நமது மக்களைக் கூறுபோட்டு பிரித்துவிடும்; கலவரங்களை உருவாக்கி நம் மண்ணில் மீண்டும் இரத்த ஆற்றை ஓட்டிவிடும்; மக்களை வாழவிடாமலும் செய்துவிடும்.
இந்தியாவிற்கு விஜயத்தினை மேற்கொண்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் இந்திய உள்துறை அமைச்சரை சந்தித்தபோது இலங்கையின் உளவுத்துறையினையும் இந்தியாவின் உளவுத்துறையினையும் சேர்த்து கூட்டாக இயங்குவதற்கு இணக்கம் தெரிவித்திருப்பதானது நமது நாட்டின் நிலைமையை இன்னும் மோசமாக்கிவிடும் என புத்திஜீவிகள் அங்கலாய்க்கின்றனர்.
எனவே, கண்ணியமிக்க மஹாநாயக்க தேரர் அவர்களே!
இவ்வாறான வெளிசக்திகளின் சூழ்ச்சிகளிலிருந்து நமது நாட்டைக் காப்பாற்ற ஒன்றிணையுமாறு சகோதார சிங்கள சமூகத்தை அறைகூவுங்கள். இனத்துவேசங்களை பரப்புவோருக்கு எதிராக மக்களை விரைந்து செயற்படவையுங்கள். காரணங்கள் எதுவுமில்லாமல் பௌத்த தர்மத்தை அடிப்படையாக வைத்து புத்த பெருமானுக்கு மாற்றமான செயற்பாடுகளுக்கு துணைபோக வேண்டாம் என்று மக்களுக்கு ஆலோசனை வழங்குங்கள். இந்த நாட்டில் நம் எல்லா சமூகங்களும் சந்தோசமாக வாழ்வதற்கு வழிவகைகளை அமைத்துத்தாருங்கள். என்னையும், நம் நாடு தொடர்பான என் தூய எண்ணங்களையும் புரிந்து கொள்வீர்கள் என்ற அடிப்படையில் உரிமையோடும், அன்போடும் இம்மடலை உங்களுக்கு வரைகிறேன். உங்களை சந்திக்கின்ற பொழுது மேலும் இது தொடர்பாக தெளிவுபடுத்தவுள்ளதெனையும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.
நன்றி.
ஏ.எல்.எம். அதாஉல்லா,
தலைவர் - தேசிய காங்கிரஸ்,
முன்னாள் அமைச்சர்.
பிரதிகள் :
01. அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால ஸ்ரீசேன அவர்கள்
02. கௌரவ பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்கள்,
03. முன்னாள் ஜனாதிபதி, கௌரவ மஹிந்த ராஜபக்ஷ அவர்கள்
04. முன்னாள் ஜனாதபதி, சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அவர்கள்