ஹைதராபாத்தில் போக்குவரத்து காவலராக பணியாற்றுகிறார் ஜாவீத் கான். இவருக்கு 5 குழந்தைகள் உள்ளனர், அதில் நான்கு பெண் குழந்தைகள். இவர்களின் கல்வி செலவுக்காகவே பகலில் காவலர் பணிகளை முடித்துக் கொண்டு, இரவில் ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றுகிறார் ஜாவீத் கான். இவரின் மூத்த மகள் ஃபாத்திமா தற்போது பி.பி.ஏ படித்து வருகிறார். இவர் சி.ஏ தேர்வுகளுக்கும் தயாராகி வருகிறார். அதற்கான பயிற்சி வகுப்புகளின் கட்டணத்துக்காகவும், பள்ளிகளில் படிக்கும் மற்ற குழந்தைகளுக்காகவும் தான் ஜாவீத் கான் மாடாய் உழைக்கிறார்.
6000 சம்பளத்துக்கு காவல்துறையில் சேர்ந்த ஜாவீத் கானுக்கு தற்போது 12000 சம்பளம். இரவில் ஆட்டோ ஓட்டுவதன் மூலம் கூடுதலாக தினமும் ரூபாய் 300 கிடைக்கிறதாம். மேலும், இவரது மனைவியும் சேலைகளில் எம்பராய்டரி வேலைகள் செய்து வருவாய் ஈட்டுகிறார். இந்த பணத்தை வைத்து தன் பிள்ளைகளுக்கு தரமான கல்வியை கொடுக்க முயல்கிறார் ஜாவீத் கான். இது குறித்து ஜாவீத் கான் கூறுகையில், 'பெண் குழந்தைக்கு கல்வியை வழங்குவதை விட வேறு சிறப்பான ஒன்று எதுவுமில்லை', என சுருக்கமாக முடித்துக்கொண்டு பணிக்கு கிளம்பிவிடுகிறார்.