சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவுக்கு பாதுகாப்பு வழங்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த 42 காவல்துறையினர் நேற்று திடீரென விலக்கப்பட்டுள்ளனர்.
அமைச்சர்கள் பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த 42 காவல்துறையினர் நேற்று மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு அணியில் இருந்து விலக்கிக் கொள்ளப்பட்டதாகவும், அவர்களுக்குப் பதிலாக இன்னமும் யாரும் நியமிக்கப்படவில்லை என்றும் மகிந்த ராஜபக்சவின் தனிப்பட்ட உதவியாளர் உதித் லொக்குபண்டார தெரிவித்துள்ளார்.
காவல்துறைத் தலைமையகத்தில் இருந்து இந்த உத்தரவு வழங்கப்படவில்லை என்றும், ஆனால் அமைச்சர்கள் பாதுகாப்பு பிரிவினால் உள்ளக உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்க வாய்ப்புகள் இருப்பதாகவும் சிறிலங்கா காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், பாதுகாப்பு அணியில் இருந்து 42 காவல்துறையினர் நீக்கப்பட்டது குறித்து கருத்து வெளியிட்டுள்ள மகிந்த ராஜபக்ச, தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
“எனது பாதுகாப்பு அணியில் இருந்து 42 காவல்துறையினர் நீக்கப்பட்டுள்ளனர். போர்க்காலத்தில் அதிபராக இருந்த எனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. பல விடுதலைப் புலிகள் இன்னமும் உள்ளனர். எனது உயிர் ஆபத்தில் உள்ளது. சில அரசாங்க உறுப்பினர்கள் கூட என்னைத் தூக்கிலிடப் போவதாக அச்சுறுத்தியுள்ளனர்.
கூட்டு எதிரணியின் மேநாள் பேரணியின் வெற்றியை அடுத்து எனது நடமாட்டங்களைக் குறைப்பதற்கு அரசாங்கம் முனைகிறது.
எனக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி பயமுறுத்தலாம் என்று அரசாங்கம் தப்புக் கணக்கு போடுகிறது. அரசாங்கத்தின் நாட்கள் எண்ணப்படுகின்றன என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். எனது உயிருக்கு ஆபத்தை ஏற்படும் என்று அச்சுறுத்தில் என்னைத் தடுக்கப் பார்க்கிறார்கள். இதுகுறித்து நாடாளுமன்றத்தில் பிரச்சினை எழுப்பப்படும்” என்று தெரிவித்துள்ளார்.