பிறவ்ஸ்-
முஸ்லிம்களுக்கு எதிராக நடந்தேறிவரும் இனவாத செயற்பாடுகளுக்கு எதிராக, அரசாங்கம் மீது பல்வேறுவிதமான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலை நீடிக்குமானால் இந்த அரசாங்கத்தின் இருப்பும் தலைவிதியும் நிச்சயமற்றதாகிவிடும் என்பதை அரசாங்கம் புரிந்துகொள்ள வேண்டும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
நேற்று புதன்கிழமை கொழும்பு அழகியல் கலையரங்கத்தில் நடைபெற்ற இஸ்லாமிய தமிழ் இலக்கிய பொன்விழா மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மாதாந்த சஞ்சிகையான ஷசாட்சியம்| ஆகிய நூல்களில் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அமைச்சர் தனதுரையில் மேலும் கூறியதாவது,
நாடு முழுவதிலும் நடைபெறுகின்ற முஸ்லிம் விரோத செயற்பாடுகளால் பதற்றம் நிலவுகின்ற நிலையில், கட்சிகளின் தலைவர்கள் அரசாங்கத்துடன் முரண்பட்ட நிலையில் பாராளுமன்றத்தில் விவாதம் நடைபெற்றது. இதற்கு பதிலளித்து பேசிய, பிரதியமைச்சர் அனுராதா ஜயரத்ன தற்போது காடுகள் அழிக்கப்படுவதாகவும், தொல் பொருளியல் இடங்கள் மீதான கரிசணை குறித்தும் வியாக்கியானம் செய்தார்.
இதனைக் கேட்டிக்கொண்டிருந்த எனக்கு மேலும் ஆத்திரம் மேலிட்டது. இவற்றை சாட்டாக வைத்து சிறுபான்மையினர் மீது பாயச்சல் நடத்துவதே தங்களுடைய ஒரே வேலையென்று சிலர் இயங்கிக்கொண்டிருக்கின்றனர். இதற்கு எங்களுக்கு நிரந்தரமானதொரு தீர்வு தரவேண்டும். பிரச்சினைகள் இருப்பதாக கூறப்படும் இடங்களிலுள்ள சர்ச்சைகளை முடிவுக்கு கொண்டுவருவதற்கு பாராளுமன்ற தெரிவுக்குழுவை ஒன்றை அமைக்குமாறு சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தேன்.
இரு தினங்களாக பாராளுமன்றத்தில் நடந்த விவாதங்களை நோக்கினால், கட்சித் தலைவர்கள் இருவர் தமிழ்த்; தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் இதற்கான காரணங்களை முன்வைத்தது மட்டுமல்ல, தற்பொழுது நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற கலவர நிலைமையில், ஓர் இனத்தை இலக்குவைத்து முன்னெடுக்கின்ற தாக்குதல் நடவடிக்கைகள் குறித்து அசாங்கத்தை காரசாரமாக விமர்சித்தனர்.
அந்த விமர்சனங்களின் பின்னணியிலுள்ள யதார்த்தபூர்வமான கருத்துகளை அரசாங்கம் ஜீரணித்துக்கொள்ள வேண்டும். இந்நிலைமை நீடிக்குமானால் இந்த அரசாங்கத்தின் முன்கொண்டு செல்வதில் ஏற்படும் சிக்கல் மட்டுமல்ல, அதனது இருப்பும் தலைவிதியும்கூட நிச்சயமற்றதாகிவிடும் என்பதை அரசாங்கம் புரிந்துகொள்ள வேண்டும்.
சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டுவதற்கு பொறுப்பான அமைச்சர், அவரது நடவடிக்கைகள் பற்றி விளக்கமளித்தார். அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கயந்த கருணாதிலகவும் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை எடுத்துக்கூறினார். இந்த இனவாத செயற்பாடுகள் மிகவும் திட்டமிட்டு சூட்சுமமாக மேற்கொள்ளப்படுவதாக கூறினார். அரசாங்கத்தின் ஸ்திரத்தன்மையை ஆட்டம்காணச் செய்யும் நோக்கத்தில் இவை தொடர்கின்றன.
தீவிரவாத கும்பல்கள் எந்த இனத்தை சேர்ந்தவையாயினும் அதற்கு பொலிஸார் கையாளவேண்டிய ஒரு நடைமுறை இருக்கின்றது. அணுகுமுறை இருக்கின்றது. அந்தக் காரியம் உரிய முறையில் மேற்கொள்ளப்படுகின்றதா என்பதில் சிறுபான்மை மக்கள் மத்தியில் பலத்த சந்தேகம் நிலவுகின்றது.
சமயத் தலைவர்கள் என்று கூறிக்கொண்டு குழப்பங்களை விளைவிப்போர் யாராக இருந்தாலும், சாதாரண பொதுமக்களுக்கு செல்லுபடியாகும் நீதி வரையறைகளுக்குள்ளேயே அவர்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். இதற்கு அரசாங்கம் பொறுப்புக்கூறுவதற்கு கட்டுப்பட்டிருப்பதாக அமைச்சர் உறுதியளித்தார்.
இவ்வாறு வாக்குறுதியளித்த போதிலும் இன்னும் இனவாத வன்செயல் சம்பவங்கள் இடம்பெறுவதை கவலையோடு கண்டிப்பது மட்டுமல்ல, அதனை முடிவுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும். இந்த சம்பவங்களுக்கான காரணங்களை கண்டறிவதில் ஈடுபட்டிருப்பதாக கூறிக்கூறி காலம் கடத்துவதால் ஆகப்போவது ஒன்றுமில்லை.
நாட்டில் உளவுத்துறை என்று ஒன்று இருக்கின்றது. உளவுத்துறைக்கு தெரியாமல் எதுவும் நடக்க முடியாது. இந்த நாட்டின் கொடூர பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டுவந்த உளவுத்துறைக்கும், இராணுவத்துக்கும், பொலிஸுக்;கும் இந்த குழப்பக்காரர்கள் பற்றி முன்கூட்டியே தெரியாது என்று கூறுவதற்கு எந்த சாக்குப்போக்கும் சொல்லமுடியாது. அப்படிச் சொல்வதானால் அது நாட்டின் உளவுத்துறைக்கும் இராணுவத்துக்கும், பொலிஸுக்கும் இழைக்கின்ற மிகப்பெரிய நிந்தனையாகும்.
பிரச்சினைகள் தொடர்பான ஆவணங்கள், அதிகாரிகள், முறைப்பாட்டாளர்கள் என எல்லோரையும் அழைத்துவந்து அதன் உண்மைத்தன்மைகளை தெரியப்படுத்தவேண்டும். சில அதிகாரிகளும், தங்களை மதத் தலைவர்கள் என்று சொல்லிக்கொள்பவர்களும் தங்களுக்குரிய பாணியிலேயே இதற்கு வியாக்கியானம் கொடுத்துக்கொண்டிருக்கின்றனர். இதற்காக சட்டத்தையும் ஒழுங்கையும் காப்பாற்றவேண்டிய பொலிஸார் அசமந்தப் போக்கை கடைப்பிடிப்பதால் நாட்டிலுள்ள அமைதிநிலை குலைந்து போகிறது.
யுத்தகாலத்தில் பலர் கொல்லப்பட்டுக்கொண்டிருந்த நிலையில் யாருமே பாதுகாக்காத புராதன இடங்களையும், புராதன சின்னங்களையும் முஸ்லிம்கள் பாதுகாத்திருக்கின்றனர். முஸ்லிம்கள் இல்லையென்றால், இவர்கள் போராவதாக சொல்கின்ற எத்தனையோ புராதன சின்னங்கள் அழிந்துபோயிருக்கும்.
பொலன்னறுவை மாவட்டத்திலுள்ள சின்னவில்பட்டி கிராமத்தில் சர்ச்சைக்குரிய தேரர் சென்று அது முஸ்லிம்களின் இடமில்லை, அவர்களை அங்கிருந்து வெளியேறுமாறு எச்சரித்துவிட்டுச் சென்றுள்ளார். நான் சிறுவனாக இருந்தகாலத்தில், ஓடை வழியே மாடு வண்டியில் சென்று கந்தூரி சாப்பாடு சாப்பிட்டுவிட்டு வந்திருக்கிறேன். அங்கு முஸ்லிம்களின் ஸியாரம் இருக்கிறது, கந்தூரி நடந்திருக்கிறது. அது முஸ்லிம்களின் இடம் என்பதற்கு வேறென்ன ஆதாரங்கள் வேண்டும்.
இந்த சந்தர்ப்பத்தில் இவ்வாறான இனவாத அட்டகாசங்கள் அரங்கேற்றப்படுவதன் பின்னணியில் பல மர்மங்கள் இருக்கின்றன. இந்த அரசாங்கத்தை குழப்பவேண்டுமென்ற சூழ்ச்சி இதிலிருப்பது ஆட்சியாளர்களுக்கு விளங்குகிறதோ, இல்லையோ தெரியாது. ஆனால், இவ்வாறான பல சம்பவங்களை கடந்துவந்த எங்களுக்கு, இந்த அட்டகாசங்களின் பின்னாலுள்ள உண்மையான நிகழ்ச்சிநிரல் புரியாமல் இல்லை.
அநியாயங்கள் நிகழ்த்தப்பட்டபோது பொறுமை காத்ததால் வளர்ந்த சமூகம்தான் முஸ்லிம்கள். நபியவர்களின் காலத்தில் அரங்கேற்றப்பட்ட அக்கிரமங்களின்போது உச்சக்கட்ட பொறுமை காத்திருக்காவிட்டால், இந்த சமூகம் ஐந்தில் ஒரு பங்கினராக வளர்ந்திருக்க முடியாது. அப்படியான சமூகத்தின்மீது ஒரு சிலரினால் மேற்கொள்ளப்படும் போக்கிரித்தனமான நடவடிக்கைக்கு அடிபணிந்து போகவேண்டியதோ அல்லது சரணாகதி நிலைக்கு போகவேண்டியதோ அவசியம் கிடையாது.
இருந்தாலும், மிகுந்த பக்குவத்துடன், தூரநோக்கோடு இந்த விடயங்களின் உண்மையான தாற்பரியத்தை புரிந்துகெண்டவர்களாக இதற்காக அரசின்மீது செலுத்துகின்ற அழுத்தத்தை எங்களால் முடியுமான எல்லா வகையிலும் நாங்கள் செய்துகொண்டிருக்கிறோம். சட்டத்தையும் ஒழுங்கையும் காப்பாற்றுகின்ற ஆட்சியாளர்கள் இதற்கு முடிவுகட்டவில்லையென்றால், இந்த நாட்டுக்கு சுபீட்சம் என்பது எட்டாக்கனியாகிவிடும்.
இன்றுள்ள பதற்றமான சூழ்நிலைகளில் அதனை கையாளும் விடயத்தில், இந்த எத்தனங்களில் ஈடுபட்டுக்கொண்டிருப்பவர்களுக்கு நாங்கள் எரிபொருள் கொடுப்பவர்களாக மாறிவிடக் கூடாது. முஸ்லிம் தலைமைகளை வைத்தே, பெரிய பாதிப்புகளை ஏற்படுத்திவிடலாம் என்ற நம்பிக்கையிலே சிலர் இந்த பித்தலாட்டங்களை செய்துகொண்டிருக்கின்றனர்.
இந்த அசம்பாவிதங்களில் ஈடுபடுபவர்கள் நேருக்குநேர் மோதும் கூட்டமல்ல. ஒளிந்துகொண்டு இரவுநேரங்களில் கடைகளை பற்றவைப்பதும், பள்ளிவாசல் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்துவதும்தான் இவர்களது சித்து விளையாட்டுக்களாக இருக்கிறது. இந்த நாசகார செயல்களை வெளிச்சத்தில் செய்யாமல் ஒளிந்துகொண்டு செய்வது அவர்களது துணிச்சல் இல்லையென்பதையே காட்டுகிறது. ஆனால், அரசாங்கத்துக்கு துணிச்சல் போதாத ஒரு துர்ப்பாக்கிய நிலையில்தான் சமூகம் இதனை விமர்சித்துக்கொண்டிருக்கிறது.
நாங்களும் அமைச்சரவையில் இதைப்பற்றி இறுக்கமாக பேசியபோது ஜனாதிபதியும் பிரதமரும் மாறி மாறி உத்தரவாதங்களை தந்தார்கள். அவை வெறும் வாக்குறுதிகளாக இருந்து விடாமல் மக்களுக்கு நிம்மதியை கொண்டுவருகின்ற, இந்த அட்டசாங்களை நிரந்தரமாக ஒழித்துக்கட்டுகின்ற சூழலை உருவாக்குகின்ற தார்மீகப் பொறுப்பை ஆட்சியாளர்கள் மேற்கொள்ள வேண்டும்.
இல்லாதுவிட்டால், பொறுமையிழந்து இளைஞர்களே தங்களது கைகளால் இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் நடவடிக்கைக்கு தூண்டப்படலாம் என்ற அபாயமான சூழலில் இருந்துகொண்டிருக்கிறோம். இந்த விடயங்கள் தொடர்பில் ஜம்மியத்துல் உலமா சபையுடன் தீவிரமாக ஆராய்ந்தோம். முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இதற்கு தீர்வுகாணும் நடவடிக்கைகளில் ஒருமித்து செயற்பட்டுக்கொண்டிருக்கிறோம்.
இந்தக் கட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக சொல்லப்படுகின்ற மிக மோசமான அடிப்படைற்ற குற்றச்சாட்டுகளையும், விமர்சனங்களையும் உண்மை நிலவரம் தெரியாமல், முஸ்லிம் காங்கிரஸின் நிலைப்பாடு தெரியாமல், முஸ்லிம் காங்கிரஸை விமர்சிப்பதையே தங்களது தொழிலாகக்கொண்ட சிலர் உளறிக் கொண்டிருக்கின்றார்கள்.
இவர்கள் இந்த பித்தலாட்டத்தில் ஈடுபடுகின்றவர்களுக்கு தீனிபோடுகின்ற வேலையை செய்கின்றனர். துமிழத்; தேசியக் கூட்டமைப்புக்கும் முஸ்லிம் காங்கிரஸுக்கு முடிச்சுப்போட்டு தெற்கிலே சிங்களவர்கள் மத்தியில் அர்த்தமில்லாத பீதியை உருவாக்குவதை ஒருகணம் சிந்திக்கவேண்டும் என்றார்.