பாறுக் ஷிஹான்-
யாழ்ப்பாணம் நகரப் பகுதிகளில் பொதுமக்களுக்கான போக்குவரத்து விதிமுறைகளிற்கான அறிவுறுத்தல் காட்சி பதாதைகள் பொலிஸாரினால் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இன்று(10) காலை யாழ் மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் சஞ்சீவ தர்மரட்ன தலைமையில் இப்பதாதைகள் அமைக்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
குறித்த காட்சி பதாதைகள் யாழ் நகரப்பகுதிகளின் பிரதான வீதிகள் மற்றும் ஏனைய புற நகரப்பகுதிகளிலும் யாழ் பொலிஸாரினால் காட்சிப்படுத்தப்பட்டு வருகின்றன.
இதன்போது யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக விபத்துக்கள் அதிகரிப்பதனால் உயிரிழப்புக்கள் ஏற்படுகின்றன.இதன் காரணமாக பொலிஸ் திணைக்களத்தின் ஊடாக போக்குவரத்து விதிமுறைகளை மக்கள் தெரிந்துகொள்வதற்காகவும் வீதிகளில் அவதானமாக செல்வதற்காகவும் மக்களின் பாதுகாப்பிற்காகவும்இஇவ்வாறான அறிவுறுத்தல்களை மக்களுக்கு வழங்கும் நோக்கில் இச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் சஞ்சீவ தர்மரட்ன தெரிவித்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் போக்குவரத்து விதி முறைகளை பின்பற்றாத இளைஞர்கள் செலுத்தி வந்த மோட்டார் சைக்கிள் மோதி உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் பண்டத்தரிப்பு பகுதியில் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.