உலகெங்கும் உழைக்கும் தொழிலாளர்களின் அவர்களது வாழ்வு வளம்பெறுவதற்கு நல்வாழ்த்துகளை தெரிவிப்பதாகவும், அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு உரிய முறையில் தீர்வு காணப்படவேண்டும் என்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் விடுத்துள்ள மேதின செய்தியில் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் ஹக்கீம் விடுத்துள்ள மேதின செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது;
இஸ்லாத்தைப் பொறுத்தவரை, தொழிலாளர் வர்க்கம் என ஒரு தரப்பினரை வேறுபடுத்திப் பார்ப்பதில்லை. அத்துடன், அவர்களது பிரச்சினைகளுக்கு அல்குர்ஆன், அல்ஹதீஸ் ஆகியவற்றில் தீர்வுகள் உள்ளடங்கியுள்ளன. அவர்களது தேவைகளும் அபிலாஷைகளும் சரியாக அணுகப்படுமானால், அவற்றை போராடிப் பெறவேண்டிய அவசியம் ஏற்படாது.
உழைப்பாளியின் வியர்வை உலர்வதற்கு முன்னர் அவருக்கான ஊதியத்தை கொடுத்துவிடுமாறு நபிகள் நாயகம் முஹம்மத் (ஸல்) அவர்கள் தெரிவித்துள்ளார்கள். அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அறிவித்துள்ள இந்த நபிமொழி திர்மிதி, இப்னுமாஜா ஆகியவற்றில் இடம்பெற்றுள்ளது கவனிக்கத்தக்கது.