கடந்த சில வாரங்களாக பெரும் பதற்றத்தை உருவாக்கி இருக்கும் மாயக்கல்லி மலை விவகாரம் குறித்து நிரந்தர தீர்வு வரவேண்டும் என்பதற்காக இந்த நாட்டின் அதி உச்ச அரசியல் தலைவரான ஜனாதிபதியுடன் மிகவும் பக்குவமாகவும் சுமுகமான முறையிலும் ஒரு பேச்சுவார்த்தையை நானும் எதிர்கட்சித் தலைவர் சம்பந்தன் ஐயாவும் இணைந்து நடத்தி இருக்கின்றோம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நகரத் திட்டமிடல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவுத்துள்ளார்.
நேற்று இறக்காமம் பகுதிக்கு விஜயம் விஜயம் மேற்கொண்டு இதுகுறித்து அம்மக்களுக்கு விளக்கமளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் அவர் அங்கு உரையாற்றுகையில்..
முதலில் இந்த நாட்டில் வாழும் முஸ்லிம்கள் என்ற வகையில் நாங்கள் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும். அதாவது இன்று வனபரிபாலனைத் திணைக்களம், வனவிலங்குத் தினைக்களம், தொல்பொருள் திணைக்களம் ஆகிய மூன்று திணைக்களங்களும் தாங்கள் சட்டரீதியாக செய்கின்ற நடிவடிக்கைகள் என்ற அடிப்படையில் மேற்கொள்கின்ற நடவடிக்கைகளின் பின்னணிகளைப் பார்த்தால் அவை யாவும் ஏனைய மாவட்டங்களோடு ஒப்பிடும் போது அம்பாறை மாவட்டத்தில் அதிகமாகவும் தீவிரமாகவும் நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்ற கேள்வி எழுகிறது.
குறிப்பாக யுத்த முடிவுக்குப் பின்னர் 2009 ஆம் ஆண்டிலிருந்து இந்த மூன்று திணைக்களங்களின் ஊடாகவும் மிகஅவசர அவசரமாக வெளியிடப்பட்டிருக்கின்ற வர்த்தமாணி அறிவித்தல்களின் ஒரு தொகுப்பை ஏனைய மாவட்டங்களில் இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள வர்த்தமாணி அறிவித்தல்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் இதன் உண்மை நிலவரம் தெரியும்.
அதே நேரம் இப்பிரச்சினையை விவேகமான வேகத்துடன் அனுகவேண்டும் என்ற நிலைப்பாட்டில் நாங்கள் இருக்கின்றோம்.
இதனடிப்படையிலேயே, கடந்த வெள்ளிக்கிழமை காலை பாராளுமன்றத்திலுள்ள ஜனாதிபதி அலுவலகத்தில் மாயக்கல்லி மலை விவகாரம் குறித்து, எங்களுடைய இயல்பு வாழ்க்கைக்கு பாதிப்பில்லாத, எங்களது கௌரவத்திற்கு குந்தகம் விளைவிக்காத, எங்களுடைய பிரதேச உரிமைகள் பறிபோகாத, கண்ணியமானதும் நிரந்தரமானதுமான ஒரு தீர்வு வரவேண்டும் என்பதற்காக இந்த நாட்டின் அதி உச்ச அரசியல் தலைவரான ஜனாதிபதியுடன் மிகவும் பக்குவமாகவும் சுமுகமான முறையிலும் ஒரு பேச்சுவார்த்தையை நானும் எதிர்கட்சித் தலைவர் சம்பந்தன் ஐயாவும் இணைந்து நடத்தி இருக்கின்றோம்.
குறிப்பிட்ட மலைப் பிரதேசத்தில் எந்தவிதமான புதிய கட்டட நிர்மாணங்களையும் அமைக்காதவாறு தான் உரிய நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி எங்களுக்கு நம்பிக்கை அளித்திருக்கிறார். இதில் நிறைய விடயங்கள் மூடி மறைக்கப்பட்டிருக்கிறது. இந்தப் பிரதேசத்தின் அரசியல்வாதிகள் யாரும் இல்லாத ஒரு இடத்தில் இதற்கான தீர்மானங்கள் எடுக்கப்பட்டிருக்கிறது. என்பது போன்ற விடயங்களை நாங்கள் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவந்திருக்கின்றோம்.
இதனடிப்படையில் இதனை பக்குவமாகவும் தூரநோக்கோடும் கையாண்டு ஜனாதிபதியிடமிருந்து இதற்கான நல்லதொரு தீர்வு வரும். இதனை நாம் நம்ப வேண்டும்.
இதற்கு மேலாக கிழக்கு மகாண சபையில் எங்களுடைய கட்சியின் சார்பாக நிறைவேற்றப்பட்டிருக்கின்ற பிரேரணையை அமுல்படுத்துகின்றவர்களாக அதன் கீழுள்ள அரச நிர்வாகிகள் செயற்பட வேண்டும் என்பதிலும் கடுமையான இறுக்கத்தை நாங்கள் கடைப்பிடிப்பதற்கான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக எதிர்கட்சித் தலைவர் சம்பந்தன் ஐயாவை கடந்த புதன்கிழமை இரவு சந்தித்தபோது இங்குள்ள தமிழ் மக்களின் குடிருப்புக்கள் பற்றியும் அதற்கான ஆபத்துக்களையும் கலந்துரையாடினோம்.
அப்போது அவர் மாகாண சபைகளுக்கான காணி அதிகாரங்களை நாங்கள் வைத்திருக்க வேண்டும் என்பதிலுள்ள நியாயங்கள் இவைகள்தான் எனவும் விளக்கியதோடு, இந்த நல்லாட்சியில் நாங்கள் இனப்பிரச்சினைக்கு ஒரு தீர்வு காணாது விட்டால் இனிவருகின்ற எந்த ஆட்சியிலும் இதற்கான தீர்வினை எட்ட முடியாது எனவும் சம்பந்தன் ஐயா ஆதங்கப்பட்டார். அவருடைய ஒத்துழைப்பு இந்தவிடயத்தில் எமக்குத் தொடர்ந்து இருக்க வேண்டிய தேவை இருக்கிறது என்றார்.
மேற்படி மக்கள் சந்திப்பில் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட், விளையாட்டுத் துறை பிரதி அமைச்சர்.
எச்.எம்.எம்.ஹரீஸ், சுகாதார பிரதி அமைச்சர் பைசால் காஷிம், பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஐ.எம்.மன்சூர், அலிஷாஹிர் மௌலானா, கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நஸீர், மேலும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான ஜவாத், ஆரிப் ஷம்சுடீன், தவம், ஐ.எல்.எம்.மாஹிர், ஷிப்லி பாறூக், கட்சியின் தவிசாளர் முழக்கம் மஜீத், செயலாளர் மன்சூர் ஏ. காதர் மற்றும் கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
எஸ்.எல். நிசார் (விடிவெள்ளி)