தொழில் வாய்ப்பை பெற்று தென் கொரியாவுக்கு சென்று மரணமடைந்த இலங்கையரின் இறுதிக் கிரியைகள் இடம்பெறவுள்ளது. பத்தேகம பொது மயானத்தில் குறித்த இளைஞரின் இறுதிக் கிரியைகள் இன்று இடம்பெறவுள்ளது. குறித்த இலங்கை இளைஞரின் சடலம் கடந்த 24ஆம் திகதி தென் கொரியாவில் உள்ள கங்கைக்கு அருகிலிருந்து மீட்கப்பட்டது.
2014ஆம் ஆண்டு கொரிய மொழிப் பரீட்சையில் தேர்ச்சி பெற்று தொழில் வாய்ப்பை பெற்று இவர் தென் கொரியாவுக்கு சென்றிருந்தார்.
தினமும் உறவினர்களை தொலைபேசியில் தொடர்புகொள்ளும் இளைஞன் கடந்த ஒரு வாரமாக உறவினர்களை தொடர்பு கொள்ளவில்லை என குடும்பத்தினர் தெரிவித்திருந்ததுடன், கடந்த 14 ஆம் திகதியே இளைஞன் கடைசியாக குடும்பத்தினருடன் தொலைபேசியில் உரையாடியுள்ளார்.
இந்த நிலையில் அவரது குடும்பத்தினர், வெளிநாட்டு வேலைவாய்பு பணியகத்தில் முறைப்பாடு பதிவு செய்திருந்தனர். இதனைத் தொடர்ந்து, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்பு பணியகம் மேற்கெணாண்ட விசாரணைகளை தொடர்ந்து இலங்கையரின் சடலம் மீட்கப்பட்டது. மேலும், கொரியாவில் உள்ள இலங்கை தூதரகத்தின் தலையீட்டினால் குறித்த இளைஞனின் சடலம் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.