வாக்குகளைப் பெற்ற சமூகத்துக்கு எதிராகவே சதி - ஹிஸ்புல்லாஹ் குற்றச்சாட்டு

ஏ.எச்.ஏ.ஹுஸைன்-
முஸ்லிம்களுக்கு தென்கிழக்கு அலகு வழங்கக் கூடாது என்பதில் தமிழர்கள் உறுதியாக இருக்க வேண்டும் என நல்லாட்சிக்கான தேசிய முன்னணி குறிப்பிட்டுள்ள கருத்தை வன்மையாகக் கண்டிப்பதாக மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் சனிக்கிழமை 06.05.2017 பிற்பகல் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். 

அவர் அங்கு மேலும் கூறியதாவது,

வடக்கு கிழக்கு இணைய வேண்டும் அது இயற்கையானது என நல்லாட்சிக்கான தேசிய முன்னணி குறிப்பிட்டுள்ளது. முடியுமானால் இக் கருத்துக்கு ஒரு நியாயமான காரணத்தை முன்வைக்குமாறு நான் சவால் விடுக்கின்றேன்.

இதேவேளை, முஸ்லிம் வாக்குகளைப் பெற்று சமூகத்துக்கு எதிரான துரோகச் செயல்களில் ஈடுபடும் வெளிச்சக்திகளால் இயக்கப்படும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி சமூகத்தின் உரிமைப்பற்றி பேசுவதற்கு எந்த அருகதையும் இல்லை. இணைந்த வடகிழக்கில் முஸ்லிம்கள் சொல்லொண்ணா துயரங்களை அனுபவித்தனர். ஆயிரக்கணக்கான உயிர்களையும், கோடிக்கணக்கான சொத்துக்களையும் இழந்தனர்.

அத்துடன், இரத்தம் சிந்தி, பள்ளிவாசல்களில் நூற்றுக்கணக்கானவர்களை கொன்றுகுவித்த கொடிய சம்பங்களை அடுத்தே வடக்கு கிழக்கு பிரிக்கப்பட்டது. கடந்த ஆட்சிக் காலத்தில் உயர் நீதிமன்ற தீர்ப்புக்கமைய இணைந்த வடகிழக்கு பிரிக்கப்பட்டு இன்று நாங்கள் நிம்மதியாக தலை நிமிர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

இந்நிலையில், இனப்பிரச்சினைக்குத் தீர்வாக மீண்டும் வடக்கு, கிழக்கு இணைக்கப்பட வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு போராடி வருகின்றது. இக்கோரிக்கையை நிறைவேற்றுமாறு சர்வதேசத்தின் ஆதரவோடு டயஸ்போரா இலங்கை அரசை வலியுறுத்தி வருகின்றது.

பிரிக்கப்பட்ட வட,கிழக்கை மீண்டும் இணைப்பதற்கு நாங்கள் ஒருபோதும் இடமளிக்க மாட்டோம் என்பதை தெளிவாகவும்- உறுதியாகவும் சொல்லி வைக்க விரும்புகின்றோம். முஸ்லிம்களுக்கென்று தென்கிழக்கு அலகு வேண்டும் என்ற கோரிக்கையை வென்றெடுப்பதற்காகவே நாங்கள் அரசியலுக்கு வந்தோம்.

1988ஆம் ஆண்டு முதலாவது மாகாண சபைத் தேர்தலில் நாம் போட்டியிட்ட போது, மறைந்த மாமனிதர் அஷ்ரப் தலைமையில் நாங்கள் போகும் இடமெல்லாம் 'இணைந்த வடகிழக்கில் முஸ்லிம்களுக்கு என தனி மாகாணம் உருவாக்கப்பட வேண்டும். அதனை வென்றெடுப்பதற்கு அனைவரும் ஒன்றுபட வேண்டும்' என்றே குறிப்பிட்டோம். அன்று முதல் இன்று வரை அதற்கான போராட்டங்களை நாங்கள் முன்னெடுக்கிறோம். 

இவ்வாறான நிலையில், 'முஸ்லிம்களுக்கு தென்கிழக்கு அலகு இருக்கக்கூடாது என்பதில் தமிழர்கள் உறுதியாக இருக்க வேண்டும்' என்று முஸ்லிம் வாக்குளைப் பெற்ற நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் மாகாண சபை உறுப்பினர் ஒருவர் அண்மையில் குறிப்பிட்டுள்ளார்.

நல்லாட்சிக்கான தேசிய முன்னணி முஸ்லிம் வாக்குகளைப் பெற்றே கட்சி நடத்துகின்றது. அதன் மாகாண சபை உறுப்பினர் ஒருவர் முஸ்லிம்களுக்கு தனி மாகாணம் வழங்கக் கூடாது என்பதில் தமிழர்கள் உறுதியாக இருக்க வேண்டும் என முஸ்லிம் சமூகத்துக்கு எதிரான அறிக்கையொன்றினை விட்டுள்ளமை மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.

குறித்த அறிக்கையில், 'வடக்கும் கிழக்கும் இணைய வேண்டும் அது இயற்கையானது. அது எக்காலத்திலும் பிரியக் கூடாது. சம்பந்தன் வடக்கும், கிழக்கை பாதுகாக்க வேண்டுமாக இருந்தால், வட,கிழக்கு இணைந்திருக்க வேண்டும்' என சம்பந்தன் ஐயாவுக்கே அவர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

வரலாற்றில் வடகிழக்கு எப்போதும் இணைந்திருக்கவில்லை. முஸ்லிம்களுக்கு என பேசுவதற்கு பலமான சக்தியொன்று இல்லாத நிலையில் பலாத்காரமாக இந்தியாவைக் கொண்டு இரவோடு இரவாக ஜே.ஆர். ஜயவர்தனவும் - ராஜீவ் காந்தியும் செய்து கொண்ட ஒப்பந்தத்துக்கு அமையவே வடக்கு கிழக்கு இணைக்கப்பட்டது.

பிரிக்கப்பட்ட கிழக்கு மாகாணத்தில் இன்று நாங்கள் நிம்மதியாக தனித்துவமான வாழ்ந்து வருகின்றோம். அரசியல் அதிகாரத்தைப் பெற்றுள்ளோம். மாகாணத்தில் முஸ்லிம் முதலமைச்சர் ஒருவர் உள்ளார். மாகாண முஸ்லிம் அமைச்சர்கள் இருக்கிறார்கள்.

கிழக்கு மாகாணத்தில் மாத்திரமே முஸ்லிம்களுக்கு இவ்வாறான அதிகாரங்கள் இருக்கின்றன. ஏனைய 8 மாகாணங்களில் முஸ்லிம் மாகாண அமைச்சர் ஒருவரைப் பெற்றுக்கொள்வதே சாத்தியமற்ற ஒன்றாகவுள்ளது.

இவ்வாறு, கிழக்கில் அதிகாரத்துடன் தனித்துவமாக வாழும் முஸ்லிம்களை, வடகிழக்கு இணைப்பின் ஊடாக சிறுபான்மையினராக்கி அடிமைப்படுத்தி தலைகுனிய வைப்பதா ந.தே.மு. எதிர்பார்ப்பு?

இந்த ந.தே.முவின் நோக்கம் என்ன? இவர்களை இயக்குவது யார்? யாருடைய அடிமைகள் இவர்கள்? யார் கூறுவதை இவர்கள் பேசுகிறார்கள்? என்பன குறித்து மக்கள் தெளிவாக - அவதானமாக இருக்க வேண்டும்.

முஸ்லிம் வாக்குகளைப் பெற்று அரசியல் நடத்தும் ந.தே.மு., இந்த கருத்தின் ஊடாக முஸ்லிம் சமூகத்துக்கு மிகப்பெரிய துரோகத்தை இழைத்துள்ளது. இனி இவர்களுக்கு முஸ்லிம் சமூகத்தின் உரிமைப் பற்றி பேசுவதற்கு எந்த அருகதையும் - அதிகாரமும் இல்லை.

ந.தே.மு. பகிரங்கமாக ஆதரவளிக்கின்ற ஒவ்வொரு முஸ்லிம் சகோதரர்களும், வாக்களித்தவர்களும் சற்று சிந்திக்க வேண்டும். எதிர்காலத்தில் இவ்வாறான சக்திகளை இந்த மண்ணிலிருந்து அப்புறப்படுத்த வேண்டும்.

இவ்வாறான சக்திகள் முஸ்லிம்களின் பிரச்சினைகள் குறித்து பேசுவதை தவிர்ந்துகொள்ள வேண்டும். ஏன் என்றால், இந்த சமூகத்தின் வாக்குகளைப் பெற்று சமூகத்துக்கு எதிராக செயற்படும் துரோகிகள் இவர்கள்.

நாங்கள் ஒற்றுமைப்பட வேண்டும். அதன் ஊடகாவே எமது சமூகத்தின் பாதுகாப்பு தங்கியுள்ளது. அரசாங்கங்களை மாற்றுவதன் ஊடாக மாத்திரம் எமது பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது. நாங்கள் ஒன்றுபட்டு அதிகாரமுள்ள சமூகமாக செயற்பட்டால் மாத்திரமே நாங்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வினைப் பெற்றுக்கொள்ள முடியும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -