பாதுகாப்பு அமைச்சின் முன்னேற்ற மீளாய்வு கூட்டம் பாதுகாப்பு அமைச்சரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று முற்பகல் பாதுகாப்பு அமைச்சு கேட்போர்கூடத்தில் நடைபெற்றது. சிவில் பாதுகாப்பு திணைக்களம், மாணவர் படையணி, தேசிய பாதுகாப்பு கல்வி நிறுவனம், ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம், ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையம், கரையோர பாதுகாப்பு திணைக்களம், ரக்ன லங்கா நிறுவனம் உள்ளிட்ட அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களின் செயற்பாடுகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் தொடர்பில் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது.
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன, பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சி மற்றும் பாதுகாப்பு படைகளின் பிரதானி உள்ளிட்ட முப்படைத் தளபதிகளும் தொடர்புடைய நிறுவன தலைவர்களும் இக்கலந்துரையாடலில் பங்குபற்றியிருந்தனர்.
மேலும் சாலாவ சம்பவத்துக்குரிய இழப்பீடுகளை வழங்குதல் தொடர்பான முன்னேற்றம் பற்றி இதன்போது ஜனாதிபதியினால் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. பெலவத்த, அக்குரேகொட இராணுவ தலைமையக நிர்மாணம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டபோது, அடுத்த ஆண்டு அத்தலைமையகத்தை திறந்து வைக்க முடியுமென தெரிவிக்கப்பட்டது. சாலாவ, சாமசரகந்த, மீதொட்டமுல்ல சம்பவங்களில் மீட்புபணி மற்றும் நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபட்ட முப்படையினர் மற்றும் சிவில் பாதுகாப்பு படையினரை பாராட்டுவது தொடர்பாக கலந்துரையாடப்பட்டபோது, அவர்களது சேவையைப் பாராட்டி, சேவைப் பாராட்டுக் கடிதத்தை அவர்களது சுய விபரக்கோவையில் இணைப்பதென முன்மொழியப்பட்டது.
மாணவர் படையணியை நூற்றுக்கு ஐம்பது சத வீதத்தால் உயர்த்துவது தொடர்பில் மாணவர் படையணிக்கு தேவையான வசதிகளையும் நிதி ஒதுக்கீடுகளையும் வழங்குதல் பற்றி கலந்துரையாடப்பட்டது. படையினருக்காக காணி வழங்குதல் தொடர்பாக இதன்போது கலந்துரையாடப்பட்டதுடன், இன்று வரை ஒன்பதாயிரம் காணித்துண்டுகள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. தேவைக்கேற்ப மகாவலி பிரதேசங்களில் உள்ள காணிகளையும் அதற்காக வழங்க முடியுமென ஜனாதிபதி குறிப்பிட்டார்.
ரக்ன லங்கா நிறுவனத்தை கலைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதுடன், அந்நிறுவனத்தில் பணியாற்றும் ஓய்வுபெற்ற படையினரின் நலன்களுக்காக அந்த நிறுவனத்தை தொடர்ந்தும் நடத்துவது தொடர்பில் முன்மொழிவுகளை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.(வீ)