பேரீச்சம்பழத்திற்கு புதிதாக எந்த வரியும் கிடையாது - முஜீபுர் றஹ்மான்

பேரீச்சம் பழத்தின் வரியை அரசாங்கம் அதிகரித்துள்ளதாக ஜேவிபி பாராளுமன்ற அங்கத்தவர் சுனில் ஹந்துன்நெத்தி அண்மையில் பாராளுமன்றத்தில் கருத்து வெளியிட்டிருந்தார். பேரீச்சம் பழத்தின் மீதான வரி தொடர்பாக உண்மைக்கு புறம்பாக இவர் வெளியிட்டுள்ள கருத்து நல்லாட்சிக்கு வாக்களித்த முஸ்லிம்கள் மத்தியில் சலசலப்பையும், சர்ச்சையையும், சந்தேகத்தையும் கிளப்பியிருக்கிறது. அரசாங்கம் பேரீச்சம் பழத்தின் மீது புதிதாக 60 ரூபாய் வரி அறவிடப்போவதாக தவறான பொய்யான ஒரு தகவலை சுனில் ஹந்துன்நெத்தி வெளியிட்டு மக்களை தவறாக வழிநடாத்த முயற்சி மேற்கொண்டுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் றஹ்மான் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே முஜீபுர் றஹ்மான் மேற்கண்டவாறு தெரிவித்தள்ளார். 

அவர் தனது அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது,
கடந்த 2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வரை பேரீச்சம் பழத்தின் மீதான இறக்குமதி வரி அதன் பல தரப்பட்ட தரத்துக்கேற்ப வித்தியாசமாக அறவிடப்பட்டிருந்தது. அன்று ஆகக் குறைந்த தரத்தினையுடைய பேரீச்சம் பழம் கிலோ ஒன்றுக்கான வரி 130 ரூபாவாகவே அறவிடப்பட்டது. 

கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் மாதம் வரவு செலவு திட்டத்தின் போது இந்த வரி 130 ரூபாயிலிருந்து 60 ரூபாவாக குறைக்கப்பட்டது. இது தொடர்பான 2007 ஆம் ஆண்டின் 48ம் இலக்க, விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் கீழ் இந்த வரி அறிவித்தல் 6 மாத காலத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும். 

2017ம் ஆண்டு மே மாதம் வரையோடு நிறைவு பெறும் இந்த வரியின் காலக்கெடுவை அடுத்த ஆறு மாதங்களுக்கு நீடிக்கும் அங்கீகாரத்தைப் பெறும் வகையிலேயே கடந்த வாரம் இது பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டது. சுருக்கமாக சொல்வதென்றால் குறைக்கப்பட்ட மேற்படி 60 ரூபாய் வரியை அடுத்த ஆறு மாதங்களுக்கு நீடிக்கும் நடவடிக்கையாகவே அன்று பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டது.

அது தவிர பேரீச்சம் பழம் மீதான எவ்வித புதிய வரிகளோ அதிகரிப்புகளோ அறிவிக்கப்படாத நிலையில் இந்த உண்மையை மூடி மறைத்த ஜேவிபி பாராளுமன்ற அங்கத்தவர் ஹந்துன்நெத்தி முஸ்லிம்களை திசை திருப்பும் நோக்கத்தோடு முற்றிலும் பொய்யான தகவலை வழங்கி நாட்டு மக்களை தவறான பக்கம் திசை திருப்பும் மோசமான அரசியலை மேற்கொண்டுள்ளார் என்றும் முஜீபுர் றஹ்மான் கூறியுள்ளார்.

புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு இலவசமாக பகிர்ந்தளிக்கும் நோக்கில் வெளிநாடுகளிலிலிருந்து அன்பளிப்பாகக் கிடைக்கும் பேரீச்சம்; பழங்களுக்குரிய இறக்குமதி வரியை கூட அரசாங்கம் முற்றாக நீக்கியிருப்பதுடன், அதற்கான வரியை அரசாங்கமே இதுவரையிலும் செலுத்தியும் வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
பொய் வதந்தி பரப்பி மக்களைக் குழப்பும் ஜேவிபியின் இந்த நிலைப்பாடு நல்லாட்சி அரசாங்கத்தின் மீதான சிறுபான்மை மக்களின் நம்பிக்கையை சீர்குலைக்கும் நடவடிக்கையாகும். 

முஸ்லிம்கள் மீதான அதீத அக்கறையில் இருப்பது போன்ற ஒரு போலியான நிலையை ஜேவிபி காட்டிக்கொள்ள முயற்சி செய்கிறது. தோல்வியடைந்த அரசியல் சக்திகளின் பின்னணியில் முஸ்லிம்களுக்கெதிராக இனவாத சக்திகளின் செயற்பாடுகள் இடம்பெற்றுவரும் நிலையில் அவற்றிற்கு எதிராக வாய் திறக்காமல் இருக்கும் ஜேவிபி பேரிச்சம் பழ விவகாரத்தை மட்டும் பொய்யாக பெரிதுபடுத்தி; காட்டுவதன் மூலம் நல்லாட்சியின் மீது முஸ்லிம்களின் அதிருப்தியை ஏற்படுத்துவதற்கு முயற்சி செய்துள்ளது.

சிறுபான்மை மக்களுக்கு ஆதரவாக குரல்கொடுப்பதாக காட்டிக்கொள்ளும் ஜேவிபி, வில்பத்து விவகாரம், இறக்காமத்தில் முஸ்லிம்களின் காணி மீதான அத்துமீறல், சிறுபான்மை மக்கள் வாழும் பிரதேசங்களில் இடம் பெறும் மத ரீதியலான அடக்குமுறை போன்ற விவகாரங்களில் மௌனம் சாதித்துக்கொண்டு முஸ்லிம்களின் உரிமைகள் பற்றி கதையளப்பது நல்லாட்சி அரசாங்கத்திற்கு அசௌகரியத்தை ஏற்படுத்தவும் தமது சுயநல அரசியல் நோக்கங்களை குறுக்கு வழியில் அடையும் நோக்கத்திலுமேயாகும் என்றும் முஜீபுர் றஹ்மான் கூறியுள்ளார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -