அஸீம் கிலாப்தீன்-
பொலநறுவ மாவட்டத்திலுள்ள வெலிக்கந்த பிரதேச செயலகப் பிரிவின் கீழ் வரும் சேனபுர கிராமத்தில் முஸ்லிம் எய்ட் இனால் அமைக்கப்பட்ட தாய்-சேய் நலன் பேணும் கிளினிக் நிலையம ( Meternal & Child Health Care Clinic Cetre) ஏப்ரல் 28ம் திகதி வெள்ளிக்கிழமை காலை 9:30 மணிக்கு கிராம மக்களிடம் கைளிக்கப்பட்டது. போசாக்கு மற்றும் உள்நாட்டு மருத்துவத்துறை பிரதி அமைச்சர் கௌரவ பைசல் காசீம் அவர்கள் முஸ்லிம் எய்ட் சிறிலங்கா பணிப்பாளர் ஜனாப் பைசர்கான் அவர்களின் முன்னிலையில் கையளிக்கும் வைபவம் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.
பொலநறுவ மாவட்ட உதவி அரச அதிபர், பிரதேச செயலர், பணிப்பாளர் RDHS எம்ஓஎச், வடமத்திய மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் சமய, சமூகத் தலைவர்கள் பலரும் முஸ்லிம் எய்ட் பங்காளர் அமைப்பான CDS உறுப்பினர்களும் இந்நிகழ்வில் பங்கேற்றனர். சேனபுர, தீவுச் சேனை மற்றும் கட்டுவன்வில், சன்துன்பிட்டி, அத்துகல சேர்ந்த மிகவும் பின்தங்கிய கிராமங்களில் வாழும் மிகவும் 2000 இற்கு மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த தாய்மாரும் பிள்ளைகளும் பயன்பெறும் நோக்குடன் இத் தாய் சேய் நலன் பேணும் கிளினிக் நிலையம் நிறுவப்பட்டுள்ளது.
முஸ்லிம் எய்ட் சிறிலங்கா பொலநறுவ மாவட்டத்தில் பல்வேறு செயற்பாடுகளை கடந்த காலங்களில் மேற்கொண்டுள்ளது. பிரதானமாக, குடிநீர் பிரச்சனையுள்ள குடாபொகுன கிராமத்தில் 02 பொதுக்கிணறுகள், மெதிரிகிரிய பள்ளித்திடல், சுங்காவில் நெலும்புர ஆகிய கிராமங்களில் இரண்டு பாலர் பாடசாலைகள் என்பவற்றை அமைத்துள்ளதுடன், வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பணிகளை முஸ்லிம் எய்ட் மேற்கொண்டது. மேலும், CDS அமைப்பினூடாக விஞ்ஞான உயிர்கல்வியினை மேம்படுத்தும் பணியில் முஸ்லிம் எய்ட் தற்போது ஈடுபட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.